பொருளடக்கம் 62 / 300
செல்லாமை உண்டேல்
அச்சுப் பக்கம் 141–142 · ஸ்கேன் 158–159 · அதிகாரம் 116 (பிரிவாற்றாமை) — குறள் 1151
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Large colour illustration above the prose showing the couple together indoors, with the woman seated in the foreground and the man behind her.
வாணிபத்தின் பொருட்டுப் பிறநாடு சென்றுவரத் திட்டமிடுகிறான் மாவெண்கோ! ஆனால், அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறான். வாணிபத்திற்குத் தேவையான பொருள் இல்லாத காரணமா என்றால் இல்லை! அவனது மூதாதையர் சேர்த்துவைத்த பொற்குவியல் குன்றுபோல் உண்டு, அவன் வீட்டில்! அவன் தயக்கத்திற்கும், தவிப்புக்கும் காரணமே அவன் துணைவி மாங்கனிதான்! அவளைப் பிரிந்து அவனாலும் இருக்கமுடியாது என்றாலும் அவனைப் பிரிந்து அவளால் உயிர்வாழவே முடியாது என்பதை அவனறிவான். இதற்கிடையே அவனது வணிகத்துறை கூட்டாளிகள் அவனை வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள், பிறநாடு சென்று வாணிபம் நடத்திப் பொருளீட்டுவதன் மேன்மை குறித்து! வேறு வழியின்றி, ஒரு நாள் மாவெண்கோ, அவர்களுடன் பயணம் புறப்படுவதாக ஒப்புதல் அளித்துவிட்டான்.
அன்றிரவு கட்டிலறையில் மாங்கனியிடம் எப்படியாவது சம்மதம் வாங்கிவிடலாமென்ற துணிவுடன் இல்லம் வந்தான்.
சோர்வுற்றிருந்த அவன் முகத்தில், தன் கன்னங்களால் ஒத்தடம் கொடுத்து அந்தச் சோர்வினைப் போக்கினாள் மாங்கனி.
உணவருந்திட அழைத்தாள். வாழை இலை விரித்து வகை வகையாய் உணவு பரிமாறினாள். அவற்றைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தான் மாவெண்கோ. அவன் உணவை அள்ளிச் சுவைக்காது கண்ட புள்ளி மயில், துள்ளிப்போய்வந்து தன் காந்தள் விரல்களால் இலையில் உள்ள பண்டங்களை எடுத்து அவன் இதழ் பிளந்து ஊட்டி
விட்டாள். தனைமறந்த மாவெண்கோ, மாங்கனியின் மடிமீது சாய்ந்து கொண்டான். பிள்ளையில்லாக் குறையும் தீர்ந்ததென்று அவன் உச்சந்தலையில் ஓர் முத்தமிட்டாள்.
உண்ணுமிடம் நீங்கிப் பின்னர், பண்ணும் யாழும் கலந்ததுபோல் கலந்திடவே பள்ளியறை நோக்கி நடந்தனர் இருவரும் ஒருவராக!
முல்லை மலர்க்கொத்தினை எடுத்து மாங்கனியின் தலையில் சூட்டினான் மாவெண்கோ!
அவளோ, அவனுக்குத் தன் புன்னகையால் முல்லைமலர்த் தோட்டமொன்றைக் காட்டினாள்.
“விளக்கு, தேவையா?” என்றான்.
“விளக்குத் தேவையில்லை, ஆனால் விளக்கம் தேவை; முகவாட்டத்திற்குக் காரணம் என்ன?” எனக் கொஞ்சினாள் அந்தக் கோதை!
“அல்லி மலர் என் முகம்! நிலவு நீயிருக்கும்போது எதற்காக வாடப் போகிறது!” என்றான் சிரித்துக்கொண்டே, மாவெண்கோ.
விளக்கின் ஒளி இல்லை அந்த அறையில்! பேசும் ஒலியும் இல்லை! வானத்தில் நிலவும் முகிலும் தழுவிக் கொண்டன. இளந்தென்றல், மலர்த் தோட்டத்தை அப்படியே வாரியணைத்துக் கொண்டது. அரும்புகளின்மீது பனி நீர்த் துளிகள் மென்காற்றுக்கேற்ப நடனமாடின.
“அத்தான்!”
“மாங்கனி!”
இங்கே பள்ளியறையில் மௌன ஓவியங்கள் பேசத் தொடங்கின.
“நான் ஒன்று கேட்பேன்; கொடுப்பாயா மாங்கனி?”
“வைகறைப் பொழுதின் விளிம்பு வரையில் கொடுத்ததெல்லாம் தித்திக்கவில்லையா அத்தான்?”
“இப்போது, உனக்குக் கசப்பான ஒன்றைக் கேட்கிறேன்.”
மாங்கனியின் இதழ்களில் அசைவில்லை. அருகம்புல்லில் பனித்துளிபோல், அவள் கண் இமையில் நீர்த்துளிகள் தோன்றின.
“வாணிபத்தின் பொருட்டு ஒரே ஒருமுறை பிறநாடு சென்று வருகிறேன் கண்ணே! நீ தயங்காமல் ஒப்புதல் கொடு!”
“நீர், என்னைப் பிரிந்து எங்கும் செல்வதில்லையென்றால் என்னிடம் அதுபற்றிக் கூறுக. இல்லை; சென்றுதான் தீர வேண்டுமென்றால் நீர் திரும்பி வரும்போது யார் உயிரோடு வாழ்வார்களோ, அவர்களிடத்தில் இப்போது விடை பெற்றுக்கொள்க. என்னைப் பொறுத்தவரையில், நீர் பிரிந்து சென்றுவிட்டால், நீர் திரும்பி வரும்போது நான் உயிரோடு இருக்க மாட்டேன்.”
இந்தப் பதிலுக்குப் பிறகு அவனது பிறநாட்டுப் பயணம் நிறைவேறியிருக்க முடியுமா?
பிரிவாற்றாமையை உணர்த்திட எவ்வளவு அருமையான குறள் இது!
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க்கு உரை.
அதிகாரம் - 116 — பிரிவாற்றாமை; பாடல் - 1151
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்