பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 38 / 300

அ. விரைந்து தொழில்கேட்கும் / ஆ. இணரூழ்த்தும் நாறா

அச்சுப் பக்கம் 9294 · ஸ்கேன் 109111 · அதிகாரம் 65 (சொல்வன்மை) — குறள் 648, 650

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour illustration above the prose showing two learned-looking men conversing, with a mass of large flowers in the foreground.

அவை கூடியது. ஆயிரக் கணக்கானோர் அரங்கின் மேடையையே எதிர்நோக்கிய வண்ணமிருந்தனர். அன்று உரை நிகழ்த்த வருபவரைப் பற்றி மக்கள் அவ்வளவு கேள்விப்பட்டிருந்தார்கள். ஏழெட்டு மொழிகள் கற்றவர் மட்டுமல்ல; அந்த மொழிகளின் இலக்கணங்களை ஆய்ந்து உணர்ந்த ஆற்றல் படைத்தவர். காலையில்

மலரும் அவர் கண்கள், ஏடுகளின் மீதே மலருமாம். இரவில் நீண்டநேர விழிப்புக்குப் பிறகு இலக்கிய நூல்களோடு இணைந்துதான் அவர் விழிகள் மெல்ல மூடிக் கொள்ளுமாம். அவர் இல்லமே பெரியதோர் நூல்நிலையமாகக் காட்சி தரும் என்பார்கள். அவர் படித்து முடிக்காத நூல்களே உலகத்திலே இல்லை. இனிமேல் யாராவது புதிதாக எழுதினால்தான் உண்டு - அவ்வளவு படித்திருக்கிறார். இலக்கியங்கள், வரலாற்று ஏடுகள், ஆராய்ச்சித் தொகுப்புகள், இதிகாச புராணங்கள், வானநூல், நிலநூல் - இப்படிப் பல கற்ற பேரறிவாளர் ஒருவர் உரை நிகழ்த்த வருகிறார் என்ற செய்தி பரவிய பிறகு, பெருந்திரளாக மக்கள் கூடுவதற்குக் கேட்கவா வேண்டும்!

நீண்ட நேரம் மக்களைக் காத்திருக்குமாறு செய்யாமல், அவரும் அரங்க மேடையில் வந்தமர்ந்தார். சங்கத்தின் அமைப்பாளர் எழுந்து, எதிரில் குழுமியிருந்தோருக்குச் சொற்பொழிவாளரை அறிமுகப்படுத்திச் சில புகழுரைகளை உதிர்த்தார்.

கற்றது கைம்மண் அளவு- கல்லாதது உலகளவு

என்று கூறுவார்கள். ஆனால் அதற்கு மாறாக, இன்றைய சொற்பொழிவாளர் “கற்றது உலகளவு-கல்லாதது கைம்மண் அளவு” என்று கூறலாம். அவ்வளவு கற்றவர் ஒருவர், நமது அவைக்குப் பெருமை வழங்க வந்திருக்கிறார். அவர் இப்பொழுது உரையாற்றுவார்.”

சங்க அமைப்பாளரின் அறிவிப்பைத் தொடர்ந்து கையொலி, கடலொலியென எழுந்தது. சிறப்புச் சொற்பொழிவாளர் உரை நிகழ்த்தத் தொடங்கினார்.

“அன்புருவான பெரு மக்களே” என விளித்துவிட்டு ஒரு கனைப்புக் கனைத்துக் கொண்டார். அவரது சொற்பெருக்கிற்கு இலக்கியங்களின் மேற்கோள்கள் பயன் பட்டன. வரலாற்று ஆதாரங்கள் வந்து குவிந்தன. பேச்சு நீண்டு கொண்டே சென்றது. பேச்சுத் தொடங்கி சில நாழிகைகள் முடிவதற்குள்ளாக, மண்டபத்திலிருந்த கால்பகுதி மக்கள் மெல்ல எழுந்து வெளியே சென்று விட்டனர்.

