பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 49 / 300

அ. கோட்டுப்பூச் சூடினும் / ஆ. நினைத்திருந்து நோக்கினும்

அச்சுப் பக்கம் 115116 · ஸ்கேன் 132133 · அதிகாரம் 132 (புலவி நுணுக்கம்) — குறள் 1313, 1320

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour illustration showing a woman in the foreground and a man behind her in a wooded setting.

பெண்ணைக் கொடியெனக் கூறினார் - ஏன்? துவண்டிடும் மேனியர் என்பதாலா?

வளைந்து நடப்பதிலும் மெல்லியலார் என்பதாலா? இல்லை - இல்லை! கொடி ஒரு மரத்தைத் தழுவிக் கிடப்பதுபோல், பெண்ணுக்கும் தான் படர்ந்து கிடக்க ஒரு துணை தேவை. கொடி படர்ந்த மரத்திற்கே தனி எழில்தான்! கொடி படராத மரங்கள், நிர்வாண மனிதர்களைப்போல!

கோட்டையின் உச்சியிலே கொடி பறந்தால்தான் கோட்டைக்குப் பெருமை! கொடிக்கும் கோட்டையின் உச்சியிலே பறக்கும்போதுதான் அதிக மதிப்பு!

ஆணின் இருதயக் கோட்டையிலே ஒரு பெண்கொடி பட்டொளிவீசிப் பறந்து கொண்டேயிருக்க வேண்டும்!

வள்ளுவனார், மாந்தர்க்கு இல்லறத்தை வலியுறுத்தியதன் வாயிலாகவும் - காமத்துப்பாலை வழங்கியதன் வாயிலாகவும் - இந்த உண்மையைத் தெளிவாகவும், தெளிதேனினும் சுவையாகவும் விளக்கியிருக்கிறார். அப்பப்பா! அவர் படைத்துள்ள காதற் குறள்கள் எத்தனை எத்தனை வகை! அத்தனையும் தமிழ்ப் பண்புக்கு ஏற்ற வகையில் அளிக்கும் உவகை!

ஊடலுக்குப் பின் கூடலே தனிச் சிறப்புடையது என்பது குறளாரின் எண்ணம்; அனுபவமுள்ளோருக்குத் தெரிந்த உண்மையுங்கூட!

அத்தகைய இரு இளம் புறாக்களை, இதோ சந்திக்க விடுகிறார் பாருங்கள்!

கொடிமலர் சூடினால்தான் கோதை கோபிப்பாளோ என எண்ணி, அவன் கிளைகளில் மலர்ந்த பூக்களைச் சூடிக்கொண்டு வருகிறான். அப்போதும், அவள் அவனைப் பார்த்து, “நீர் யாரோ ஒருத்திக்கு உமது அழகைக் காட்டுவதற்காக இதைச் சூடினீர்” என்று சினம் கொள்கிறாள்.

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று.

கொஞ்சித் தாவி அணைத்திடும்போது தன் கோமளவல்லியின் முகத்தை அவன் சரியாகப் பார்த்திட இயலாது. ஏனெனில் இருவரின் முகமும் ஒட்டிக் கிடக்கும் வேளை அது! நான்கு கண்களுமே பார்வையற்றுப்போகும் நேரம்; அதனால் அவன் கண்டதில்லை, ‘அக்கால்’ முகத்தை! இப்போதோ, அவள் விலகி நின்று பேசுகிறாள். அதனால் அவன், அவள் முகத்தைக் கூர்ந்து கவனிக்கிறான். கோபத்திலும்கூட அவள் முகம் புது எழில் கொட்டுகிறது. சினத்தால் துடிக்கும் செவ்விதழ்களிலே, அவளையுமறியாமல் புன்னகை மின்னலிடுகிறது! அந்தப் பொலிவை இரசிக்கிறான்; புது இன்பம் காணுகிறான் காளை! கண் வழியே கள் பருகுகிறான் - வைத்த கண்ணைப் பெயர்த்தெடுக்க முடியாமல் தவிக்கிறான். அவளோ ஊடலின் உச்சிக்குப் பயணம் போகிறாள்.

“என்னையே இப்படி உற்றுப் பார்க்கிறீரே; காரணம் என்ன? யாருடைய அழகோடு என்னை ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள்?” என்று கோபிக்கிறாள். என்னதான் செய்வான்; பாவம், அவன்! பார்த்தாலும் குற்றம்; பார்க்காவிட்டாலும் “அவ்வளவு வெறுப்பா?” என்று குற்றப் பத்திரிகை வாசிக்கப்படும்! இந்த நிலையில் உள்ள ஒரு காதலனைப் பற்றிய குறள் இது.

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யாருள்ளி நோக்கினீர் என்று.

அதிகாரம் - 132 - புலவி நுணுக்கம்; பாடல்கள் - 1313, 1320

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்