பொருளடக்கம் 48 / 300
இனிய உளவாக
அச்சுப் பக்கம் 113–114 · ஸ்கேன் 130–131 · அதிகாரம் 10 (இனியவை கூறல்) — குறள் 100
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Large colour illustration showing an elderly man and a younger companion beside a public gathering with a speaker platform and loudspeakers.
சற்றுக் கண்ணொளி மங்கிய முதியவர் ஒருவருக்குக் காதுகளும் ஓரளவு மந்தம்.
வழியில் அவருக்குத் துணையாக அவரது பேரப்பிள்ளை வந்து கொண்டிருந்தான்.
அறவே அவரது விழிகளின் ஒளி பழுதாகி விடாத காரணத்தால், அவரைக் கரம் பிடித்து அழைத்துச் செல்லவேண்டிய அவசியமில்லை. எனினும் பேரப்பிள்ளை, தன் பாட்டனுக்குத் துணையாக அவர் அருகாமையிலேயே நடந்து கொண்டிருந்தான்.
சிறிது தொலைவில் நூற்றுக்கணக்கில் மக்கள் கூடியிருந்தனர். அந்தக் கூட்டத்தின் நடுவே ஒரு மேடை. அந்த மேடையின்மீது ஒரு மனிதன் நின்று கொண்டிருந்தான். முதியவரின் கண்களுக்குத் தெளிவாகத் தெரியாவிட்டாலும் மேடையில் மனிதன் ஒருவன் இருப்பதும் அவனைச் சுற்றிக் கூட்டம் இருப்பதும் நிழலாட்டம் போல் தென்பட்டன. ஒளியுமிழும் விழிகள் படைத்த அந்த இளைஞனை நோக்கி முதியவர், “அங்கே என்னப்பா கூட்டம்?” என்று வினவினார். இளைஞன், கண்களுக்கு மட்டும் வேலை தராமல், காதுகளுக்கும் வேலை கொடுத்துக் கூர்மையாகக் கவனித்து விட்டு, சிறிது நேரங்கழித்துத் தன் பாட்டனாருக்குப் பதில் சொன்னான்.
“தாத்தா! அங்கே ஒருவன் தோப்பிலே நின்று கொண்டு பழங்களைப் பறிக்காமல் காய்களைப் பறித்துத் தின்று கொண்டிருக்கிறான். அந்தக் காட்சியை மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.”
பேரனின் பதிலைக் கேட்டு முதியவர் வியப்படைந்தார். தன் கையை நெற்றிக்கருகே கொண்டுபோய், கண்களைக் கூர்மையாக்கிக் கொண்டு ஆழமாகப் பார்த்தார்.
“என்னப்பா! என்னைக் கேலி செய்கிறாய்? அங்கு தோப்பு எதுவுமே தெரியவில்லை. மக்கள் கூட்டம்தான் இருக்கிறது. யாரோ ஒருவன் கைகளை மேலும் கீழும் வேகமாக அசைத்துக் கொண்டிருக்கிறான். மரங்களும் இல்லை. காய்களும் இல்லை. கனிகளும் இல்லை. நீ என்னை முழுக் குருடனாகவே ஆக்கிவிட்டாயே!”
பாட்டனின் பதிலைக் கேட்டுப் பேரன் சிரித்துக் கொண்டான். இன்னும் அருகாமையில் சென்றால், அவருக்குத் தான் அளித்த விடைக்கான விளக்கம் கிடைக்குமென்று கருதி, அவரை அந்தக் கூட்டத்தின் பக்கம் அழைத்துச் சென்றான். மேடையில் இருப்பவன் உரக்கப் பேசியது முதியவர் காதிலும் விழுந்தது.
“பொது மக்களே! ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். நம்மை எதிர்ப்பவர்கள் அறிவற்றவர்கள். அவர்களின் பிறவியிலேயே எனக்குச் சந்தேகம். அவர்களை நாட்டில் நடமாட விடுவதே பெருங்குற்றம். கருத்துக்குக் கருத்து மோதவிடு என்றெல்லாம் அவர்கள் பேசுவார்கள். தேவையில்லை. கத்திக்குக் கத்திதான் மோதவேண்டும். அந்த நாய் மனிதர்களின் தலையை வெட்டிக் கடலில் எறியவேண்டும். என்னை எதிர்த்துப் பேசுவோர் யாராயினும் அவர்களை நான் பூச்சி, புழுக்களாகக் கருதுகிறேன்.”
இந்தச் சொற்பொழிவைப் பாட்டனும் பேரனும் கேட்டார்கள். சற்று மந்தமான செவிகளாக இருந்த போதிலும் முதியவர், அவைகளைக் கைகளால் பொத்திக் கொண்டு, “சே! சே! என்ன இழிவான சொற்கள். கருத்தரங்குகள் இப்படியா கெட்டுப் போய்விட்டன” என்று முணுமுணுத்தார்.
“தாத்தா! மரமெங்கே? காய் எங்கே? என்று கேட்டீர்களே, இப்போது நன்றாகத் தெரிகிறதா?”
பேரன், புன்னகை சிந்தியவாறு கேட்டான். முதியவர் வேண்டுமென்றே பேரனைப் பார்த்து, எதுவும் விளங்காதவர்போல், “என்னடா விளையாடுகிறாய்? யாரோ ஒருவர் பேசுகிறார். அவ்வளவுதானே! அவர் எங்கே பழங்களை விட்டுக் காய்களைச் சாப்பிடுகிறார்” என்று கேட்டார்.
“தாத்தா! இனிய வார்த்தைகள் நிறைய இருக்கும்போது, அவைகளை ஒதுக்கி விட்டு, இழிவும் கடுமையும் நிறைந்த வார்த்தைகளைக் கூறுவது, கனியிருக்கும் போது அதனை உண்ணாமல் காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றதாகுமென, இன்று காலையில் எங்கள் ஆசிரியர், குறளுக்கு விளக்கம் அளித்தார். அதற்குச் சரியான எடுத்துக்காட்டு இந்தக் கூட்டம்” என்று பேரப்பிள்ளை கூறியதும் முதியவர் அந்த இளந்தளிருக்கு முத்த மழை பொழிந்தார். அவன் வருங்காலம், வள்ளுவர் வகுத்த வழியில் அமையும் என எண்ணி மகிழ்ந்தார்.
இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
அதிகாரம் - 10 - இனியவை கூறல்; பாடல் - 100
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்