பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 43 / 300

எழுதுங்கால் கோல்காணா

அச்சுப் பக்கம் 102103 · ஸ்கேன் 119120 · அதிகாரம் 129 (புணர்ச்சி விதும்பல்) — குறள் 1285

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour illustration dominated by a woman's face, with a smaller man-and-woman scene below and a makeup/eyeliner motif linking the image to the prose.

கணவன், தன் மனைவிக்குத் தவறிழைத்து விடுகிறான். பெரிய தவறு எதுவாயிருக்கும்? நாளைக்கு வந்து விடுகிறேன் என்று கூறிவிட்டுப் போனவன் சொன்னபடி வந்திருக்கமாட்டான். கொடுத்த முத்தம் காய்வதற்குள் அடுத்த முத்தம் அளித்திருக்கமாட்டான். நிலவின் அழகில் ஈடுபட்டிருந்திருப்பான். ‘என்னைவிட நிலவு அழகோ?’ என அங்கிருக்கும் ஆரணங்கு கேட்டிருப்பாள்- “ஆமாம்-உனக்கு ஒரு

குறையுண்டு” என்று கூறுவான்-நிலவைப் போலக் களங்கம் காதலியின் முகத்தில் இல்லை என்ற எண்ணத்தை மறைத்துக் கொண்டு, “குறையுண்டு” எனக் குறும்பு மொழிந்ததை அவளால் புரிந்துகொள்ள முடியாமல் போயிருக்கும்.

இப்படி ஏதோ ஒரு வகையில் அவன் தவறு செய்திருப்பான். எந்தத் தவற்றைக் கணவன் செய்திருந்தாலும் அவள் மன்னித்து விடுகிறாளாம்-இல்லை இல்லை-மறந்து விடுகிறாளாம் - அதுவுமில்லை - அந்தத் தவறு அவளுக்குக் காணப்படாமலே போய்விடுகிறதாம். எப்போது? கணவன் அருகே வந்து விட்டபோது! அதற்கு உதாரணம் தருகிறார் வள்ளுவப் பெருந்தகை:

கண்ணுக்கு மையெழுதுங்கோலைக் கையிலே வைத்திருக்கும்போது பார்க்க முடிகிறது. அதே கை அந்தக் கோலைக் கண்ணிடத்திலே கொண்டுபோய் மை எழுதும் நேரத்தில் கண்களுக்கு அந்த எழுதுகோல் தெரிவதில்லை.

அதேபோல, கணவன் எந்த வகையான தவறு செய்திருந்தாலும் - அவனைத் தன்னருகே கண்டதும் அந்தத் தவறுகள் எல்லாம் கண்ணருகே வந்துவிட்ட மையெழுதும் கோல்போல் மறைந்து விடுகின்றன.

“வரட்டும் சொல்லுகிறேன் - என்ன பாடுபடுத்துகிறேன்!”

“என்னை அழைக்காமல் விழாவுக்கு இவர் மட்டும் எப்படிப் போகலாமாம்?”

“என் மனம் நோக நடந்தவரை - நான் சும்மா விடப் போவதில்லை!”

இப்படியெல்லாம் கச்சை கட்டிக்கொண்டு நிற்கிறாள். அவன் வந்து விட்டதும், தன் கோபத்தையெல்லாம் மறந்து - அவன் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை நினைக்கவே முடியாமல் - வேறு ஒரு புது உலகத்துக்குப் போய் விடுகிறாள். மையெழுதுங்கோல் போலக் கணவன் தவறுகள் மறைந்து விடுகின்றன. வள்ளுவர் குறள் அதைத்தான் அழகாக விளக்குகிறது.

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட விடத்து.

அதிகாரம் - 129 - புணர்ச்சி விதும்பல்; பாடல் - 1285

காப்பக விவரிப்பு: Small Thiruvalluvar statue illustration centred below the text and metadata near the foot of the page.

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்