பொருளடக்கம் 39 / 300
ஊடுதல் காமத்திற்கு
அச்சுப் பக்கம் 95–96 · ஸ்கேன் 112–113 · அதிகாரம் 133 (ஊடலுவகை) — குறள் 1330
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Large colour illustration showing the lovers in the foreground, with a silhouetted embracing couple against a bright moon in the background.
மலையென மோதிய மாற்றாரின் படையைத் தூள் தூளாக்கிவிட்டுத் திரும்பும் மாவீரன், மழுங்கிப் போயிருக்கும் தன் வேலின் கூர்மையைக் காணுகிற நேரத்தில், இப்படித்தான் நம் வருகையை நோக்கிக் காதலியின் வேல் விழிகளும் மங்கியிருக்கும் என்று கவலை கொள்கிறான். மன்னன், தனக்கென ஏற்பாடு செய்த பரிசளிப்பு விழாவிலேகூட மனமின்றிக் கலந்து கொள்கிறான். பாவை தரும் பரிசுகளைப் பெற்றுக் கொள்ளக் காத்திருக்கும் தன் கன்னத்தைத் தன்னையறியாமல் தடவிப் பார்த்துக் கொள்கிறான்; ஓடி வருகிறான் வீடு நோக்கி. அவன் எதிரே வந்ததும்-வந்து, ‘வஞ்சி!’ என அழைத்ததும்கூட அவளுக்குத் தெரியவில்லை. அப்படி மெய்ம்மறந்து வழிமேல் விழி வைத்துக் கிடக்கிறாள், “வரக்காணேனே கண்ணாளனை” என்ற சோக கீதத்தின் அலைகளை எழுப்பியபடி!
‘ச்சு’ என்ற ஒலிக்குப் பிறகே திடுக்கிடுகிறாள். கன்னத்தை ஈரமாக்கியவன் தன் எண்ணத்தில் நிறைந்துவிட்ட மன்னவன்தான் என உணருகிறாள் - பிறகு பேச்சில்லை!
அன்றிரவு, பவனிவரும் நிலவுக்கு இருவருமே வாழ்த்துப் பாடுகிறார்கள்; பள்ளியறையிலே துள்ளி விளையாடுகிறார்கள். ஒருவரையொருவர் இழுத்தும் போர்த்தும் - இதழோடு இதழ் சேர்த்தும் இன்பவிருந்து அருந்துகிறார்கள். இன்ப விருந்து இன்னும் சுவையாக இருப்பதற்கு ஓர் அருமையான கனியையும் அளிக்கிறார் திருவள்ளுவர், காமத்துப்பால் வாயிலாக!
அந்தக் கனி-முக்கனியிலும் சுவையானது! முத்தக் கனிக்கு மூத்த முழுமுதல் கனி அது. சித்தங் களிப்பேற்றும் சிற்றின்பக் கனிக்கு அடிப்படை அமைக்கும் அன்புக் கனியாகும் அது.
இந்தக் கனியின் பெயர்தான் ‘ஊடல்கனி’. இன்பப் போதையூட்டும் இந்தக் கனியை உண்ட பிறகே இளங்காதலர்க்கு ஆனந்த மயக்கம் ஏற்படுகிறதாம். இதை உண்ணாது தேடும் இன்பம், உருசி உடையதே எனினும் ‘முழுமை’ அடைந்ததல்ல என்பது வள்ளுவர் கண்ட உண்மை-வாழ்வில் துணை பெற்றோர் வழங்கும் அனுபவ ஏடு!
கட்டிலறையிலே-கணவனும் மனைவியும் செல்லமாகச் சண்டை போட்டுக் கொள்ளுங்கள்-ஏன் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும் தெரியுமா? ஒன்று சேருவதற்காக; ஊடல் புரிக! ஏன்? கூடுவதற்காக! - கிண்டல் நிறைந்த அழகான உண்மையல்லவா இது! செல்லச் சண்டை - பிறகு இருவரும் தனித்தனியே! ஓரிரு நாழிகைகள் நகருகின்றன. அதுவரைகூடப் பொறுக்காது அதற்குள்ளாகவே மங்கிய ஒளியில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தல் - இருவரும் ஏககாலத்தில் பார்த்துக்கொண்டு ஒருவருக்கொருவர் நாணுதல் - நெருங்குதல் - கரம்படுதல் - “சூ என்னைத் தொடவேண்டாம்” என்ற கடுமொழி - ஆனால் கரும்பை வெல்லும் மொழி! அவன் கையை எடுத்துக் கொள்ளல்-பிறகு அவள், அவன்மீது கைபடுமாறு நெருங்கல். “அட நீ ஏன் என்னைத் தொடுகிறாய்?” அவன் சிறுதல் செல்லமாக!
“நீங்கள் மட்டும் ஏன் தொட்டீர்களாம்”- உரிமைக் குரல் இப்படிப்!-
“நீயும் தொடு; நானும் தொடுகிறேன்” ஒருவருக்கொருவர் போட்டாப்போட்டி!
பிறகு-ஊடல்கனி தந்த உற்சாக வெள்ளம்! இந்த ஊடல் எவ்வளவு அவசியமானது என்பதைத் தான் வள்ளுவர் அழகாக எழுதிக் காட்டுகிறார்-இதோ குறள் :-
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்குஇன்பம் கூடி முயங்கப் பெறின்.
அதிகாரம் - 133 - ஊடலுவகை; பாடல் - 1330
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்