பொருளடக்கம் 52 / 300
பகல்வெல்லும் கூகையை
அச்சுப் பக்கம் 121–122 · ஸ்கேன் 138–139 · அதிகாரம் 49 (காலம் அறிதல்) — குறள் 481
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Large colour illustration of an owl on a tree, with two smaller crows visible at right.
இருள் சூழ்ந்த நேரம். இயற்கைப் பெண், தன் ஒளி பொருந்திய முகத்தைத் திருப்பிக்கொண்டு கரிய கூந்தலின் அழகைக் காட்சியாக்கி உயிரினங்களை மயங்கச் செய்தும் இன்பக் கூத்து ஆடச் செய்தும் சோர்ந்து போய்த் தூங்கச் செய்தும் இடையிடையே நட்சத்திரப் பற்கள் காட்டிச் சிரித்துக் கொண்டு இருந்தாள். காற்றில் மெல்ல அசையும் இலைகளின் இசையொலியைக் கிழித்துக் கொண்டு, அடிக்கடி ஒரு பறவையின் ஆரவாரச் சத்தம் கேட்டவண்ணமிருந்தது. அந்தப் பேரொலி கிளம்பும்போது மட்டும், மரக்கிளைகளில் உறங்கிக் கொண்டிருக்கும் மற்ற பறவைகள் சிறிது இமை திறந்து, சிறகைச் சிறிது தூக்கித் தங்கள் சிறிய கால்களைக் கிளைகளில் அழுத்தமாக ஊன்றிக்கொண்டு படபடத்துப் பின்னர் அமைதிபெற்றுக் கொண்டிருந்தன.
தன் ஆரவாரக் குரல் கேட்டுப் பறவைக் குலமே நடுங்குவது கண்டு அந்தக் கோட்டான் பறவைக்கு ஒரே மகிழ்ச்சி; அடர்ந்த அந்தக் காட்டில் உள்ள வண்ண வண்ணக் கிள்ளைகளும் எண்ணத் தொலையாப் புறாக்களும் எல்லாப் பறவைகளுமே தன் அடிமைகள் - தன்னை எதிர்க்கும் வலிவற்றவை - ஆற்றலற்றவை என்ற ஆணவ நெஞ்சத்தோடு, கோட்டான் தொடர்ந்து கத்திக் கொண்டேயிருந்தது. அந்தப் பயங்கர ஒலியைக் கேட்டு மற்ற பறவைகள் மிரட்சி கொள்வதிலே கோட்டானுக்கு ஒரு
கொண்டாட்டம். கோட்டான் அமர்ந்திருந்த உச்சிக் கிளைக்குக் கீழே அடிக்கிளையொன்றில் இரண்டு காக்கைகள் ஒன்றுக்கொன்று மெல்லப் பேசிக் கொண்டன:-
“என்ன இது, இந்தக் கோட்டானின் கொட்டத்தை அடக்கவே முடியாதா?”
“பொறுமையாக இரு. காலம் வந்தே தீரும்.”
“காலம் எப்போது வருவது? நம் கவலை என்றைக்குத் தீருவது?”
“அடி அசட்டுப்பெண்ணே! எதற்கும் காலம்-நேரம் பார்க்க வேண்டாமா?”
“போ அத்தான் - உனக்கு வீரமே இல்லை! எந்த ஆளுட்காரனிடம் போய்க் காலமும் நேரமும் கேட்கப் போகிறாய்? இந்தப் பாழுங் கோட்டானை அடக்க உனக்குத் துணிவே கிடையாது!”
காக்கைகள் இப்படிப் பேசிக் கொண்டிருந்தபோது, உச்சிக் கிளையிலிருந்து கோட்டான் உறுமிற்று. “ஏய் யாரங்கே? என்ன கூச்சல்?” கூகையின் அந்த அதிகாரக் குரல் கேட்டுக் காக்கைகள் வாய் பொத்திக் கொண்டன. ஆனால், அவைகளின் விழிகளில் மட்டும் கனல் பொங்கியது. பிறகு ஒரே அமைதி. நீண்ட நேரத்துக்குப் பின்னர், பெண் காக்கையிடம் ஆண் காக்கை, காதோடு காதாகச் சொல்லிற்று, “நான் சொன்ன காலம் வரப்போகிறது பார்!” என்று.
விடிவெள்ளி முளைத்தது. உதயக்கதிரவன் ஒளிக்கரங்களை நீட்டியவாறு எழுந்தான். எங்கும் தகதகாயம். வெளிச்சப் பெருவெள்ளம். “நான் சொன்ன காலம் வந்துவிட்ட” என்று கூறியவாறு, ஆண் காக்கை உச்சிக்கிளை நோக்கிப் பறந்தது. கோட்டான் மீது பாய்ந்தது. தாக்குண்ட அந்தக் கூகை, மயங்கிக் கீழே விழுந்தது. காக்கை வென்றது. காலம் பார்த்துத் தாக்கியதால் கிடைத்த வெற்றி அது.
பகையை வெல்வதற்குக் காலமும் நேரமும் கணக்கிடப்பட வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
மாஸ்கோ வரையில் ஹிட்லரின் படைகள் நுழைந்தபோது, பனிக்காலம் வரும்வரையில் காத்திருந்து இறுதியில் வெற்றி பெற்றார்கள் அல்லவா, சோவியத் நாட்டுக்காரர்கள்! காலத்தின் அருமையை விளக்குவதே இந்தக் குறள்:
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
அதிகாரம் - 49 - காலம் அறிதல்; பாடல் - 481
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்