பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 50 / 300

செவியிற் சுவையுணரா

அச்சுப் பக்கம் 117118 · ஸ்கேன் 134135 · அதிகாரம் 42 (கேள்வி) — குறள் 420

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour illustration showing two men in court/ceremonial dress, one holding a chain or ornament.

கண்ணைக் கவரும் இசையரங்கம்! மண்ணையாளும் மன்னவனும் அவன் மன்றத்துப் பெருமக்களும் வீற்றிருக்கின்றனர். எண்ணையும் எழுத்தையும் தந்த தாய்மொழி, இசைக்கோர் இலக்கணத்தையும் வழங்கி, விண்ணை எட்டும் புகழைப் பெற்றிருப்பதை எடுத்தியம்பும் ஏற்றமிகு இசைக் கலைவாணர், அரங்கிலமர்ந்து அமுதமழை பொழிந்து கொண்டிருந்தார். அருவியின் ஆலோலம்! தென்றலின் தெம்பாங்கு! குயிலின் தாலாட்டு! சிற்றாறு பாடுகிற சிந்தோ? செந்தமிழ் மகளிர் வீசி ஆடுகிற மலர்ப்பந்தோ? வியப்பும் வினாக்குறியும் ஒன்றையொன்று முந்தும் வண்ணம் அமைந்தது அந்த இசை நிகழ்ச்சி. குரல் வளமோ குழல் வளம் போல! குழைவு, நெளிவு, ஏற்றம், இறக்கம் எல்லாமே முழுப் பொருத்தம்.

சீரிளமைத் திறம் கொண்ட தமிழன்னையை வாழ்த்தி வணங்கித் தொடங்கிய இசை நிகழ்ச்சியில் எடுப்பும் தொடுப்பும் முடிப்பும் இனிமை மேவிட அமைந்தன எல்லாப் பாடல்களிலுமே!

“அத்தர் புனுகு சவ்வாது இன்னும் எத்தனை நறுமணம் தேடுகிறோம்! செத்தபின் வருமணம் தாங்காமல் எத்தனை காதம் ஓடுகிறோம்?”

என்ற தத்துவப் பாடலை உருக்கம் கனிந்திட அவர் பாடிய போது, அந்த மன்றமே மயங்கிக் கிடந்தது என்றுகூடக் கூறலாம்.

அதையும் பாடிவிட்டு, உடனே அந்த இசைவாணர்

“நிலையாமை வாழ்க்கை யென நைந்து நெற்பதராக மாறுவது மடமை!”

என்று பாடியவுடன், “ஆகா! ஆகா!” என அந்த அரங்கில் உள்ளோர் பாராட்டித் தலையசைத்தனர். இசைவாணரின் உற்சாகம் பெருகிற்று! தான் பாடிய இரண்டு வரிகளின் தொடர்ச்சியாக,

“நிலையானது தான் என நினைந்து முட்புதராக வாழ்வது வேறோர் கொடுமை!”

எனப் பாடி முடித்தபோது, கையொலியால் மாமன்றம் அதிர்ந்தது. இறுதியாக நாட்டு வாழ்த்துடன் நிகழ்ச்சி முடிவுற்றது. அரங்கின் முன் அமர்ந்து, அரசன், மேடையில் உள்ள இசை மேதையை வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தான். தன் இசையில் வேந்தன் இதயத்தைப் பறி கொடுத்திருக்கிறான் என வாணனும் மகிழ்ந்திருந்தார். மன்னனுக்கருகே பொன்னுருக்கிய தட்டுக்களில் சுவைமிகு பண்டங்கள் வைக்கப்பட்டிருந்தன. இசையரங்கைப் பார்த்த வாறு, அருகில் உள்ள சுவையுணவை வாய்க்குள் திணித்துக் கொண்டிருந்தான் மன்னன். அதிரசம், அக்காரவடிசல், தேன்குழல், தினைமாவு அனைத்தும் அவன் வயிற்றுக்குள் தொடர்ச்சியாக ஊர்ந்து கொண்டிருந்தன. இசை நிகழ்ச்சி முடிந்ததும் வாணன் எழுந்து அவையை வணங்கி விட்டு அரசனிடம் வந்து குனிந்து நின்றார். முத்தாரமொன்றை இசைப்புலவனின் கழுத்தில் அணிவித்தான் மன்னன்.

“மண்டிலமாளும் மன்னர் மன்னவ! முத்தாரம்நீர் வழங்குகிறேன்; முத்தான உமது வாயாலே ஒரு பாராட்டை வேண்டுகின்றேன்.”

என்றார் இசைவாணர்.

மன்னன் கூறுகின்றான்:

“பாராட்ட வார்த்தைகளே இல்லை! அதிரசம் ஆறு தின்றேன் - ஆயிரம் தின்றாலும் தெவிட்டா தென்பேன். தேன் குழல் தேவலோகத்து அமிழ்தத்தையும் வென்று விடும்! தினைமாவு தான் என்ன? முருகனுக்கு வள்ளி வழங்கியதை விடச் சுவை மிகுதியானது என்பேன்!”

இசை பற்றிக் கேட்டால், இவன் தான் விழுங்கிய இரைபற்றிக் கூறுகிறானே என்று - இறையை நொந்து கொண்டார் இசை மேதை, இவனை ஏன் படைத்தான் என்று! இத்தனை நேரம், மன்றத்தில் கடமைக்காக அமர்ந்திருந்த மன்னன், வகைவகையான தினிகளுக்காக வாயைத் திறந்திருக்கிறானே தவிர, செந்தமிழ் இசைகேட்கச் செவியைத் திறந்தானில்லை. இந்த மனிதனைப் பற்றி அறிந்த வள்ளுவர், பொறுமையிழந்து சீறுகிறார்!

செவிச் சுவையில்லாமல் வாயின் சுவை மட்டும் உணருகிற மக்கள் இருந்தால் என்ன? இறந்தால் என்ன? என்று சினம் பொங்கிடக் கேட்கிறார்.

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்.

அதிகாரம் - 42 - கேள்வி; பாடல் - 420

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்