பொருளடக்கம் 56 / 300
நன்றாற்ற லுள்ளும்
அச்சுப் பக்கம் 129–130 · ஸ்கேன் 146–147 · அதிகாரம் 47 (தெரிந்து செயல்வகை) — குறள் 469
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Large colour illustration showing an elderly physician facing a tiger in dense forest.
அடர்ந்த காடு! முட்புதர்கள் மொய்த்த தரை! பகல் வேளைதான் எனினும், ஒளி உட்புக முடியாத அளவுக்கு நிழல் வழங்கும் தருக்கள்! அந்தக் காட்டைக் கடந்து அடுத்த ஊருக்குச் செல்லவேண்டிய மருத்துவர் ஒருவர், வேறு வழியின்றி அவ்வழியே நடந்து கொண்டிருந்தார். பயணம், ஒரு வகையில் பயன் படக்கூடியதாகவும் அமைந்திருப்பதாகக் கருதி மகிழ்ந்தார், அந்த மருத்துவர். காரணம், அவர் மருந்து தயாரிப்பதற்குத் தேவையான பச்சிலைகள், மூலிகை வேர்கள் அந்தக் காட்டில் ஏராளமாகக் கிடைத்தன. அவைகளையெல்லாம் மிக்க உற்சாகத்துடன் அவர் தன் மருந்துப் பையில் நிரப்பிக் கொண்டார். அந்த வட்டாரத்திலேயே அவருக்கு நிகரான மருத்துவர் இல்லையென்றுகூடக் கூறலாம். ஏழைகளுக்கு நோய் எனில் அவர்களிடம் காசு எதுவும் பெறாமலே அவர் சிகிச்சை செய்வார்.
அவரது கால்கள், எளிய மக்கள் வாழும் பகுதிகளையே சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும். செல்வம் படைத்தோர், நிலக்கிழார் இல்லங்களில் சிகிச்சையளித்துப் பெறுகிற தொகையினைக் கொண்டு, வறுமையில் வாடும் மக்களுக்கு மருத்துவத் தொண்டினை நடத்தக் கூடியவர். அதனாலேயே அந்தப் பகுதி மக்கள் ஒன்றுகூடி அவருக்கு ‘மருத்துவ மேதை’ என்ற விருதினைக்கூட வழங்கிக் களித்தார்கள். ‘அவர் மருந்து கொடுத்தால் தீராத நோயே கிடையாது’ என்ற புகழாரங்கள் வேறு குவிந்து கொண்டிருந்தன. மானிடர்க்கு மட்டுமின்றி விலங்கினங்கள், பறவையினங்களை வீட்டில் வளர்ப்போரும் இந்த மருத்துவரைத் தான் நாடுவர், அவைகள் நோயுற்றால்!
அத்துணை சிறந்த திறமையாளர். மேலும் மருத்துவத் துறையில், தான் ஆற்றிட வேண்டிய பணிகளைப் பற்றிச் சிந்தித்தவாறு காட்டுப் பாதையில் நடந்து கொண்டிருந்தார்.
அப்போது எங்கிருந்தோ ஓர் உறுமல் ஒலி கேட்டது! அவர் அஞ்சி நடுங்கிடவில்லை. ஒலிவந்த திக்கு நோக்கிச் செவியைத் திருப்பி உற்றுக் கவனித்தார். அந்த உறுமல் ஆத்திரம் கலந்ததாகவோ, வெறி கலந்ததாகவோ இல்லை; வேதனை கலந்ததாக இருந்தது. எனினும், அது ஒரு கொடிய மிருகத்தின் ஒலிதான் என்பதை மருத்துவர் புரிந்து கொண்டார்.
ஒலியின் வேகமும் சிறிது சிறிதாக அடங்கியவாறு இருந்தது. எதற்கும் நெருங்கிச் சென்று பார்ப்போம் என்று மருத்துவர் முடிவு செய்தார். ஒலிவந்த திசையில் நடந்தார். வேதனையான ஒலிதான்! ஆனால், அது ஒரு வேங்கைப் புலியின் ஒலி. மருத்துவர், அன்பு நிறைந்த விழிகளோடு அந்த வேங்கையை நோக்கினார். வேங்கைப்புலி தரையில் வீழ்ந்து கிடந்தது. அதன் பாதத்தில் ஒரு கூரிய அம்பு தைத்திருந்தது. மருத்துவர் புரிந்து கொண்டார். யாரோ வேடன் வேங்கையைக் குறி பார்த்து வில்லை வளைத்திருக்கிறான். அது கண்ட வேங்கை, அவன்மீது பாய முனைந்திருக்கிறது. அதற்குள் வேடன் விடுத்த அம்பு, புலியின் பாதத்தில் தைத்திருக்கிறது. கணைபட்ட வேங்கை, கடும் வேதனையில் ஓடி வந்திருக்கிறது. அதனால் அம்பின் நுனி அதன் பாதத்தில் நன்றாக அழுந்திப் புலியினால் நடக்க முடியவில்லை. வேதனை தாங்காமல் விழுந்து கிடக்கிறது.
நல்ல உள்ளங் கொண்ட மருத்துவர், ஒரு கணமும் தாமதிக்கவில்லை. வேங்கையின் அருகே சென்று அதன் முதுகை வருடினார். தலையில் தட்டிக் கொடுத்தார். புலிக்கு அந்தச் செயல் சிறிது இதமாக இருந்தது போலும்! அமைதியாகப் படுத்திருந்தது. பிறகு மருத்துவர், தன்னிடமுள்ள சில பச்சிலைகளைக் கசக்கிப் பிழிந்து அம்பு பட்டிருக்கிற புலியின் பாதத்தில் தடவினார். புலிக்கு வலி தெரியாத அளவுக்கு அதன் பாதத்தில் உள்ள அம்பினைப் பிடுங்கிட, அந்தப் பச்சிலைச் சாறு உதவிற்று! அம்பைத் தொலைவில் வீசிவிட்டு, காயத்துக்கு மருந்து தடவினார். வேங்கைப்புலி எழுந்து நின்றது.
மருத்துவரும் மன நிம்மதியுடன் எழுந்தார். தன் வாழ்க்கையில் ஒரு கொடிய மிருகத்திற்குக்கூட உதவி செய்துவிட்டோம் என்ற ஆறுதல் அவருக்கு!
திடீரென உறுமல் ஒலி பயங்கரமாகக் கேட்டது. மருத்துவர் திடுக்கிட்டார். அந்த வேங்கைப்புலி அவர் மீதே பாய்ந்தது. அவர் மார்பகத்தைப் பிளந்து, கை கால்களைத் துண்டித்து, தலையை நொறுக்கித் தன் பசியைத் தீர்த்துக் கொண்டது. சற்று நேரத்துக்குமுன் தன் உயிருக்காகப் போராடிய வேங்கைப்புலி, தன்னைக் காப்பாற்றியவர் உயிரையே போக்கி மகிழ்ந்தது.
“வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடதாரி” என்ற பாட்டைப் படித்திருக்கிறோம் அல்லவா? அந்தப் பாட்டு விளக்கும் உண்மையைத்தான் திருவள்ளுவர், குறள் வடிவில் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே அறிவித்துவிட்டுப் போயிருக்கிறார்.
அவரவர்களுடைய இயல்புகளை அறிந்து, அவரவர்க்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு ஏற்பட்டுவிடும்.
“நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை”
அதிகாரம் - 47 - தெரிந்து செயல்வகை; பாடல் - 469
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்