பொருளடக்கம் 47 / 300
அ. வழுத்தினாள் தும்மினேன் / ஆ. ஊடி யிருந்தேமா
அச்சுப் பக்கம் 111–112 · ஸ்கேன் 128–129 · அதிகாரம் 132 (புலவி நுணுக்கம்) — குறள் 1317, 1312
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Large colour illustration of two lovers seated among trees and flowers.
யாராவது நம்மை நினைக்கும்பொழுது தும்மல் வருமென்றும் அப்படித் தும்மிடும்போது வாழ்த்துச் சொல்வது என்றும் ஒரு நம்பிக்கை பழங்காலந்தொட்டுத் தமிழருக்குள் பரவி நிற்கிறது. அந்தப் பழக்கத்தை வைத்து வள்ளுவனார் ஓர் அரிய காதல் காட்சியைச் சித்திரிக்கிறார்.
சோலைப் பசும் புற்றரையிலே - பால் வண்ண உடை உடுத்தி - காதல் மகளும் காதல் மகனும் இன்பமழை மீட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆரத்தழுவி அகமகிழும்போது முகத்தில் பதிந்த முழு நிலவுப் பெண்ணின் கரிய கூந்தலின் சிறு தொகுப்பு, அவளையறியாமல் அவன் மூக்கில் பட்டதாலோ என்னவோ தும்மி
விட்டான். உடனே அந்த அணங்கு அவனை “வாழ்க” என்று வாழ்த்தினாள். வாழ்த்தியவளுக்குத் திடீரென ஒரு நினைவு எழுந்தது.
“ஆமாம் - எந்தப் பெண் மயில் உம்மை நினைத்தாள்? ஏதனால் தும்மினீர்?” என்று ஒரு கேள்வியைப் போட்டு ஊடல் புரிந்தாள்; செல்லமாக அழுதாள்.
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று.
தும்மினால் அருகிருப்போர் வாழ்த்துவர். இது பழைய கால வழக்கம். அந்த வழக்கத்தை வைத்து வள்ளுவர், காதலர்களை ஊடல் புரியவிடும் வித்தையில்; ஊடல் தீர்ப்பதற்கும் அந்தப் பழக்கத்தைப் பயன்படுத்துகிறார்.
துப்புறச் சிவந்த வாயாள் தூய பஞ்சணையின் மீது ஒப்புறக் கணவனுடன் இருந்த காலை, இடையே எழுந்தது ஊடல் என்னும் காதல் திருவிளையாடல். ஒன்பது முத்தம் தருவேன் என்று எட்டு தந்து நிறுத்தினாளோ, அல்லது அவள்தான் எட்டி நின்று விட்டாளோ - கட்டிக் கரும்பே என அழைத்துவிட்டுச் சுவைக்காமல் தயங்குகிறானோ என்று ஊடல் புரிந்தாளோ? “எண்ணி ஏன் ஒன்பது கேட்டான்? எண்ணாமல் பெறுவதற்கு ஏன் அஞ்சினாள்” என்று அவள்தான் மடிவிட்டு எழுந்தாளோ? எப்படியோ உல்லாசபுரியில் ஊடல் நிலவு உதயமாகிவிட்டது. சில விநாடிகள் அமைதி!
காதலன் திடீரெனத் தும்மிவிட்டான். காதலியும் ஊடலை மறந்து, “வாழ்க” என்று வாழ்த்திவிட்டாள்.
“தோற்றாய்! தோற்றாய்!” என்று தோகையின் சிவந்த கன்னத்தைச் சிவக்க வைத்தான். அவளும் பின்னிக் கொண்டாள். தும்மல் அவர்கள் ஊடலைத் தீர்த்து விட்டது.
காதலன் சாதாரணமாகக்கூடத் தும்மியிருக்கலாம். ஆனால், அவளோ மறுநாள் காலை தன் தோழியிடம், தன் காதலனின் திறமைக்கு ஓர் எடுத்துக் காட்டாக,
“நான் ஊடினேன் - அவர் வேண்டுமென்று தும்மினார். நான் ஊடலை மறந்து வாழ்த்தி விட்டேனடி!” என்று கன்னத்தைத் தடவிக்கொண்டே கனிமொழி சிந்துகிறாள். அந்தக் குறள் இதோ:
ஊடி யிருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து.
அதிகாரம் - 132 - புலவி நுணுக்கம்; பாடல்கள் - 1317, 1312
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்