பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 59 / 300

கலந்துணர்த்தும் காதலர்

அச்சுப் பக்கம் 136136 · ஸ்கேன் 153153 · அதிகாரம் 125 (நெஞ்சொடு கிளத்தல்) — குறள் 1246

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour illustration above the prose showing a woman in the foreground with a second female face inset, visually accompanying the woman-addressing-her-heart vignette.

“என் இனிய நெஞ்சமே! சே! உன்னைப் போய் இனிய நெஞ்சம் என்று கூறுகிறேன் பார்! எத்தனையோ இன்னல்களைத் தாங்குகிற உனக்கு; இந்த ஒரு விஷயத்தில் மட்டும் உறுதி என்பது ஒரு துளியும் கிடையாது. அவரைத்தான் உன்னுடையவர் என்று ஏற்றுக்கொண்டிருக்கிறாய் - ஆனால், அவரைப்பற்றி உனக்கேன் இத்தனை ஐயப்பாடு? அதனால்தானே அடிக்கடி ஊடல் கொள்கிறாய்? அந்த ஊடலாவது நிலைத்துநிற்கும் உறுதியை நீ பெற்றிருக்கிறாயா? அவரைக் கண்டவுடன் என்ன செய்கிறாய்? தீர விசாரித்துத் தெளிவுறாத ஒரு குற்றத்தை அவர்மீது சுமத்தி ஊடல் கொண்டிருக்கும்போது - அவர் கரங்கள் என்மீது பட்டவுடன் நீ எங்கேயோ போய்விடுகிறாய் நெஞ்சே! கட்டித் தழுவுகிறார் - காதல் இலக்கியம் வரைகிறார் - எட்டித் தள்ளமுடியாமல் என்னை முழுமையாக அவருக்குக் கொடுத்துவிடுகிறேன். கூடலெனும் தேர்த்திருவிழாவில் ஊடலென்பது எங்கேயோ காணாமல் போய்விட்ட செல்லாப் பணமாகி விடுகிறது.

ஊடலைத் தீர்த்துக் கூடலால் என்னை மகிழ்விக்கும் அவரைக் காணும்போது, நெஞ்சே! நீயல்லவா குறுக்கே நின்று என்னைத் தடுத்து அவருடன் பிணங்கி ஒதுங்கச் செய்யவேண்டும்! அதைச் செய்வதற்குப் பதிலாக, அப்போது நீ எங்கேயோ தொலைந்து விடுகிறாய்! அவர் இல்லாத நேரத்தில் அவர் மீது பொய்யாகச் சினங்கொண்டு குதிக்கின்றாய்!”

இப்படியொரு கிள்ளைமொழியாள், தன் நெஞ்சோடு கிளத்தலை இந்தக் குறள் குறிப்பிடுகிறது.

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்துணராய் பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.

அதிகாரம் - 125 - நெஞ்சொடு கிளத்தல்; பாடல் - 1246

உணர்த்தும் = நீக்கும்

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்