பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 61 / 300

எப்பொருள் யார்யார்வாய்

அச்சுப் பக்கம் 139140 · ஸ்கேன் 156157 · அதிகாரம் 43 (அறிவுடைமை) — குறள் 423

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour illustration above the prose showing a knife-brandishing man beside a woman, surrounded by raised hands in a crowd.

ஒருவன் குப்புற விழ்ந்து மூக்கை உடைத்துக் கொண்டான். எல்லாரும் அவனைக் கேலி செய்தார்கள். கேலியைத் தாங்க முடியாமல் அவனொரு சூழ்ச்சி செய்தான். ஒருநாள் காலையில் வானத்தைப் பார்த்துக் கரம் கூப்பியவாறு, “ஆகா! கடவுளே!” என்று கசிந்துருகிக் கத்தினான்.

ஊரார் கூடியனர்! “என்ன? என்ன?” என்று வினவினர். “அதோ ஆகாயத்தில் ஆண்டவன் தெரிகிறார்” என்றான் மூக்கிழந்தவன்.

“எங்களுக்குத் தெரியவில்லையே!” என்றனர் ஊரார்.

“மூக்கை அறுத்துக் கொண்டால் தெரியும்” என்றான்.

யாரும் முன் வரவில்லை.

பிறகு நாலைந்துபேர் மூக்கை அறுத்துக்கொண்டு விண்ணைப் பார்த்தனர். கடவுள் தெரிவதில்லை; கருமேகங்கள்தான் தெரிந்தன. அந்த நாலைந்து பேருக்கும் வெட்கமாகப் போய்விட்டது. மற்றவர் கேலி செய்து புண்படுத்துவரே எனப் பதைத்தனர். எனவே, அவர்களும் தாங்கள் ஏமாந்து போனதைக் காட்டிக் கொள்ளாமல், “ஆமாம்! அதோ கடவுள்! அடடா! என்ன அரிய காட்சி! அருமை! அருமை! ஆண்டவனைக் கண்டதில் எமக்குப் பெருமை! பெருமை!” எனக் குதித்தாடினர்.

ஆண்டவனைக் காண ஆசைப்பட்ட ஒவ்வொருவரும் இவ்வாறே மூக்கைச் சிதைத்துக் கொண்டு, இறுதியில், அந்த ஊர் மக்கள் அனைவருமே மூக்கிழந்தோராயினர்.

இப்படி ஆராயாமல் அறிவிழப்போர் ஒரு சாரார்!

ஊருக்குப் பெரியவன்! அவன் உத்தரவுக்கு அனைவரும் அடிபணிய வேண்டும். மறுத்தால் தலை மண்ணில் உருளும்! அவன் ஒருநாள் புரவியேறி வீதி வலம் சென்றபோது, பூங்கொடியாள் ஒருத்தியைக் காணுகிறான். அடுத்த கணம் அவன் இல்லத்திலிருந்து ஆணை கிளம்புகிறது, அந்த வெள்ளத்தை எப்படியும் கொண்டு வரவேண்டுமென்று! ஏவி விடப்பட்டோர் தாவிச் சென்று தங்கள் இறைவனின் தவிப்பை எடுத்தோதினர். தங்கம் நிகர்த்தவளோ தரையை உதைத்தவாறு பதில் விடுத்தாள். “நான் உதைத்தது தரையை அல்ல! உங்கள் தலைவனின் தலையை என்பதை எடுத்துரைப்பீர்” எனச் சீறினாள்.

பட்டாக்கத்தி வீரர் பதைத்துப் போயினர். அவள் கண்கள் கக்கும் அனலை எதிர்க்கமாட்டாமல் திரும்பி ஓடினர். ஊர்ப்பெரியவன் உறுமினான், அடிபட்ட புலிபோல! சிற்றூரைக் கூட்டினான். தன் விருப்பத்துக்கு இணங்காதவள் மீது வீண்பழி சுமத்தினான். பொது மன்றத்தில், அந்தப் பூந்தளிர் கொண்டுவந்து நிறுத்தப்பட்டாள்.

அவளைக் கற்பிழந்தவள் என்று சாட்சித்தான் அவன்! விலைமகள் என்றான்! அவன் ஆணைக்கு அதுவரை அடங்கி கிடந்தவர்களால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவள் கற்பின் திறத்தை, ஊரார் நன்கறிவர். பொற்புடை மங்கை பற்றிப் பொல்லாங்கு உரைப்பதை ஏற்றிட எவரும் முன் வரவில்லை. காமுகனோ, கையில் வாள் தூக்கி கம்பீரமாக எழுந்தான். ஊரார் அவனுக்கு எதிரே தங்கள் கைகளை மட்டுமே உயர்த்தினர். “வீண்பழி சுமத்தாதே!” என்ற குரல் நாலா திக்கிலுமிருந்து எழுந்தது.

அவன் கைவாளும் அவன் ஆட்களின் துணையும் என்ன செய்யமுடியும் மக்களின் ஒன்று திரண்ட சக்தியின் முன்னே!

அவன் ஆட்டம் அடங்கிற்று - ஆணவம் அழிந்துவிட்டது - தலை குனிந்தவாறு தன்னகம் நோக்கி நடந்தான்.

இரு கதைகள்! இரண்டிலுமே பொய்களின் மூலம் ஊராரை ஏமாற்ற முயற்சி!

முதற் கதையில் ஊர் ஏமாறுகிறது; அடுத்த கதையில் ஊர் விழித்துக் கொள்கிறது.

எப்பொருளை, யார் யாரிடம் கேட்டாலும் அவர்கள் சொன்னதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல், அது பற்றிய உண்மை என்ன என்பதை ஆராய்ந்து உணர்வதே அறிவாகும்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.

அதிகாரம் - 43 — அறிவுடைமை; பாடல் - 423

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்