பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 64 / 300

துன்னியார் குற்றமும்

அச்சுப் பக்கம் 145146 · ஸ்கேன் 162163 · அதிகாரம் 19 (புறங்கூறாமை) — குறள் 188

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour illustration above the prose showing two men conversing in the foreground while a third man walks away in the background.

“மலையா! நமது ஊர்க் கூனனும் குள்ளனும் எப்போது பார்த்தாலும் உன்னைப் பற்றியே இழித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேற்றிரவு பக்கத்துச் சிற்றூரில் மணவிழா விருந்தொன்றுக்குப் போயிருந்தேன். அங்கே இந்தக் கூனனும் குள்ளனும் வந்திருந்தார்கள். விருந்துக்கிடையே உன்னைப் பற்றிய பேச்சு வந்தது. அந்த இருவரும் மாறிமாறி உன்னைத் தாக்கிப் பேசிக்கொண்டேயிருந்தார்கள்.”

தன் நண்பன் மலையனிடம் சிலம்பன் இந்தச் செய்தியைக் கூறும்போது, மலையனின் மற்றொரு நண்பன் கலிங்கனும் அருகே இருந்தான். கலிங்கன், கண்களில் கனல் பறக்கச் சிலம்பனைப் பார்த்துக் கேட்டான்!

“அவர்கள் மலையனை இழிவுபடுத்திப் பேசும்போது நீ கேட்டுக்கொண்டா இருந்தாய்?”

சிலம்பன் விடையளித்தான்: “கேட்டுக் கொண்டிராமல் என்ன செய்வது; அவனிடம் போராட்டமா நடத்த முடியும்? கூனன் ஒரு அறிவிலி! குள்ளன் ஒரு தற்குறி! இரண்டு பேருக்கும் வாய் கம்பு பேசத்தான் தெரியும். அவர்களோடு பேசினால் நமது நேரம்தான் கெடும்.”

“அட! அவர்களோடு சண்டை வேண்டாம் அய்யா! அவர்களின் அவதூறுக் கற்பனைகளை விருந்துக்கு வந்திருந்தவர்களில் சிலராவது நம்பியிருக்கக் கூடுமல்லவா?

அவர்களுக்காகவாவது உண்மை நிலையை விளக்கிச் சொல்லி, மலையன்மீது வேண்டுமென்றே மாசு கற்பிக்கிறவர்களின் வேடத்தைக் கலைத்திருக்கலாம் அல்லவா?”

இப்படிக் கலிங்கன் கேட்டதும் சிலம்பன், பதில் ஏதும் அளிக்காமல் தன் பேச்சை வேறு திசைக்குத் திருப்பினான்.

“மலையன்மீது எனக்குப் பற்றோ பாசமோ இல்லாததுபோலவும் யாரோ சிலருக்குத்தான் மலையனிடம் உண்மையான அன்பு இருப்பதுபோலவும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் மலையனை என் உயிரினும் மேலாக நேசிக்கிறேன் என்பது மற்றவருக்குத் தெரியாவிட்டாலும் மலையனுக்குத் தெரியும். மலையன் இல்லையேல் இந்த ஊரே பாழாகியிருக்கும் என்பதை நான் அறியாதவனல்ல. மலையா! எனக்கு வேறு ஓர் அவசரமான பணி இருக்கிறது. பிறகு வந்து பார்க்கிறேன்.”

எனக் கூறியவாறு, சிலம்பன் அவசரப்பட்டு அகன்றான். சிலம்பன் சென்றவுடன் கலிங்கன், மலையனைப் பார்த்துக் கேட்டான்:

“ஆமாம்! இந்தச் சிலம்பன் எப்போது பார்த்தாலும் நமது ஊர்க் கூனனையும் குள்ளனையும் பற்றியே உன்னிடம் சேதிகொண்டு வருகிறானே, என்ன காரணம்? அவர்கள் ஏதாவது உன்னைப்பற்றிக் குற்றமாகப் பேசினால், இவன் அந்த இடத்திலே உள்ளவர்களுக்கு உண்மையை விளக்கிச் சொல்வதுதானே சரி! அதை விடுத்து, எப்போது பார்த்தாலும் கூனனைப் பற்றியும் குள்ளனைப் பற்றியும் உன்னிடம் எதற்காகக் குறைகூறித் திரிய வேண்டும்?”

கலிங்கனின் கேள்விக்கு, மலையன் பொறுமையுடன் பதில் சொன்னான்:

“கலிங்கா! என் நண்பன் சிலம்பனின் இயல்பை நீ உணரமாட்டாய்! நான் அவன் இயல்பைச் சரியாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறேன். அயலார்களான குள்ளன், கூனன் இருவரைப்பற்றியும் சிலம்பன் நம்மிடம் குற்றம் குறை சொல்கிறானே; அவற்றில் பாதிக்குமேல் நான் நம்புவதில்லை. ஏனெனில், சிலம்பன், நெருங்கிப் பழகுகிற உயிர் நண்பனான என்னைப்பற்றியே புறங்கூறித் திரிகிறான் என நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நண்பனே இவ்வாறு புறங்கூறும் இயல்பு படைத்தவனாயிருக்கும்போது, அயலார் நம்மைப்பற்றிப் பேசுவதுகுறித்து நான் என்ன சொல்ல இருக்கிறது? அதுமட்டுமல்ல, கலிங்கா! கூனனும் குள்ளனும் அப்படிப் பேசினார்கள் என்பதைத் தான் எப்படி நம்ப முடியும்? இவனே ஒருவேளை, என்னைப் பற்றிப் பேசி புறங்கூறி விட்டு, அவர்களைப் பற்றி என்னிடம் பழி போடலாமல்லவா? நெருங்கிய நண்பர்களைப் பற்றியே குறை கண்டு புறங்கூறித் தூற்றுகின்ற இயல்புடையவர்கள், அயலார்களைப் பற்றி என்ன சொல்வார்கள் என்பதை நாமே சிந்தித்து ஒரு முடிவுக்கு வர வேண்டுமல்லவா? இதைத்தான் வள்ளுவர், வியப்புக் கலந்த வினாவாக எழுப்புகிறார்; இதோ கேள், அந்தக் குறள்!”

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு.

மலையன், அமைதி தவழும் முகத்துடன் அளித்த இந்த விளக்கத்தைக் கேட்டுக் கலிங்கனின் கண்களில் நீர் துளிர்த்தது. அது, அவர்களின் நட்பின் ஆழத்தை உணர்த்தியது. புறங்கூறும் நண்பர்களையும் மலையன் எப்படிப் பொறுத்துக் கொள்கிறான் என்ற உண்மையையும் வெளிப்படுத்தியது.

அதிகாரம் - 19 — புறங்கூறாமை; பாடல் - 188

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்