பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 51 / 300

காதலர் இல்வழி

அச்சுப் பக்கம் 119120 · ஸ்கேன் 136137 · அதிகாரம் 123 (பொழுதுகண்டு இரங்கல்) — குறள் 1224

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour illustration showing a royal/warrior couple with spears and weapons in the background.

அவள் இளவரசி; அழகின் உறைவிடம். அவளை மணந்துகொள்ளப் பக்கத்து நாட்டு மன்னன் விரும்பினான். அவளோ தன் நாட்டு தளபதியிடம் இதயத்தைப் பறி கொடுத்திருந்தாள். இளவரசியின் எண்ணத்தைத் தெரிந்து கொண்ட அவள் தந்தை, பக்கத்து நாட்டு மன்னனுக்கு உண்மையை விளக்கி மடல் விடுத்தான்.

அவனோ, அனல் விழிகொண்டு போர்முரசு கொட்டுமாறு ஆணையிட்டான்.

இளவரசியின் தந்தையும் தன் படை வீரர்களைத் தயார்ப்படுத்தினான். பக்கத்து நாட்டுப் படைகளின் முற்றுகையை நீண்ட நாட்கள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. கோட்டைக் கதவுகளை உடைத்துப் பகைவர்கள் உள்ளே நுழைந்தனர். கடும்போர் நடைபெற்றது. இளவரசியும் வாளெடுத்துப் போர் புரிந்தாள். அவள் கண் எதிரிலேயே அவள் தந்தையின் தலை வெட்டுண்டு விழுந்தது. இறுதியில் அவளும் சிறை

பிடிக்கப்பட்டாள். அவள் இனிய காதலன் - அந்த நாட்டுத் தளபதியின் முடிவு என்னவென்று தெரியவில்லை. அவனை நினைத்து அவள் அழுது புலம்பினாள். சிறை பெடுத்துச் செல்லப்பட்ட அந்த செந்தமிழ்ச் சித்திரத்தைப் பகைமன்னன் எவ்வளவோ வற்புறுத்தித் தன்னை மணக்குமாறு வேண்டினான்; அச்சுறுத்தினான்; பயனில்லை. எனவே, தனக்குப் பயனில்லாத அந்த அழகு அழியட்டும் என்று தீர்மானித்தான். அந்தக் கொய்யாக் கனியைக் கொலைக்களம் கொண்டுசென்று வெட்டிப் போடுமாறு உத்தரவிட்டான். அந்த இன்பத்தின் வடிவத்தை, பேரழகுப் பெட்டகத்தைக் கொலைக்களத்தில் நிறுத்தினர். கொடுவாட்களுடன் அவளைக் கொல்லப் பகைவர்கள் நெருங்கினர். தன் உயிர் போவதை எண்ணித் துடித்தது மட்டுமல்ல; தன் உயிரினைய காதலனையும் காணாமல் சாகப்போகிறோமே என எண்ணி அவள் துடித்தாள். கொலை வாட்கள் ஓங்கி உயர்ந்தன. அப்போது ‘நிறுத்துங்கள்’ என்ற ஒரு குரல்! அனைவரும் திரும்பிப் பார்த்தனர். இளவரசியின் காதலன் வீராவேசமாக எதிர் வந்து நின்றான்.

“அத்தான்!” என அலறினாள் அவள்!

“அஞ்சாதே! உன்னைச் சிறையிட்டுக் கொண்டு வந்த பகை மன்னன் இப்போது சிறையில் கிடக்கிறான். எதிர்பாராமல் நம் நாட்டை வளைத்து வெற்றி கண்ட அந்த வீணனை வீழ்த்த, நான் தந்திரமாகக் கோட்டையைவிட்டு வெளியேறி நமது நாட்டுப் படைகளுடன் இங்கு வந்து பகைவனை முறியடித்துவிட்டேன்” எனக் கூறி, அவளைத் தழுவிக் கொண்டான். கொலையாளிகள் சிறைப்பட்டனர். வெற்றி வீரனின் தோளில் சாய்ந்தவாறு அந்தத் தோகை தன் நாட்டுக்குத் திரும்பினாள். அவள் விரும்பியவாறே மணவிழா நடந்தது. அரசப் பொறுப்பை தளபதியே ஏற்றுக் கொண்டு மன்னனானான். இன்ப நாட்கள் தொடர்ந்தன. இடையிலே அரசு அலுவல்கள் காரணமாக அவன் இரண்டொரு கிழமைகள் அடுத்த நாடுகளுக்குச் செல்ல நேரிட்டது. அவன் சென்று திரும்பியதும் அவள் ஓடிச் சென்று அவன் தோளில் தொத்திக் கொண்டாள்.

“கண்ணே, பிரிவு உன்னை மிகவும் துன்புறுத்தி விட்டதா?” எனக் கேட்டான் அவன்!

“அத்தான்! நீங்கள் என்னருகே இல்லாதபோது ஒவ்வொரு மாலைப் பொழுதும் எப்படி வந்து தெரியுமா?”

“எப்படி வந்தது?”

“அன்று பகை நாட்டுக் கொலைக் களத்தில் எதிரிகள் வாட்களை ஓங்கி என்னை நோக்கி வந்தார்களே; அதைப் போல ஒவ்வொரு நாள் மாலைப் பொழுதும் என்னை நோக்கி வந்தது.”

“அடி என் தங்கமே!” என்று அவன், அவளை மடியில் சாய்த்துக் கொண்டு முத்தமாரி பொழிந்தான்.

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து ஏதிலர் போல வரும்.

அதிகாரம் - 123 - பொழுதுகண்டு இரங்கல்; பாடல் - 1224

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்