பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 40 / 300

நுண்மாண் நுழைபுலம்

அச்சுப் பக்கம் 9798 · ஸ்கேன் 114115 · அதிகாரம் 41 (கல்லாமை) — குறள் 407

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour illustration showing two men facing a third young man in a mountain landscape with a waterfall in the background.

கல்லைக் கலையாக்கும் சிற்பியொருவனும் சித்திரங்களைப் பேசவைக்கும் ஓவியன் ஒருவனும் இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தவாறு மலைச்சாரலில் நடந்து கொண்டிருந்தனர். இளங்காற்றின் இன்பத்தழுவல் அவர்தம் கற்பனை உள்ளத்திற்கு அமுதமாக இருந்தது. கரிய யானைகளும் வெள்ளைக் குதிரைகளும் மலைமுகடுகளில் நடைபழகுவதுபோல, வான்முகில்கள் பல்வேறு வடிவங்களில் பரவிக்கிடந்தன. இருவரும் தாங்கள் படைத்த அற்புதக் கலைகளைப்பற்றி ஒருவரோடொருவர் உரையாடி மகிழ, அந்த வளம் கொஞ்சும் பகுதி ஏற்றதாக இருந்ததை உணர்ந்து, உவகை கொண்டனர். பெருங்காற்றில் வேகமாக அசைந்தாடும் நரை மூதாட்டியின் வெள்ளிய கூந்தலையொத்துத் தொலைவில் காட்சி தந்த நீர்வீழ்ச்சியைப் போல, தான் ஓர் ஓவியம் தீட்டியிருப்பதாகப் பெருமைப்பட்டுக் கொண்ட நண்பனைப் பார்த்து, “அதோ மயிலாடுவதை, மான் ஒன்று பார்த்துக் கொண்டு நிற்கிறதே, அதேபோலச் சிற்பமொன்று நேற்றுத்தான் கல்லில் வடித்து முடித்தேன்” என்று களிப்புமிகக் கூறினான் அந்தச் சிற்பி.

உரையாடலுக்கிடையே ஓவியன், விழிகளை அகல விரித்தவாறு, “அடடே! யாரது? அழகே உருவெடுத்து வருவதுபோல் தெரிகிறதே” எனத் திகைத்து நின்றான். அவன் நோக்கிய திக்கில் சிற்பியும் நோக்கினான். வருவது யார் என்று சிற்பிக்குத் தெரியும். ஓவியன் எதிரே வரும் அழகோவியத்தை வர்ணித்திடத் தொடங்கிவிட்டான்.

“நண்பரே! நான் இதுவரையில் இப்படி ஓர் அழகின் மலர்ச்சியை என் தூரிகையால் உருவாக்கியதே இல்லை.”

“ஓவியரே! வருவது வண்ணக் கிளியல்ல; வடிவழகன்; கட்டிளங்காளை; அது தெரிகிறதல்லவா உமக்கு?”

“தெளிவாகத் தெரிகிறது. தேன் மணக்கும் தமிழால் இந்த ஆண்மகனைப் புகழ்ந்து பாட அருகில் யாரும் புலவர்கள் இல்லையே என்று கவலைப்படுகிறேன். அவன் நடை கண்டு வியக்கிறேன். அன்னமயில் வந்து கொண்டிருக்கிறானே- ஆகா- அவன் முகத்தில்தான் எவ்வளவு கவர்ச்சி- வண்ணத் தூரிகையின் வளைந்த நுனிபோல வாகான இளம் மீசைகள் - செந்தாமரையின் இதழை எடுத்து அவனது மேனிக்குத் தோலாக்கினாரோ இயற்கை அன்னை? சிற்பியாரே! அர்ச்சுனன், மன்மதன், கண்ணன், முருகன் என எத்தனையோ ஆடவர் பற்றிப் படித்து மகிழ்கிறேன், அந்த ஆணழகர்களை ஓவியமாகத் தீட்டியும் இருக்கிறேன். ஆனால், இன்று காணும் ஆண்மகனின் எழிலுக்கு அவை ஈடாகமாட்டா என்பதே என் கருத்தாகும்.”

ஓவியனின் புகழ்ப்பாட்டை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த சிற்பி, சிரித்துக்கொண்டே பேச ஆரம்பித்தான்.

“உமது பாராட்டு அனைத்தும் பொருத்தமானதே! ஆனால் ஒன்று - நீர் இப்போது காணுகிற அந்த அழகின் உருவம் மனிதனல்ல; மண்ணால் மிகத் திறமையாகச் செய்யப்பட்ட ஒரு பொம்மை.”

இதைக் கேட்டதும் ஓவியனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

“என்ன விளையாடுகிறீர்? உமது கூற்றை நம்பிட நான் ஒன்றும் அறிவிலி அல்ல! பொம்மை, இப்படித்தான் நடந்து வருமோ? நம்மை நோக்கி வந்து கொண்டே இருக்கிறானே - அடேடே! இதோயே ஒரு சிறு வாய்க்கால் - அதைக் கூடத் தாண்டிப் பாய்ந்து வருகிறான். பொம்மையாம், பொம்மை! நன்றாக வேடிக்கை செய்கிறீர்!”

“ஓவியரே! பொம்மையல்ல - உண்மைதான்! மனிதன்தான்! நானறிவேன் இவனை நன்றாக! ஆனால் ஒன்று; இவனை மனிதன் என்று யார் ஒத்துக் கொண்டாலும் சரி; திருவள்ளுவர் ஒத்துக்கொள்ளத் தயாராக இல்லை.”

“அப்படியென்றால்? புரியும்படியாகச் சொல்லும் சிற்பியாரே!”

“நுட்பமானதும் ஆராய்ந்திடக்கூடிய தெளிவு நிறைந்ததுமான அறிவு இல்லாத ஒருவன், எவ்வளவு அழகும் கவர்ச்சியும் உடையவனாக இருந்தாலும் கூட, அவன் மண்ணால் உருவாக்கப்பட்ட பொம்மைக்குச் சமமானவனே என்று வள்ளுவர் கூறியிருக்கிறார். அதற்குச் சரியான எடுத்துக்காட்டுத்தான் இவன்.”

பேசிக் கொண்டிருக்கும்போதே, அந்த அழகன் அவர்களுக்கு மிக அருகே வந்துவிட்டான். சிற்பி, அவனைப் பார்த்து, “என்ன அழகா! நலம்தானே?” என்று கேட்டுவிட்டு, அவனுக்கு ஓவியனை அறிமுகப்படுத்தி வைத்தான்.

“ஓகோ! ஓவியரா நீர்? இதுவரையில் என்னைப்போல ஓர் அழகனைப் படமாக வரைந்ததுண்டா? வரைந்திருக்க முடியாதே!”

அழகனின் சொற்கள் செவியில் விழுந்ததும் ஓவியன், சிற்பியைப் பார்த்து, “நீர் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை” என ஒத்துக் கொண்டான்.

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று.

அதிகாரம் - 41 - கல்லாமை; பாடல் - 407

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்