அவர் பேசிக்கொண்டேயிருந்தார். புத்தகங்களை வாய்விட்டுச் சற்று உரக்கப் படிப்பதுபோல் இருந்தது அவர் பேச்சு.

அவர் உரைநிகழ்த்தி முடிவதற்குள்ளாக, முக்கால் பகுதி கூட்டம் கலைந்து போய்விட்டது. சங்க அமைப்பாளர் எழுந்து, கலைந்து செல்வோரைப் பார்த்து, “அருள்கூர்ந்து அமர்ந்திடுக! அரிய கருத்துக்களைக் கேட்டிடுக! சென்றவர் போக எஞ்சியிருப்போராவது இருந்து கேட்டதே சிறப்புச் சொற்பொழிவாளருக்குச் செய்யும் பெருமையாகும்” எனக் கேட்டுக் கொண்டார். அதற்குக் கட்டுப்பட்டு முதல் மூன்று வரிசைகளில் அமர்ந்திருந்தோர் எழாமல் இருந்தனர். ஆனால், உடலை அடிக்கடி நெளித்துக் கொண்டனர். பலர் ‘கொட்டாவி’ விடவும் செய்தனர். சிலர் தலைக்குக் கையை முட்டுக்கொடுத்துக் கொண்டு தூங்கினர். இடையிடையே ‘குறட்டை’ ஒலியும் கிளம்பிற்று. ஒருவாறு சொற்பொழிவு முடிந்தது. மண்டபத்தில் மிச்சமிருந்தோர், விடுதலைபெற்ற உணர்வோடு இல்லம் நோக்கிப் புறப்பட்டனர்.

சங்க அமைப்பாளருக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. மெத்தவும் கற்ற ஒருவரை அழைத்து இழிவு செய்து விட்டது போன்று எண்ணத்தால் நாணமுற்றார்.

எனவே, அவர் சொற்பொழிவாளரிடம் பணிவாகக் கூறினார்: “நடந்தவைகளை மறந்துவிட வேண்டுகிறேன். தாங்கள் எவ்வளவு கற்றறிந்த பெருமகனார் என்பதை இவ்வூர் மக்கள் புரிந்துகொண்டு அதற்கேற்ற மதிப்பினைத் தந்திடவில்லை. அதற்காக என்னைப் பொறுத்தருள்க” என்று!

சொற்பொழிவாளர் புன்னகை மிளிர, சங்க அமைப்பாளரைத் தட்டிக் கொடுத்தார்.

“நண்பரே! அது இவ்வூர் மக்கள் குறையன்று! என் குறைதான். நான் நிறையக் கற்றவனே தவிர, அவற்றை நிறைந்து இனிதாகச் சொல்லும் வல்லமை பெற்றவனல்ல. கருத்துக்களை ஒருங்குறக் கோத்து இனிமொழியச் சொல்லுகின்ற ஆற்றல்படைத்தவர்களின் ஏவலை, உலகம் விரைந்து கேட்கும் என்று வள்ளுவர் கூறியிருக்கிறார். அது மட்டுமல்ல, வள்ளுவர் என்னைப் பற்றி என்ன கூறியிருக்கிறார் தெரியுமா? கொத்தாகப் பூத்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவனாம் நான்! அதாவது, தாம் கற்ற பல்வேறு நூல்களின் கருத்துக்களைப் பிறர் உணருமாறு விரித்துரைக்கும் ஆற்றல் இல்லாதவர், கொத்தாகப் பூத்திருப்பினும் மணம் வீசாத மலரைப் போன்றவர் என்பது வள்ளுவரின் முடிவு.”

அமைப்பாளருக்கு ஆறுதல் கூறிவிட்டுச் சொற்பொழிவாளர் விடை பெற்றுக் கொண்டார்.

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார்

அதிகாரம் - 65 - சொல்வன்மை; பாடல்கள் - 648, 650

காப்பக விவரிப்பு: Small printed Valluvar statue illustration centered below the authority/song metadata near the lower part of the page.

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்