பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 45 / 300

அவர்நெஞ்சு அவர்க்காதல்

அச்சுப் பக்கம் 107108 · ஸ்கேன் 124125 · அதிகாரம் 130 (நெஞ்சொடு புலத்தல்) — குறள் 1291

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour illustration occupying the upper half of the page: a young woman in yellow dress seated by an opening, with two shadowed figures in the background.

கூடத்துப் பலகணியின் ஓரம் அமர்ந்திருந்தாள், கூன்பிறை நெற்றியும் கோவைப்பழ இதழும் கூர்வேல் விழியும் குங்கும ஒளியும்மிகு கன்னமுங் கொண்ட அந்தக் குமரி தமிழாள்.

வயது பதினாறு இருக்கும். இளமையின் செழிப்பு மலைமுகட்டில் கொடி கட்டிப் பறந்தது. பரந்த வான்வெளியை அவளது பார்வை விழுங்கிக் கொண்டிருந்தது. மெல்ல வீசிக் கொண்டிருந்த காற்றில், அவளது பட்டாடை அசைந்து கொண்டிருந்தது.

தெருத் தாழ்வாரத்தில் அவள் தாய் சற்று உரக்கப் பேசுவது அவள் காதில் விழாமல் இல்லை. பத்து வயது மகனை அவள் கடிந்து கொண்டிருந்தாள். பலகணிப் பார்வைக்குத் தம்பிதான் அவன்.

“ஏண்டா மருதா! எங்கே போய் விளையாடிவிட்டு வருகிறாய்?”

“அடுத்த வீதியிலிருக்கும் என் தோழன் தேனப்பன் வீட்டுக்குப் போய் அவனோடு விளையாடினேன் அம்மா!”

“நானும் பார்க்கிறேன். நாள்தோறும் நீதான் அவன் வீட்டுக்கு நாய் மாதிரி ஓடுகிறாய்; அவனோடு விளையாடுகிறாய். என்றாவது ஒரு நாள் அவன் நம் வீட்டுக்கு வந்து உன்னோடு விளையாடியதுண்டா? உன்னை மதியாதவன் வீட்டுக்கு நீ போவானேன்? இனிமேல் போனால் பார்! நான் பிறகு சாதுவாக இருக்க மாட்டேன்!”

“சரியம்மா! இனிமேல் போகவில்லை!”

இந்த உரையாடல், தன் தாய்க்கும் தம்பிக்கும் நடந்ததில், அவள் ஏன் அவ்வளவு ஆழ்ந்த கவனம் செலுத்துகிறாள்? அடடா! அவள் முகத்தில் எத்தனை மாற்றங்கள்! ஓடினாள் பலகணியை விட்டு! கட்டில் மீது தன் உடலைப் போட்டாள். கண்ணீர் கொட்டியது; தம்பியிடம் தாய் சொன்னது, திரும்பத் திரும்ப வேதமாக ஒலித்தது.

“நீதான் அவன் வீட்டுக்கு ஓடுகிறாய். என்றாவது ஒரு நாள் அவன் நம் வீட்டுக்கு வந்ததுண்டா?”

இந்தச் சொற்களுக்காக அவள் அழுவானேன்? அவள் நெஞ்சம் அவளைப் பார்த்துக் கேட்டது, “ஏன் பெண்ணே அழுகிறாய்” என்று! அவள் பதில் கூறவில்லை. நினைத்துக் கொண்டு குமுறினாள்.

“நெஞ்சே! என் தாய், என் தம்பிக்குச் சொன்னதைத்தான் நானும் உனக்குச் சொல்கிறேன். என் தம்பி மருதன், அடுத்த தெரு தேனப்பன் வீட்டுக்கு விளையாட ஓடுகிறான். ஆனால், தேனப்பனோ இந்த வீட்டுக்கு வராமல் அவன் வீட்டிலேயே இருக்கிறான். என் நெஞ்சமே! என் காதலனின் நெஞ்சம் என்னைத் தேடி வராமல் இருக்கும்போது, நீ மட்டும் என்னை விட்டு விட்டு மருதன், தேனப்பனைத் தேடி ஓடுவதுபோல், அவரைத் தேடி ஓடிக்கொண்டு இருப்பது ஏன்?”

அதற்கு அவள் நெஞ்சு பதில் கூறியிருந்தால் என்ன கூறியிருக்கக் கூடும்?

“பெண்ணே! என் கண்ணே! நான் உன் தம்பி மருதன், தாய்க்கு அடங்கியதுபோல் அடங்கிவிட மாட்டேன். உன் காதலன் நெஞ்சு என்னைத் தேடி வராவிட்டாலும் நான் அவரைத் தேடிச் செல்வதை நிறுத்த மாட்டேன்!” என்று கூறியிருக்கும்.

ஏந்திழையின் இதயம் இப்படித்தான் இருக்குமென்பதை உணர்ந்திடவே, வள்ளுவப் பெருந்தகை வண்ண மயிலனையாளின் உள்ளத்தை ஓவியமாக்கிக் களிக்கிறார்.

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீஎமக்கு ஆகா தது.

அதிகாரம் - 130 - நெஞ்சொடு புலத்தல்; பாடல் - 1291

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்