பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 53 / 300

கண்ணும் கொளச்சேறி

அச்சுப் பக்கம் 123124 · ஸ்கேன் 140141 · அதிகாரம் 125 (நெஞ்சொடு கிளத்தல்) — குறள் 1244

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour domestic illustration showing an older woman at left, a younger woman carrying stacked pots, and another woman holding a child.

“தங்கச்சி, எங்கேயம்மா போகிறாய்?”

“என்னக்கா, இப்படியொரு கேள்வி கேட்கிறாய்? காலையிலிருந்து காடு கழனியில் உழைத்துக் கொண்டிருக்கும் நமது அத்தானைப் பார்ப்பதற்குத்தான் போகிறேன்.”

“ஓ! நான் ஏதோ உளறுகிறேன். இதோ அவருக்காகத்தான் அமுதம் போல உணவு சமைத்து வைத்திருக்கிறேனே. அதை நீதான் எடுத்துக் கொண்டு போகப் போகிறாய் என்று தெரிந்திருந்தும் ஏதோ குழப்பத்தில் இப்படி ஒரு கேள்வி கேட்டுவிட்டேன். நான் ஒரு பைத்தியக்காரி!”

“அத்தானைக் கொஞ்ச நேரம் பிரிந்திருந்தால்தான் உனக்குப் பைத்தியமே பிடித்துவிடுமே அக்கா!”

“போடி குறும்புக்காரி! அக்காளிடம் பேசுகிறோம் என்றுகூடத் தெரியாமல் கேலியும் கிண்டலும் செய்வதைப் பார்!”

“நான் சின்னஞ்சிறுமிதானே அக்கா! வேடிக்கையாகப் பேசக்கூடாதா? உன் அத்தானைப் பற்றிப் பேசினால் உனக்குப் பிடிக்காமலிருக்காது. வெட்கப் படுவது போல நடிக்கிறாய். இல்லையா அக்கா?”

“சரி! சரி! சோறும் சாறும் ஆறிவிட்டுப் போகிறது. எடுத்துக்கொண்டு புறப்படு. வேலை முடிந்ததும் அவரை விரைவில் வரச்சொல்லு.”

“பறந்து வரச் சொல்லட்டுமா? அக்கா! இரண்டு இறக்கைகள் இருந்தால் கொடு என்னிடம்! அதை அத்தானுக்குக் கட்டிவிட்டுப் பறந்து வரச் சொல்லுகிறேன்.”

இவ்வாறு கூறியவாறு அந்தச் சிறுமி சோற்றுக் கூடையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டாள். அவள் நடந்து செல்வதைப் பார்த்தவாறு திண்ணையோரம் நின்று கொண்டிருந்த அவள் அக்காளின் காதில் உள்ளே, குழந்தை அழும் ஒலி கேட்டது. “அப்பா! அப்பா!” என்று அழுதுகொண்டே அவன் தத்தி நடந்து திண்ணைக்கு வந்துவிட்டான். அவள் அவனைத் தூக்கியும்கூட அழுகை ஓய்ந்திடவில்லை. “அப்பா! அப்பா! அப்பா வேணும்!” என்று உரக்கக் கத்தத் தொடங்கினான்.

தெருவில் போய்க்கொண்டிருந்த தங்கச்சியைக் குரல் கொடுத்து அக்காள் அழைத்தாள். “என்ன? ஏன் என்னைக் கூப்பிட்டாய்?” என்றவாறு சிறுமி, திரும்பி ஓடிவந்தாள்.

“இந்தா! இவனைக் கொஞ்சம் அவன் அப்பாவிடம் தூக்கிக்கொண்டு போ! அவரைக் காணவேண்டுமென்று என்னைப் பிடுங்கித் தின்கிறான்!” என்று, குழந்தையையும் தங்கையிடம் கொடுக்கிறாள். குழந்தை முகத்தில் மலர்ச்சி. சிறுமி, அந்த அரும்பைச் சுமந்துகொண்டு, அக்காளிடம் விடைபெற்று ஓடுகிறாள்.

இந்தக் காட்சியையும், அக்காள் தங்கை உரையாடலையும், எதிர்வீட்டுப் பலகணியிலிருந்தவாறு ஒருத்தி கவனித்துக் கொண்டிருக்கிறாள். அவள், காதலனைப் பிரிந்து கலங்கித் தவிக்கும் கயல் விழியாள்.

எதிர் வீட்டில் அத்தானுக்குச் சோறு கொண்டுபோகும் சிறுமியைப்போல், அந்தக் காதலியின் நெஞ்சம் அவள் காதலனைத் தேடிச் செல்கிறதாம்! அப்பாவைக் காணவேண்டும் என்று அடம் பிடித்து அழுதிடும் குழந்தையைப் போல், காதலனைக் காணவேண்டுமென்று கண்கள், அவளைப் பிடுங்கித் தின்கின்றனவாம். அதனால் அவள், தன் நெஞ்சத்தைப் பார்த்துக் கெஞ்சுகிறாள்:

“என் நெஞ்சே! நீ அவரிடம் போகும்போது என் விழிகளையும் உடன் எடுத்துக் கொண்டு செல்க! அவரைக் காணவேண்டுமென்று என் கண்கள் என்னைப் பிடுங்கித் தின்கின்றன.

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னும் அவர்க்காணல் உற்று.

அதிகாரம் - 125 - நெஞ்சொடு கிளத்தல்; பாடல் - 1244

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்