பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 46 / 300

அ. என்பி லதனை / ஆ. தொழுத கையுள்ளும்

அச்சுப் பக்கம் 109110 · ஸ்கேன் 126127 · அதிகாரம் 83 (கூடா நட்பு) — குறள் 828

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour illustration of Gandhi walking with a staff, flanked by inset images of a spinning wheel and a handgun.

சந்தனமெடுத்துச் செய்த உருவமொன்று நடந்து வருகிறது. கையில் ஓர் ஊன்றுகோல். அதுவும், தரைக்கு வலிக்குமேயென்று அஞ்சியோ என்னவோ மெதுவாக ஊன்றப்படுகிறது. அருள் பொழியும் முகம்; கனிவு ததும்பும் விழிகள்; புன்னகையைத் தேக்கியிருக்கும் பொக்கை வாய்ப் பூவிதழ்கள். அவரைச் சுற்றி நூற்றுக்கணக்கானவர் இருக்கின்றனர் என்றாலும், அவர்கள் எல்லாம் பகல் நேரத்து விண்மீன்களாகவும், அவர் மட்டுமே கதிரவனாகவும் நம் கண்களுக்குக் காட்சி தருகிறார். அவர் வாய்மையின் வடிவம்; அன்பின் திருவுருவம். அவர் தான் கருணைக் கடல், காந்தியடிகள்.

அறவழியே அவர் வழி. அநியாயத்தை எதிர்க்கும்போது அவர் தன்னைத் தானே பலி கொடுத்துக் கொள்ளவும் தயாராகக் களம் நோக்கிச் செல்வார். இந்திய மண்ணின் சுதந்திரத்தைப் பெற்றிட, அவர் தியாக நெருப்பில் குளித்தார். அந்த நெருப்பிலிருந்து அவர் புடம்போட்ட தங்கமாக வெளிவந்தார். அடிமைத்தனம் எங்கிருந்தாலும் அவர் அதனைக் களைந்திடவே விரைந்தோடுவார். மனிதனை மனிதன் தீண்டக்கூடாது எனும் சாதிக்கொடுமையை வேரோடு வீழ்த்தக் கொடி தூக்கினார். சமுதாயத்தைச் சாய்க்கும் தீமைகளாம் குடியாட்டம், குதிரை ஓட்டம் முதலியவற்றை அறவே ஒழிக்க வேண்டுமென நாடெல்லாம் பாடுபட்டார். அமளிகள், கலகங்கள், குழப்பங்கள் எங்கு

நடந்தாலும் அவைகள் ஓயும் வரை உண்ணமாட்டார், உறங்கமாட்டார், மகா வீரரைப்போல், புத்தரைப்போல்,

என்பு இலதனை வெயில்போலக் காயுமே அன்பு இலதனை அறம்

என்றுரைத்த வள்ளுவரைப்போல் வாழ்ந்து காட்டியவர் அவர். அந்த உலக உத்தமர்தான் அதோ வருகிறார்.

மேற்றிசையில் கதிர் மறையும் நேரம். இளங்காற்று மென்மையாக வீசி, அவரை வலம் வருகிறது. அவர் அந்த மேடையில் அமர்ந்து இறைவணக்கம் தொடங்கப் போகிறார். அவரோடும் அவர் இதய உணர்வுகளோடும் இணைந்து அங்குள்ள நல்லோர் அந்த வணக்கப்பாடலை இசைக்கப் போகின்றனர். எப்பொழுது வருவார் என்று எதிர்பார்த்து ஏங்கிய விழிகளுக்கு விருந்தாக, எப்பிணியையும் நெஞ்சிலிருந்து நீக்கும் மருந்தாக, அவர் வந்துவிட்டார்.

அங்குள்ளோர் கரங்கள் அனைத்தும் மலர்ந்த பூக்கள், மீண்டும் மொட்டானது போல் விளங்குகின்றன. ஆம், அனைவரும் அவரை வணங்குகின்றனர். அவரும் அவ்வாறே வணங்குகிறார். அந்த வணக்கத்தைச் சூழ்ந்திருந்தோர் வாழ்த்தாக எண்ணிக் கொள்கின்றனர். காலமுணர்த்தும் கருவி, அவரது இடுப்பிலே அடிக் கொண்டிருக்கிறது. கூப்பியிருந்த கரங்களில் ஒரு கரம் அவரை நோக்கி நகருகிறது. கூட்டத்திலிருந்தவர்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டு, அந்த மனிதன் மட்டும் அவருகே செல்கிறான். “ஏன் அருகே செல்கிறான்?” என்று நினைப்பதற்குள்ளாக, அவன் அவரைத் தாழ்ந்து வணங்குகிறான். அந்தத் தும்பை மலர் உள்ளம் அவன்மீது அன்பை அள்ளி வீசுகிறது. அம்மவோ! அந்தக் கொடியவனின் கும்பிட்ட கைகளுள்ளே கொலைக்கருவி பதுங்கியிருக்கிறது. அந்தக் கைத்துப்பாக்கி, திடீரென அந்த இடத்தின் அமைதியைக் கெடுக்கிறது. அசை போட்டவாறு கண்மூடியிருக்கும் பசுவின்மீது புலியொன்று பாய்ந்தது போல், அந்த அமைதியான சூழ்நிலையின்மீது வெடிச் சத்தம் தாக்கியது.

அமைதி அழிந்தது! இருள் மூடிக்கொண்டது. இதயப் பகுதியிலிருந்து குருதி வெள்ளம் பெருக்கெடுக்க, அந்த எளிய உருவம், ஏழைகளின் நம்பிக்கை விளக்கு, பூமியில் சாய்ந்துவிட்டது. தொழுத கைகளுள்ளிருந்த படை, நாட்டுத் தந்தையின் உயிரைக் குடித்துவிட்டது. இது போலும் நடக்கக்கூடும் என்பதை வள்ளுவரின் நுண்ணறிவு எப்படித்தான் முன்கூட்டி உணர்ந்திருந்ததோ!

தொழுத கையுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுத கண்ணீரும் அனைத்து.

“பகைவர்கள் வணங்குகின்றபோது அவர்களின் கைகளுள்ளே கொலைக் கருவி மறைந்திருக்கும்; அவர்கள் கண்ணீர் கொட்டி அழுவதும் அப்படிப்பட்டதே” என்று அடையாளங் காட்டுகிறார் அவர்! அண்ணல் காந்தியடிகளின் முடிவு, இந்தக் குறளை மெய்ப்பிக்கும் எடுத்துக் காட்டல்லவா?

அதிகாரம் - 83 - கூடா நட்பு; பாடல் - 828

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்