பொருளடக்கம் 55 / 300
கண்டு மன்னும்
அச்சுப் பக்கம் 127–128 · ஸ்கேன் 144–145 · அதிகாரம் 115 (அலர் அறிவுறுத்தல்) — குறள் 1146
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Large colour illustration showing a romantic couple embracing beneath coconut/palm trees at night.
அகன்ற நெற்றி.
ஆண்மையை அறிவுறுத்தும் கண்கள்; உயர்ந்த தோள்கள்.
உறுதியைப் புலப்படுத்தும் நடை.
அந்த எழிலார் வீரனைத்தான் அவள் காதலித்தாள். அவனும் அவ்வாறே தன்னை அவளிடம் ஒப்படைத்திருந்தான். இந்த ஒப்பந்த ஏட்டில் அவளது கடைவிழியும் அவனது காந்த விழியும் கையெழுத்திட்டு நாட்கள் பலவாயின. பிரிவெனும் கோடை வெப்பம் “தழுவுதல்” என்னும் குளிர்காலத்திற்குக் குறுக்கே நின்றது. யாருமறியா வண்ணம் எப்படியும் ஒரு நாள் சந்தித்துவிட வேண்டுமென்று இருவருமே துடித்தனர்.
வீட்டுக்கருகேயுள்ள அழகிய தென்னைத் தோப்பு. நிலவொளியோ பாலைப் பொழிந்து கொண்டிருக்கிறது, நிலமகள் மீது! அன்னை, தந்தை, அண்ணன், தம்பி அனைவருமே ஆழ்ந்த உறக்கத்திலிருக்கின்றனர். அவள் மட்டும், ஆணிகள் நீட்டிக் கொண்டிருக்கும் பலகையில் படுத்தவளைப்போல உறக்கமின்றித் தவிக்கிறாள்; மெல்ல எழுகிறாள். “அனைவரும் தூங்குகிறார்கள், அஞ்சாமல் செல்லலாயாக!” என்று அகல் விளக்குத் தனது சுடர் நாக்கை அசைக்கிறது. கொல்லைப்புறக் கதவு திறக்கப்படுகிறது. முல்லைக்கொடிப் பந்தலைத் தாண்டும் வரையில், மூச்சுக்கூட வெளிப்படாமல் ஓசையின்றி நடக்கிறாள்.
பின்னர், அவள் கால்கள் அந்தத் தென்னைத் தோப்பை நோக்கி நடக்கின்றன. அன்று மாலை, அவன் விழிகாட்டிய குறிப்பு, “அந்தத் தோப்பில் காத்திருப்பேன் - கண்மணியே வந்திடுக” என்ற மொழியைப் பேசியதாகவே அவள் தீர்மானித்துக் கொண்டிருந்தாள். மண் கலயங்களைத் தலையில் தூக்கிக் கொண்டு சந்தைக்குச் செல்லும் குயவனைப்போல், குலைகளைத் தாங்கிக் கொண்டு தென்னை மரங்கள் காட்சியளிக்கும் அந்தச் சோலையில், தன்னை மடியில் தாங்கிட அந்த மறவன்
இன்னும் வரவில்லையே என்று ஏங்கினாள். ஏக்கத்துடன் அவள், வளைந்த தென்னையொன்றில் சாய்ந்தவாறு நிலவை நோக்கினாள். அந்தத் தெங்கிற்கு இரு கை முளைத்ததோ - அவைதான் அவளை அப்படியே அணைத்துக் கொண்டதோ - என்று அவள் வியப்படையத் தொடங்குவதற்குள்ளாக, அவன்தான் வந்துவிட்டான் என்பதை அவள் உணர்ந்து கொண்டாள். இருவரிடையே சிறிது நேரம் பேச்சில்லை. இதயங்கள் இரண்டும் அதிர்ந்தன.
“நீங்கள் வந்ததை யாரும் பார்க்கவில்லையே?”
“இல்லை! உன்னைத்தவிர யாரும் பார்க்கவில்லை! நீ வந்ததை யாராவது பார்த்திருப்பார்களோ?”
“இல்லையத்தான்! இல்லத்தில் ஒளிவிடும் அகல் விளக்குக்கும் என் இதயத்தில் ஒளிவிடும் இந்த அணையா விளக்குக்கும் தவிர, வேறு யாருக்கும் நான் இங்கு வந்தது தெரியாது.”
“ஏன் தெரியாது? இதோ தென்னை! அதோ புன்னை! மேலே நிலவு - இவைகளுக்கெல்லாம் தெரியாதா?”
“என் வீட்டாருக்கோ, இந்த ஊர் மக்களுக்கோ நம் காதல் செய்தி தெரியாது என்பதைத் தான் சொல்லுகிறேனே. உங்கள் வாயிலாக யாரேனும் அறிவாரோ அதுதான்?”
“நிச்சயமாக யாரும் அறிய மாட்டார்கள்.”
உரையாடல் வேறு திசையில் திரும்பியது. நிலவுப் பெண், தன் முகத்தை முகிலெனும் துகிலால் மறைத்துக் கொண்டாள்.
பொழுது விடிந்தது. யாருக்கும் தெரியாதென்று இருவரும் எண்ணியிருந்த அந்தக் காதல் சந்திப்பு, ஊர் முழுதும் தெரிந்துவிட்டது.
அவள் தோழி, அவளை அணுகி, தென்னந்தோப்புச் சந்திப்புப்பற்றி தெருக்கோடி மண்டபத்தில் ஐந்தாறு பெண்டிர் பேசிக் கொண்டிருந்ததை விளக்கமாக உரைத்தாள்.
அதற்கு, அவள் வேதனையுடன் பதில் கூறினாள்:
“நான் என் காதலரைச் சந்தித்தது ஒரு நாள்தான் - அடடா! அதற்குள் இந்தச் செய்தி, சந்திர கிரகணம் ஏற்பட்டால் எல்லோருக்கும் தெரிவதுபோல் பரவி விட்டதே!”
சூரியனையோ, சந்திரனையோ பாம்பு விழுங்குவதால்தான் கிரகணம் ஏற்படுகிறது என்று சொல்லப்படுகிறதல்லவா? வானநூலோர் பூமியும் கதிரவனும் சந்திரனும் - வானில் ஒரு குறிப்பிட்ட நிலையில் வரும்போது கிரகணம் ஏற்படுவதைக் கண்டறிந்துள்ளனர். பழைய நாட்களிலேயே கோள்களின் நிலையை ஆராய்ந்து விண்வெளி நுணுக்கங்களை வெளியிட்ட மேதைகள் இருந்திருக்கின்றனர். அப்படிக் கண்டு தெளிந்த ஓர் உண்மைதான் கிரகணம்.
அந்தக் கிரகணம் பிடிப்பது எப்படி ஊருக்கெல்லாம் பரவலாகத் தெரிந்து விடுகிறதோ, அதுபோல அவள், தன் காதலனை ஒரு நாள் சந்தித்த நிகழ்ச்சியும் விரைவில் ஊர்முழுக்கப் பரவி விடுகிறதாம். அதற்கு இதோ குறள்.
“கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று.”
அதிகாரம் - 115 - அலர் அறிவுறுத்தல்; பாடல் - 1146
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்