பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 44 / 300

தேரான் தெளிவும்

அச்சுப் பக்கம் 104106 · ஸ்கேன் 121123 · அதிகாரம் 51 (தெரிந்து தெளிதல்) — குறள் 510

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour illustration showing three men conversing at the entrance/interior of an inn or rest-house.

கடல் கடந்து சென்று வெளி நாட்டு வாணிபத்தில் ஈடுபட்டிருந்தார் ஒருவர். அவருக்கு ஓர் உற்ற நண்பரும் உண்டு. இருவருமே பங்குதாரர்களாக இருந்து வாணிபத்தைச் சீர்பெற நடத்திப் பெரும் பொருளீட்டினர். இருவருக்கும் தாயகம் திரும்பிட வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. ஈட்டிய பொருளில் பெரும் பகுதியை எடுத்துக் கொண்டு நாவாய் ஏறி, நாட்டுக்குத் திரும்பினர். அவர்கள் தங்கள் நாட்டுக் கரைக்கு வந்து சேர்ந்த நேரம் நள்ளிரவு. அவர்களிடமுள்ள பேழையிலோ ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட பொற்காசுகள் இருந்தன. எனவே, அந்தத் துறைமுகப்பட்டினத்திலேயே ஓர் ஓய்வு விடுதியில் இரவைக் கழித்துவிட்டுக் காலையில் தங்கள் ஊருக்குப் புறப்படுவது என முடிவு செய்தனர். அவ்வாறே ஓய்வு விடுதியை நாடிச் சென்றனர். விடுதியின் உரிமையாளன், யாரையும் கவரத்தக்க முறையில் பேசவும் நடக்கவும் கற்றவன். பொற்காசுப் பேழை, இரண்டு பங்குதாரர்களில் மூத்தவர் வசம்தான் இருக்கிறது என்பதை அவன் புரிந்து

கொண்டான். மூத்தவருக்குத் தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தான். இளைய பங்குதாரருக்கு, அந்த மனிதன் மீது சந்தேகம் ஏற்பட்டது. இருவரும் தங்குவதற்கு ஒரு நல்ல அறையையும் ஒதுக்கிக் கொடுத்தான் உரிமையாளன். மூத்தவரைப் பார்த்து, உரிமையாளன் தன் நாவன்மையைக் காட்டத் தொடங்கினான்.

“இந்த ஓய்வு விடுதியில் நமது சிற்றரசர்கூட ஒருமுறை வந்து தங்கியிருந்தார். இன்னொரு முறை இளவரசியார் வந்து ஓய்வெடுத்துச் சென்றார். அப்போது அவர் அணிந்திருந்த நவரத்தினங்கள், மாலைகள் அனைத்தும் என் பாதுகாப்பிலேதான் இருந்தன. இந்தத் துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதிக்காக வருகிற எல்லா வாணிப வேந்தர்களுமே என் பொறுப்பிலேதான் தங்கள் பொருள்களைவிட்டு வைப்பார்கள். நீங்கள் இங்கு எந்தவித அச்சமுமின்றி உறங்கலாம்.”

விடுதி உரிமையாளனின் பேச்சு மூத்தவருக்கு நம்பிக்கையை வலுப்படுத்தியது. மிக்க மகிழ்ச்சியுடன் உறங்குவதற்குப் படுக்கையிடம் சென்றார். உரிமையாளன் அவரை விடவில்லை.

“ஒரே ஒரு செய்தி! தனிமையாகப் பேசவேண்டும்” என்றான். அவரும் இணங்கி அவனுடன் வேறு பக்கம் தனியாகச் சென்றார்.

“உங்களுடன் வந்திருப்பது யார் என நான் அறிந்து கொள்ளலாமா?”

“அவர் என் நண்பர். வாணிபத்தில் இருவரும் பங்குதாரர்கள்.”

“நம்பிக்கைக்கு உரியவர்தானா?”

