பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 73 / 300

உள்ளினேன் என்றேன்

அச்சுப் பக்கம் 164166 · ஸ்கேன் 181183 · அதிகாரம் 132 (புலவி நுணுக்கம்) — குறள் 1316

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour moonlit-seaside illustration occupying most of the page: a couple embrace beside a boat beneath the moon and stars.

நீலத் திரை கடலோரம்! வெண் மணற்பரப்பை, மல்லிகை முல்லை பரப்பிய மஞ்சம்போல் ஆக்கிக் கொண்டிருந்து அமுத ஒளி பொழியும் நிலவு! அலைகளும் கரையோரத்தில் அலுவல் முடித்துக்கொண்டு களைத்துப்போய் இளைப்பாறிக் கொண்டிருந்து பெரிய படகு ஒன்று! அதன் நிழல் மறைவில் இரண்டு உருவங்கள்!

உற்று நோக்கினால்தான் இரு உருவங்கள்; இல்லையேல் ஒருவராய் ஆகியிருந்தனர் என்றே கூறவேண்டும்.

வளர்த்துவானேன்! காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி இதழ்விரித்து மாலை மலரும் நோய்க்கு, ஒருவருக்கொருவர் மருந்து வழங்கிக்கொள்ள அந்தப் படகின் நிழலைப் பஞ்சணையாக்கிக் கொண்டிருந்தனர் அந்த இரண்டு சிட்டுக்கள்!

கலகல என்னும் வளையொலியும், இடையிடையெழும் இளநகையொலியும், அருகிருப்போர் யாருக்கும் கேட்காவண்ணம் அலைஒலிகள் துணைபுரிந்து கொண்டிருந்தன.

விண்ணில் முழுநிலவை முகிலொன்று தழுவி நிற்கும் - அதுவும் மண்ணில் இவர் நடத்திடும் காதல் திருவிழாக் கண்டு, வெட்கத்தால் நிலவை விட்டு நெடுந்தொலைவு ஓடிவிடும்.

முத்துநகை எதுவும் கழுத்திலோ, கைகளிலோ இல்லை அவளுக்கு! அந்த நகையை வெல்லுகின்ற தூய முத்துநகைப் பேழையொன்றை இதழ்களாலே பூட்டி வைத்திருந்து, அடிக்கடி திறந்து காட்டி, அவன் கொள்ளையடிப்பதற்குள் மூடிக்கொண்டாள்.

விலை உயர்ந்த அணிமணிகள் அவளுடலில் இல்லை! எதற்காக அவைகள்? அவள்தான் அவனுடல் தங்கத்தில் பதிந்திருக்கும் வைரமாக ஒட்டிக்கொண்டு கிடக்கிறாளே!

எளிய குடும்பத்துப் பருவப் புறாக்கள் அவர்கள்.

ஏழையென்றும் செல்வரென்றும் தரம் பிரித்து மதிப்பதில்லையே காதல்! ஏழை வீட்டு உணவுத் தட்டில் இனிப்புத் தரும் பலாச்சுளை இருப்பதில்லை; உண்மை தான்! இதழ் நான்கும் இனிய பலாச்சுளையை வெல்லும் என்று, இதோ செயலால் காட்டுகின்றார் கடற்கரையில்!

உப்பரிகையில் உள்ளோர்க்குத்தான் ஊடல் கூடல் என்று உண்டோ? இதோ உப்பங்காற்றுக் குடில்களில் வாழ்வோர்க்கும் ஊடல் உண்டு, கூடல் உண்டு என்பதை எடுத்துக் காட்டாய் இந்த இணை, இசை எழுப்பும் யாழ்போல் பேசுதல் கேட்போம்.

“அத்தான்! ஆழ்கடலில் நெடுந்தொலைவு சென்றுதான் இன்று மீன் கொண்டாந்தீரோ?”

“ஆம்! துள்ளும் மீன் பிடிக்க நெடுந்தொலைவு சென்றேன். ஆனால், என் நெஞ்சை அள்ளும் மீன் இதோ, மிக அருகே இருக்கக் கண்டேன்.”

அவன், அவள் விழிகளைத் தன் விரல்களால் தடவிக் கொடுத்தான்.

“அத்தான்! நடுக்கடலில் பெருங்காற்று வீசியதாமே; அப்போது என்ன நினைத்தீர்?”

“என்ன நினைப்பேன் கண்ணே? உன்னைத்தான் நினைத்தேன்!”

இந்தப் பதில் வெளி வந்ததும் அந்தப் பருவக்கொடி, அவள் படர்ந்திருந்த அத்தானின் மேனியை விடுத்து நகர்ந்து கொண்டு சிணுங்கி அழுதாள். காரணம் புரியாது கண்ணாளன் திகைத்தான்.

அவள் கரந்தொட்டான். தட்டி விட்டான். இடையணைக்கப் புரண்டு சென்றான். அவள் எழுந்து சென்று சற்றுத் தொலைவில் அமர்ந்து கொண்டாள்.

அருகில் சென்று ‘முத்தம் ஒன்று தருவேன்’ என்றான்.

அவளோ முகத்தை மூடிக் கொண்டு முணு முணுத்தாள்.

“என்ன தவறிழைத்தேன் தையலே! ஏனிந்த ஊடல்?” என்றான்.

“நீர் சொன்ன சொல்லை மீண்டும் ஒருமுறை சொல்லிப் பார்த்திடுக!” என்று முகம் கடுகடுத்தாள்.

“என்ன சொன்னேன், ஏந்திழையே! உன்னை நினைத்தேன் என்றுதானே சொன்னேன்” என்று கெஞ்சினான்; கொஞ்சினான்; அவளோ மிஞ்சினாள்.

“நினைத்தேன் என்று சொன்னீரே; அதுதான் என் இதயத்தைப் பிளக்கிறது” என்று அழுதாள். “உன்னை நான் நினைப்பது தவறா? நினைக்கக் கூடாதா, என் நித்திலமே! இதில் குறை என்ன கண்டாய்?”

என மண்டியிட்டான்.

“என்னை மறந்திருந்ததால் அல்லவா திடீரென நினைத்துக் கொண்டீர்? மறவாதிருந்திருந்தால் நினைப்பதற்குத் தேவையிருக்காதே அத்தான்?”

எனப் பதிலளித்தாள்.

உயிரனையாள் ஊடல் புரிவதற்குத் தேர்ந்தெடுத்த காரணத்தை அவன் புகழ்ந்தான்! வியந்தான்! மன்னிப்புக் கேட்டான்! மடியினிலே படுத்துக் கொண்டான்! மழலையினை அணைப்பதுபோல், அவளும் அவனை மார்புறத் தழுவிக் கொண்டாள். ஊடல் தந்த இன்பத்தால் உவகை பொங்கிற்று.

ஓய்வெடுத்துக் கொண்டிருந்த படகு, உறங்குவதுபோல் கண்களை மூடிக்கொண்டது. நிழலின் இருள் போதாதென்று அவர்கட்கு உதவிட நிலவும் மேகத்துக்குள் நுழைந்து கொண்டது.

இந்த ஊடலுக்கு வள்ளுவர் தீட்டிய குறள் இதோ:-

உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள்

அதிகாரம் - 132 - புலவி நுணுக்கம்; பாடல் - 1316

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்