பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 57 / 300

விடாஅது சென்றாரை

அச்சுப் பக்கம் 131132 · ஸ்கேன் 148149 · அதிகாரம் 121 (நினைந்தவர் புலம்பல்) — குறள் 1210

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour illustration showing a separated woman looking up toward the moon beneath a giant pair of eyes.

“நிலவு நெருப்பாகச் சுடுகிறதே - அய்யோ! கொடுமை நிறைந்த நிலவே! உனக்குத் தண்ணிலவு என்று பெயராயிற்றே; என்மீது எதற்காகத் தணலைக் கொட்டுகிறாய்?” என, முழுமதியின் மீது சினங்கொப்பளிக்கச் சீறிவிழும் மங்கை யார் உண்டு, மார்புறத் தழுவி மகிழ்ந்த மணாளனைப் பிரிந்திருக்கும்போது!

“பொல்லாத நிலவே! நில்லாதே என் முன்னால்! போ! போ! மறைந்து விடு” எனச் சொல்லாலே கணைபொழிந்து, கண்ணீரும் பொழிந்து நிற்கும் காரிகையர் உண்டு -

காதலன் பிரிவு எனும் கடுஞ்சோதனைக்கு ஆளாகும்போது. ஆனால் இதோ ஒரு பெண், காதலனைப் பிரிந்து கவலை கொண்டிருப்பவள்தான்; எனினும் அவள் நிலாவைப் பார்த்து வசை பாடினாள் இல்லை; வருந்திக் கோபித்துக் கொள்ளவும் இல்லை. கோலநிலா வந்து கொஞ்சுகின்ற இரவில், அவள் காதலனோடு களித்துக் கிடக்க முடியவில்லைத்தான்; அதற்காக அவள் அந்த நிலாவின்மீது காய்ந்து விழுவதற்குப் பதிலாக, வேண்டுகோள் ஒன்றை வைக்கிறாள். என்ன வேண்டுகோள் அது? இருட்டு நேரத்தில் அவள் கண்கள் காதலனைத் தேடிப் புறப்பட்டு விட்டனவாம்.

ஒருவேளை அந்தக் கண்கள் அவனிருக்குமிடத்திற்கு அருகே வந்து விட்டாலுங்கூட இருள் சூழ்ந்திருந்தால் அவனைக் கண்டுகொள்ள முடியாதல்லவா? அதற்காக அந்தக் கண்களுக்குத் துணையாக ஒரு விளக்குத் தேவைப்படுகிறது. அதுதான் அந்த வான விளக்கு. அந்த விளக்கை, “விலகிப் போ! என் உள்ள வேதனையைக் கிளறாதே!” என்று விரட்டி அடித்துவிட்டால், பிறகு ஏற்படுகிற காரிருளில், அவள் காதலனைத் தேடிப் பிடிக்கமுடியாமல் கண்கள் திண்டாடுமல்லவா? அதற்காக, அவள் நிலவைப் பார்த்துக் கெஞ்சுகிறாள்.

“திங்களே! நீ மறைந்து விடாமல் இருந்திடுவாயாக! என்னைவிட்டுப் பிரியாமலிருந்து பிரிந்து சென்றுவிட்ட என் அன்புக் காதலரை என் கண்களால் தேடிக் காண்பதற்கு உதவியாக நீ ஒளி வழங்கிடல் வேண்டும். ஆகவே, மதியே! நீ மறையாது வாழ்வாயாக!”

அதற்கு இதோ குறள்:

“விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி மதி.”

அதிகாரம் - 121 - நினைந்தவர் புலம்பல்; பாடல் - 1210

காப்பக விவரிப்பு: Small printed Valluvar-monument illustration centred below the authority/song metadata.

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்