“நிச்சயமாக! நீண்ட நாட்களாக நாங்கள் இணைந்தே வாணிபம் நடத்துகிறோம்.”

“என்மீது சினம் கொள்ளக் கூடாது! இதே ஓய்வு விடுதியில் முன்பு ஒரு நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது.”

“என்ன, அந்த நிகழ்ச்சி?”

“இப்படித்தான் பெரும் பொருளுடன் இரு நண்பர்கள் ஒரே அறையில் தங்கினார்கள். காலையில் எழுந்து பார்த்தால் இருவரில் ஒருவர் பிணமாய்க் கிடந்தார். மற்றவர் பேழையுடன் மாயமாய் மறைந்துவிட்டார்.”

“அப்படியா?”

“அதனால்தான் சொல்லுகிறேன். தாங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.”

“அது எவ்வாறு?”

“தாங்கள் பேழையுடன் இந்த அறையில் உறங்குங்கள். தங்கள் நண்பர் மற்றொரு அறையில் உறங்கட்டும்.”

“அதுவும் நல்ல யோசனைதான்.” இந்த உரையாடல் முடிந்ததும் மூத்தவர், இளைய நண்பரைப் பார்த்து, “நீ பக்கத்து அறையில் படுத்துறங்கு. இருவருக்கும் வசதியாக இருக்கும்” என்று கூறினார்.

இளையவர் சற்றுத் திகைத்தார். எனினும் அவ்வாறே அடுத்த அறைக்குச் சென்று விட்டார்.

மூத்தவர், இளையவர் இருவருமே, தனித்தனி அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, ஓய்வு விடுதி உரிமையாளன், மெல்ல அந்த அறையின் பின்புறமாக வந்து மூத்தவருக்கு அருகே இருந்த பேழையைத் தூக்கிக்கொண்டு ஓடினான். அதற்குள் மூத்தவர் விழித்துக்கொண்டு, அவனைப் பிடித்துக் கொண்டார். பிடிபட்டவன் தன்னிடமுள்ள கொடுவாளால் அவர் நெஞ்சில் குத்திவிட்டான். இந்த அமளியில் இளையவர் எழுந்தோடி வந்து ஓய்வு விடுதி உரிமையாளனைத் தடுத்து நிறுத்தி, அங்குள்ள தூணில் கட்டிப் போட்டார். அவருக்கு எதிரே தன் நண்பர் உயிருக்கு மன்றாடுவதையும் கண்டு கண்ணீர் வடித்தார்.

“என் இனிய நண்பா! இளைய நண்பா! உன்னுடைய நட்பை ஆராய்ந்து தெளிவடைந்துதான் நான் பெற்றிருந்தேன். இருந்தாலும் தேவையில்லாமல் உன் மீது திடீரென்று சந்தேகம் கொண்டேன். இதோ, இந்த கொடியவன் என் மனத்தைக் கெடுத்துவிட்டான். அது மட்டுமல்ல; இவனைப் பற்றி ஆராயாமலே இவனை உடனடியாக நம்பியும் விட்டேன். அந்தத் துன்பத்தை இப்போது அனுபவிக்கிறேன். என்னை மன்னித்துவிடு.

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்

என்ற குறள்வாக்கு என் அளவில் பலித்து விட்டது.”

இவ்வாறு கூறிக் கொண்டே மூத்தவர் உயிர் விட்டார்.

இளையவரின் கண்கள் நீர்வீழ்ச்சிகளாய்க் காட்சி அளித்தன.

ஒருவனை ஆராய்ந்து உணராமல் நம்பிக்கை வைப்பதும், ஆராய்ந்து உணர்ந்து நம்பியவனிடம் ஐயம் கொள்வதும் பெருந்துன்பத்தைக் கொடுக்கும்.

அதிகாரம் - 51 - தெரிந்து தெளிதல்; பாடல் - 510

காப்பக விவரிப்பு: Small printed monument/chariot motif centred below the Kural metadata.

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்