பொருளடக்கம் 65 / 300
ஒருதலையான் இன்னாது
அச்சுப் பக்கம் 147–148 · ஸ்கேன் 164–165 · அதிகாரம் 120 (தனிப்படர்மிகுதி) — குறள் 1196
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Large colour illustration occupying most of the upper page: an idealized woman above two men facing one another beside a decorated ceremonial arch.
“பரிசுப் போட்டியொன்றை அறிவித்து, இந்தப் புவியிலுள்ள பெண்கள் எல்லாம் அதில் கலந்து கொள்வர் எனினும் அந்தப் போட்டியில் அவள்தான் வெற்றி பெறுவாள். அழகில், அறிவில், பண்பில், நடையில், உடையில் அனைத்திலுமே ஒப்பற்றவள் அவள். மான் என்றோ, மயில் என்றோ, மாடப்புறா என்றோ, மனங்கவர் கிள்ளை என்றோ, அவளை நான் வர்ணிக்கமாட்டேன். அவளுடன் ஒப்பிடுதற்குரிய எதுவும் யாரும் இந்த உலகில் இல்லை என்பதே என் கணிப்பு! அவளைத்தான் நான் விரும்புகிறேன்; நினைத்து உருகுகிறேன், நெஞ்சில் வைத்து ஆராதனை செய்கிறேன்.”
இப்படி என் நண்பன் பேசிக்கொண்டே யிருந்தான், என்னிடம்! தனிமையில்தான்.
“அதிருக்கட்டும், அவள் உன்னைக் காதலிக்கிறாளா?” என்று கேட்டேன்.
“அது தெரியாது எனக்கு! அவள் உள்ளத்தை அறிந்துகொள்ளும் முயற்சியையே நான் இன்னும் மேற்கொள்ளவில்லை. ஆனால், அவள் என் கனவில் வந்து சதிராடுகிறாள்; நினைவில் நின்று களிப்பூட்டுகிறாள். என் இமைக் கதவுகளை மூடினால், என் எதிரே வந்து நின்று புன்னகை புரிகிறாள். எப்படித்தான் அவளை என்னுடையவளாக ஆக்கிக் கொள்வதென்றே புரியவில்லை நண்பா!” என்று ஏக்கப் பெருமூச்சு விட்டான் அவன்.
“சரி! சரி! காவடி எடு!” என்றேன் நான்!
“காவடியா? நானா? காதலி வீட்டுக்குக் காவடி எடுத்துச் சென்றால், தெருவில் உள்ளோர் கேலி பேசிட மாட்டாரோ? தெக்கலி கொட்டிச் சிரிப்பரே! என்னப்பா, என்னைக் காவடி எடுக்கச் சொல்கிறாய்?” என்று நண்பன் முகத்தைச் சுருக்கிக்கொண்டு கேட்டான்.
“இதோ! இங்கேயிருக்கிறதே; இந்தக் காவடியை என்னருகே எடுத்துவா” என்றேன்.
(பழனிக்குப் பிரார்த்தனை செலுத்துவதற்காக என் வீட்டுப் பழங் கொள்கையினர் தயாரித்து வைத்திருந்த பார்காவடி அது!)
காவடியை, நண்பன் அருகே கொண்டு வந்ததும் நான் அவனுக்கு விளக்கமளிக்கத் தொடங்கினேன்:
“நண்பா! காதலில் வெற்றிகிட்ட வேண்டுமெனில், காவடி எடுக்க வேண்டுமென்று வள்ளுவரே சொல்லியிருக்கிறார்!”
“என்ன? வள்ளுவர் காவடி எடுக்கச் சொன்னாரா?”
“ஆமாம்! காவடியை எடுத்து, அதனை உற்றுப் பார்க்கச் சொல்லியிருக்கிறார்!”
“எனப்பா?”
“கேளப்பா, அவர் கூறும் மொழி! அதனைக் கூறுகிறேன் கேள்! காதல் ஓர் ஆணுக்கோ அல்லது ஒரு பெண்ணுக்கோ ஒரு பக்கமாக இருப்பது துன்பம் தரக்கூடியது. அது எப்படியிருக்க வேண்டுமென்றால், இதோ இந்த காவடியில் ‘பாரம்’ இரண்டு பக்கங்களிலும் சமமாக இருப்பதுபோல் இரு பக்கமும் அந்தக் காதல் இருந்திடல் வேண்டும். ஒரு தலைக் காதல் இன்பம் தாராது! துன்பம் பயக்கும்! இருவிடை முகிழ்க்கும் காதலே இன்பம் பொழியவல்லது!”
நண்பன் வியப்புடன் கேட்டான், “அது என்ன குறள்” என்று! அந்தக் குறள் இதுதான்:-
ஒருதலையான் இன்னாது காமங்காப் போல இருதலை யானும் இனிது.
அதிகாரம் - 120 — தனிப்படர்மிகுதி; பாடல் - 1196
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்