பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 54 / 300

புறங்குன்றி கண்டனையார்

அச்சுப் பக்கம் 125126 · ஸ்கேன் 142143 · அதிகாரம் 28 (கூடா ஒழுக்கம்) — குறள் 277

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour illustration showing a turbaned man framed within an eye-shaped motif, with crossed rod/spear-like forms and a smaller two-person inset scene.

கொம்பு விட்டுக் கொம்பு தாவும் குரங்கினைப்போல், கொள்கை விட்டுக் கொள்கை தாவும் மனிதர்கள் சிலரில், அந்த மருத்துவ சிகாமணியும் ஒருவர். உண்மையில் மருத்துவத்தில் அவர் சிகாமணி அல்ல. பெயர்தான் அவருக்குச் சிகாமணி. அந்தப் பெயர் மருத்துவத் தொழிலுடன் ஒட்டிக்கொண்டு ‘மருத்துவ சிகாமணி’யென அழைக்கப்பட்டார். மருந்து தயாரித்து விற்பனை செய்யும் வாணிபமும் அவருக்கு உண்டு. தான் தயாரிக்கும் மருந்துகளே உயர்ந்தவை; உன்னதமானவை; நேர்த்தியானவை என்பதைக் காட்டிக்கொள்ள, அவர் ஒரு மலிவான வியாபார தந்திரத்தைக் கையாண்டு வந்தார். அதாவது, தன்னைத்தவிர மற்றுமுள்ள மருத்துவ வணிகர்கள் அனைவருமே நேர்மையற்றவர்கள் - கலப்படம் செய்து மக்களின் உயிரோடு விளையாடுகிறவர்கள் என்று பிரச்சாரம் செய்து வந்தார்.

யாரைப் பற்றியாவது, அல்லது எதைப் பற்றியாவது முந்திக்கொண்டு ஒரு குறையைச் சொல்லாவிட்டால், அப்படிச் சொன்னவரைக் குறைகளே இல்லாத பத்தரைமாற்றுத் தங்கமென ஊரார் எண்ணிக் கொள்வார்களாம்! அந்த வகையைச் சேர்ந்தவர், மருத்துவ சிகாமணி!

அவருக்கு எப்படியாவது அரசாங்கப் பதவியொன்றில் அமர்ந்து புகழ்பெற வேண்டுமென்று ஓர் ஆசை. அதற்குத் திட்டமிட்டே அவர் அரண்மனை விசுவாசிகள் ஒருவரைத் தோழமை கொண்டு, அவர் வாயிலாகத் தன் ஆவலை அரசின் காதில் போட்டு வைக்குமாறு கேட்டுக் கொண்டார். அந்த விசுவாசிகள், சிகாமணிக்கு

மாத்திரமல்லாமல், தனக்கும் சேர்த்து அரசிடம் ஒரு பதவியைக் கோரினார். அடுத்த நொடியிலேயே விசுவாசிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

சிகாமணியின் நடவடிக்கைகளையும் அரசுத் துறையினர் கூர்மையாக நோக்கிக் கொண்டிருந்தனர். ஒரு நாள் சிகாமணியின் மருந்தகத்தின் முன்னால் பெருவாரியாக மக்கள் கூடியிருந்தனர். அரசுத் துறையினர் அங்குள்ள மருந்துகளைச் சோதனையிட்டுக் கொண்டிருந்தனர். மருந்துகளில் அவர் கலப்படம் செய்து விற்றது கையும் மெய்யுமாகக் கண்டுபிடிக்கப்பட்டதாலேயே அந்தச் சோதனை நடைபெற்றது. மக்கள் பேசிக் கொண்டார்கள்.

“எவ்வளவு உத்தமராக, ஒழுக்கசீலராக இவர் இதுவரையில் காணப்பட்டார். இப்போது உண்மை அம்பலமாகிவிட்டதே!”

“தன் குற்றத்தை மறைக்க ஊரார்மேல் குற்றம்கூறி வாழ்ந்தார். கள் அருந்துவது தீது என்று அன்று கடல் மடை திறந்தாற்போல் பேசிவிட்டு, அன்றிரவு இவரே கள் அருந்தியதை நானே நேரில் பார்த்திருக்கிறேனே!”

இப்படிப் பல்வேறு கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டபோது, இடையே ஒரு பெரியவர் குறுக்கிட்டுச் சொன்னார்:

“புறத்தில் குன்றிமணியைப் போலச் செம்மையானவர்களாகக் காணப்பட்டாலும், அகத்தில் அந்தக் குன்றிமணியின் மூக்கைப் போலக் கறுத்திருப்பவர் களும் இந்த உலகில் இருக்கிறார்கள் என்று வள்ளுவர் கூறியிருப்பதை மறந்து விட்டார்களோ? அதற்கு எடுத்துக் காட்டுத்தான் இந்த மருத்துவ சிகாமணி.”

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியார் உடைத்து.

அதிகாரம் - 28 - கூடா ஒழுக்கம்; பாடல் - 277

காப்பக விவரிப்பு: Small printed Valluvar-monument illustration centered below the authority/song metadata.

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்