பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 42 / 300

அ. பொய்மையும் வாய்மை / ஆ. தன்னெஞ் சறிவது

அச்சுப் பக்கம் 100101 · ஸ்கேன் 117118 · அதிகாரம் 30 (வாய்மை) — குறள் 292, 293

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour illustration showing Valluvar teaching a student while a hunter stands at the hut entrance and a spotted deer appears behind them.

வழக்கம்போல், வள்ளுவர் தம் மாணாக்கனுக்குத் தமிழ் இலக்கணம் கற்றுக் கொடுக்கும் நேரம். அவரது அகன்ற நெற்றியில் தேக்கப்பட்ட சிந்தனைப் பெருவெள்ளம், ஒளிவிழி மடைகளின் வழியாகப் பாய்ந்து கொண்டிருந்தது. அப்போது அழகிய மான் குட்டியொன்று அச்சத்தால் நடுக்குற்றுத் தன் இனத்துக்குரிய இயல்பான வேகத்தை இரட்டிப்பாக்கிய வண்ணம் வள்ளுவரின் குடிலுக்குள் ஓடி

ஒளிந்து கொண்டது. குறளாரின் குளிர்ப்பார்வை அந்த இளம் மானின் மீது படுவதற்குள் வில்லும் அம்பும் தாங்கிய வேடன் ஒருவன் விரைந்து வந்து, வள்ளுவருக்கெதிரே நின்றான். “இந்தப் பக்கம் ஒரு மான் ஓடி வந்ததே! கண்டீர்களா? கண்டிருந்தால் சொல்லி விடுங்கள்; அது என் அம்புக்குத் தப்பிய மான்! ஒருவேளை உமது இல்லத்திற்குள் நுழைந்து விட்டதோ?” என்று பரபரப்புடன் கேட்டான்.

வள்ளுவர் அமைதியாகச் சொன்னார்: “மானா? இந்தப் பக்கம் வரவில்லையே! அதோ, அந்தப்பக்கம் அல்லவா சற்று நேரத்துக்குமுன் ஒரு மான் துள்ளியோடியது.”

இந்தப் பதிலைக் கேட்டதும் வேடன், “அப்படியா?” என்று கூவியவாறு அவர் காட்டிய திக்குநோக்கி ஓடத் தொடங்கினான்.

மாணாக்கன் மிக்க பணிவுடன் வள்ளுவரைப் பார்த்துக் கேட்டான்.

“பெருந்தகையீர்! பொய் கூடாது - அது பெருந் தீது என்று பலமுறை விளக்கியிருக்கிறீரே; இன்று தாங்களே அந்த வேடனிடம் ஒரு பொய் கூறினீர்களே, சரிதானா?”

வள்ளுவர், புன்னகை புரிந்தவாறு விடையளித்தார்.

“கேடு இல்லாத நன்மையை விளைவிக்கக்கூடிய பொய்யான சொல், வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும். நான் வேடனிடம் உண்மையைச் சொல்லியிருந்தால், அந்தப் புள்ளிமான் உயிர் போயிருக்குமல்லவா? நான் கூறியது பொய்யானது எனினும் அது ஒரு நன்மையைச் செய்த காரணத்தால் வாய்மையாகவே கருதப்படும்.”

வள்ளுவர் இந்த விளக்கத்தைச் சொல்லி முடித்துவிட்டு, எதிரேயிருந்த ஏட்டையும் எழுத்தாணியையும் எடுத்தார். குறள் உருவாயிற்று.

பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்.

அதனைத் தொடர்ந்து மாணாக்கனிடம் கூறினார்.

“இளைஞனே! இந்த விளக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பொய் சொல்லுவதே வாழ்க்கையாக ஆக்கிக்கொண்டு விடக்கூடாது! ஒருவன் தன் நெஞ்சம் அறிந்த உண்மையை மறைத்துவிட்டு, தன்னைக் காத்துக் கொள்ளவோ அல்லது பிறருக்குக் கேடுசூழவோ பொய் கூறுவானேயானால், அப்படிப் பொய் கூறியவனுடைய நெஞ்சமே அவனைச் சுட்டுப் பொசுக்கிவிடும். அதனைக் குறிப்பிட்டே இந்தக் குறளையும் எழுதியிருக்கிறேன்.”

தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்.

வள்ளுவரின் அருமைமிகு கருத்துக்களைக் கேட்டு மகிழ்ந்த மாணாக்கன், அவர் கால் மலர் தொழுது நின்று, “வாழ்க வள்ளுவம்” என்று முழங்கினான்.

அதிகாரம் - 30 - வாய்மை; பாடல்கள் - 292, 293

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்