பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 63 / 300

காலாழ் களரின்

அச்சுப் பக்கம் 143144 · ஸ்கேன் 160161 · அதிகாரம் 50 (இடனறிதல்) — குறள் 500

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour illustration above the prose showing an elephant with a fallen warrior at the front while a jackal attacks the elephant from behind.

யானை ஒன்று, தண்ணீர் குடிப்பதற்காக ஆற்றிலே இறங்குகிறது. அப்போது அந்த யானையை முதலையொன்று பிடித்துக் கொள்கிறது. யானை உயிர் தப்ப முடியாமல் தவிக்கிறது; அலறுகிறது. கடைசியாக அந்த யானை, “நாராயணா! நாராயணா!” என்று கத்துகிறது; உடனே மகாவிஷ்ணுவான நாராயணன் தோன்றி, அந்த யானையை முதலையிடமிருந்து விடுவிக்கிறான். இதைத்தான் புராணிகள் ‘கஜேந்திர மோட்சம்’ என்று கதைப்பார்கள்.

மலை போன்ற யானையும் நீரில் கால் வைத்துவிட்டால், முதலையிடம் சிக்கிவிட வேண்டியிருக்கிறது என்பதை விளக்கவும் அதுபோலவே தரையிலே பலமில்லாத முதலை தண்ணீரில் இருந்தால் யானையை இழுக்கக்கூடிய பலம் பெறுவதாகச் சொல்லப்படுவதை எடுத்துக்காட்டவும் நிகழ்ச்சிச் சித்திரம் தீட்டிய புராணிக் கற்பனையாளன், இறுதியில் அந்த யானையை அபயக்குரல் எழுப்ப வைத்து, அனந்த சயனனையும் அங்கே வரவழைத்து - கஜேந்திர மோட்சம் என்ற கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறான்.

தண்ணீரில் இறங்கி, முதலை வாயில் காலைக் கொடுத்து, பரந்தாமனை அழைத்துப் பரகதி அடைந்த யானை, புராணங்களுடைய யானை!

இதோ, இன்னொரு யானையை நமது வள்ளுவப் பெருந்தகையார் அறிமுகப்படுத்துகிறார், பாருங்கள்.

வேல் கொண்டு வீரன் வருகிறான். அந்த வீரனை யானை எதிர்க்கிறது. வீரனும் யானையை வெல்லத் தீரமாகப் போரிடுகிறான். தமிழனல்லவா? முதுகு காட்டாத மரபு அல்லவா?

நிமிர்ந்த நெஞ்சோடும் தூக்கிய வேலோடும் அவன் யானைமீது பாயும் போது, யானையும் தந்திரமாகத் தன் தந்தங்களை நீட்டி, அந்த வீரனின் வயிற்றைக் குத்தி அவனை மேலே தூக்கிவிடுகிறது. மரண முகப்பிலே அந்த வேலேந்தி, வேதனைக் குரல் எழுப்புகிறான். அதுவும் வீரத்தோடு கலந்துவரும் குரல்தான். வீரனைக் குத்திய வேகத்திலே, அந்த வேழம் வெற்றி நடைபோட்டு ஆவேசமாகவும் ஆத்திரமாகவும் - அங்குமிங்கும் ஓடுகிறது. அப்படி ஓடும்போது, ஒரு பாறைக்குப் பக்கத்திலே தேங்கி நிற்கும் சேறு நிரம்பிய குட்டையிலே காலை வைத்துவிடுகிறது. காலை எடுக்க முடியவில்லை. கனமான மிருகம் யானை. அதன் கனம் பூமியை நோக்கி இறங்குகிறதே தவிர, மேலெழுந்து கரையேற யானைக்கு உதவி செய்யும் அளவின் தாய் இல்லை. யானை தவிக்கிறது. அப்போது ஒரு வேடிக்கை நடக்கிறது - என்ன அந்த வேடிக்கை?

ஒரு நரி, யானையின் நிலையைப் பார்த்து விடுகிறது. இதுதான் சமயமென்று, அந்த நரி யானையின் மீது பாய்ந்து தன் ஆகாரத்திற்கு வழிதேடுகிறது. யானையின் உடலெங்கும் நரி, தன் பற்களாலும் நகங்களாலும் பிராண்டி இரத்தம் குடிக்கிறது; மாமிசமும் தின்கிறது. யானையோ எதிர்த்துப் போராட முடியாமல் - ஏங்குகிறது - வேதனை தாங்காமல் துடிக்கிறது. சேற்றிலே மட்டும் அது அகப்பட்டவில்லையானால், அந்த நரி, ஒரே மிதியில் கூழாகிவிடும். இப்போதோ நரிக்கு ஒரே வேட்டை! நாள் முழுவதும் காட்டைச் சுற்றினாலும் இதுபோல் உணவு அதற்குக் கிடைக்காது.

வீரனையே சுழற்றும் பலமுள்ள யானை, சேற்றிலே சிக்கினால் நரியிடமும் தோல்வியுறும் என்ற கருத்தை வள்ளுவர் அழகான ஓவியமாகத் தீட்டிக் காட்டியுள்ளார், குறள் மூலமாக! புராணிகள், கஜேந்திர மோட்சமென்ற நம்பமுடியாத கற்பனையை யானையின் மூலம் சொன்னார்கள். ஆனால், வள்ளுவரோ யானையின் வாயிலாக - ஓர் அரசுக்கு வேண்டிய அறிவுரையையே தீட்டிக் காட்டியிருக்கிறார்.

எத்துணைப் படைபலம் இருந்தாலும் - ஒரு சிறு பலவீனத்தின் காரணமாக, அந்த அரசு, பலமற்ற எதிரிகளால் பறிக்கப்பட்டுவிடலாம் என்பதற்காகவே வள்ளுவர் - யானையின் வலிமையையும் அது சேற்றிலே செல்லாக் காசாகிவிட்ட சேதியையும் - சிறு நரி ஜெயித்த விந்தையையும் குறளோவியம் தீட்டிக் காட்டியிருக்கிறார்.

உலகிலேயே போற்றப்படும் பெரும் பெரும் மேதைகளும் - வீரர்களும்கூட சிறு தவறுகளாலேயே சிறியவர்களால் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள்.

மராட்டியம் தந்த மாவீரன் சிவாஜி, மூட நம்பிக்கைச் சேற்றிலே கால் வைத்ததால் அல்லவா, காகப்பட்டர் என்னும் வைதீகத் தலைவனுக்கு மண்டியிட்டான்! உலகச் சரித்திரத்தின் ஜோதி விளக்குகளான சீசரும் ஆண்டனியும் தங்கள் சமுதாயத்தைக் கட்டிக் காக்கமுடியாமல் மண்ணாகிப் போனதற்குக் காரணம், அழகி கிளியோபாட்ரா தந்த இன்பச் சேற்றிலே அகப்பட்டுக் கொண்டதனாலன்றோ!

நாடாளும் அரசுகள் அனைத்துக்கும் நமது தமிழ்த் தலைவர் தந்த குறளறம் இதோ தரப்படுகிறது! வேல்கொண்ட வீரனைக் குத்திக் கொன்ற யானை, சேற்றிலே சிக்கினால் - அதை நரிகூட எதிர்த்து அழித்துவிடும்.

காலாழ் களரின் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு.

அதிகாரம் - 50 — இடனறிதல்; பாடல் - 500

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்