பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 60 / 300

உணலினும் உண்டது

அச்சுப் பக்கம் 137138 · ஸ்கேன் 154155 · அதிகாரம் 133 (ஊடலுவகை) — குறள் 1326

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour illustration above the prose showing the lovers embracing in the upper scene and the pair turned apart in a lower scene.

“அன்பே” என்றான். “ஆருயிரே” என்றாள். “அமிழ்தே” என்றான். “தரட்டுமா” என்றான். “தடையேது?” என்றாள்.

“தங்கம் நீ எனக்கு” என்றான். “தங்கத்தில் பதித்த வைரமல்லவோ நீ” என்று, அவனை இடைவெளிவிடாது தழுவிக் கொண்டாள்.

பக்கத்தில் பண்ணெழுப்பியவாறு பாய்ந்து கொண்டிருந்த தேனருவியின் சிதறிப் பறக்கும் நீர்த்துளிகள், அவர்களுக்கு இயற்கையே பன்னீர் தெளிப்பதுபோல் இருந்தது. நனைந்திருக்கும் பாறைகளின் உச்சியிலே படர்ந்திருக்கும்

பூங்கொடிகளுக்கு நடுவில் அமர்ந்து, குயிலினம், அவர்களின் இன்ப விளையாட்டுக்குப் பின்னணி இசையைப் பொழிந்து கொண்டிருந்தது. தருக்களின் இளந்தளிர்கள் மென்காற்றில் அசைந்து, தங்களைக் குடையாகக் கொண்டு கலவியின்பம் நுகரும் காதலர்தம் நெற்றியினில் முத்து முத்தாகத் தோன்றிடும் வியர்வையினைப் போக்க ‘விசிறி’ போட்டுக்கொண்டிருந்தன. உதிர்ந்த சருகுகளோ அவர்கட்குப் பஞ்சணையாக மாறும் பெரும் பேற்றினை அடைந்தோமே என்ற மகிழ்ச்சிப் பெருக்கில் சலசலத்தன.

இன்பத்தின் நாட்டியம், இரு கை வளையொலியின் நட்டுவாங்கத்துடனும் இதழ் நான்கின்- பக்கவாத்தியத்துடனும் (இன்னும் விவரிக்க வேண்டுமா?) இனிது நிறைவேறியது.

சுவைமிகு பழச்சுளையாம் அந்த இன்பத்தை உண்டவர்க்கு மேலும் சுவை அளிக்க ‘ஊடல்’ எனும் மாமருந்தும் கிடக்கிறது. சுவையளிப்பதை மருந்து என்கிறேன் நான்! இல்லை, இல்லை- வள்ளுவர் அப்படிச் சொல்கிறார்.

ஒருவன் அறுசுவை உணவைச் சாப்பிட்டுக் கொண்டேயிருக்கிறான். அந்தச் செயலை அவன் தொடர்ந்து கொண்டேயிருந்தால், அருந்திய உணவின் சுவையை அவனால் அனுபவிக்க முடியுமா? முடியாது! அதனால் என்ன செய்ய வேண்டும்? உணவு செறிப்பதற்குத் தேவையான இடைவேளை தரப்பட வேண்டும். “உண்பதை விட முன் உண்ட உணவு செறிப்பது இன்பமானது” என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். அதுவும் ஒரு வகையில் உடலுக்கேற்ற மருந்துதானே! அதுபோலவே காதலர் கூடிப் பெறும் சுகத்தைவிட, அந்தக் கூடலுக்குப் பிறகு விளையும் ஊடலில் சுகம் அதிகமாம். முதலில் உண்டு செறித்துப் பிறகு பசித்தபின் உணவைத் தொடங்குவதுதானே சிறப்புக்குரியதாகும்?

இதோ அதற்குக் குறள்:

உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது.

அதிகாரம் - 133 - ஊடலுவகை; பாடல் - 1326

காப்பக விவரிப்பு: Small printed Valluvar-monument illustration centred below the Kural metadata.

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்