பொருளடக்கம் 41 / 300
உள்ளக் களித்தலும்
அச்சுப் பக்கம் 99–99 · ஸ்கேன் 116–116 · அதிகாரம் 129 (புணர்ச்சி விதும்பல்) — குறள் 1281
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Colour illustration above the prose showing a woman standing opposite a reclining/seated man.
எலுமிச்சம் பழத்தைச் சுவைக்காமலிருக்கும்போதே - நேரிலே காணும் போதே நாவிலே நீர் ஊறுகிறது; புளிப்பு உணர்ச்சியால் ஆட்கொள்ளப் படுகிறோம். ஆனால், மனிதனை நிலை தடுமாறச் செய்யும் சக்திபெற்ற மதுவை நினைப்பதாலோ - நேரில் காண்பதாலோ ‘போதை’ உணர்ச்சி அவனை ஆட்டிப் படைப்பதில்லை. அதை அருந்திய பிறகே மயக்கமும் அது தரும் மன உற்சாகமும், இன்பவெறியும் தலைபெடுக்கிறது. அதிகப் போதையில் வீழ்ந்தவனையும் நிமிரச் செய்யும் வல்லமை எலுமிச்சைக்கு உண்டு என்பார்கள். எலுமிச்சை, மதுவை வெல்லக் கூடியது; மதுவின் ஆதிக்கத்தை முறியடிக்கக் கூடியது. கள்ளைப் போலன்றிக் கண்ட மாத்திரத்தில் நாவில் புளிப்பு உணர்ச்சியைப் பொழியும் தன்மை வாய்ந்தது!
‘எலுமிச்சையைப் போன்றதே காமம்’ என்பதை வள்ளுவர் சொல்லாமற் சொல்லுகின்றார். இன்ப விருந்தளிக்கும் எழில் நிறை பெண்ணாளை - அவள் இடை காட்டும் நெளிவை - இதழ் காட்டும் சுவையை - இருவிழி காட்டும் குளிரை - பிரிந்திருக்கும் காதலன், தொலைவிலிருந்து எண்ணிப் பார்த்தே களிப்படைய முடியும். விரக விருந்தளிக்கும் பாவை விழியெதிரே நிற்பதைக் கண்டாலே மகிழ்ச்சி பொங்கும். இந்தப் பெருமை, வெறியூட்டும் மதுவுக்குக் கிடையாது; மங்கை தரும் சுகத்திற்கே நினைத்துக் களித்தலும், கண்டு மகிழ்தலுமான சிறப்புக்கள் உண்டு என்று செந்நாப்போதார் சித்திரத் தமிழில் தீட்டுகின்றார்.
அதனால்தான் போலும் பெண்களை எலுமிச்சம்பழம் எனவும் சிறப்பிக்கின்றனர். இரண்டுமே கண்டவுடன் உணர்ச்சியூட்டுவன அல்லவா!
கண்டவுடன் உணர்ச்சி கிளப்பும் எலுமிச்சம்பழம், மதுவை வெல்கிறது.
அந்த எலுமிச்சையை, நேரில் கண்டவுடன் மட்டுமின்றி நினைத்தவுடன் மகிழ்ச்சியூட்டும் காதற் பெண்டிர் வெல்லுகின்றனர்.
அந்தச் சிறப்புக்கு இதோ குறள் :-
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்(கு)இல் காமத்திற்(கு) உண்டு.
அதிகாரம் - 129 - புணர்ச்சி விதும்பல்; பாடல் - 1281
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்