பொருளடக்கம் 37 / 300
வாளாற்றுப் புற்கென்ற
அச்சுப் பக்கம் 91–91 · ஸ்கேன் 108–108 · அதிகாரம் 127 (அவர்வயின் விதும்பல்) — குறள் 1261
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Colour illustration above the prose showing a young woman seated near a cooking fire, with tally-like marks visible on the wall behind her.
சேரன் வில்லோ புருவம்? வீரன் கணையோ விழிகள்? சிந்தைக்கு விருந்தோ இந்தக் காந்தச் சிலை? - என்றெண்ணத் தோன்றும் இந்த எழுதாத சித்திரப் பெண் - எழுத்து மாளிகையில் எழில்காட்டும் கண்ணாடியின் எதிரேயும் இல்லை; இயற்கையின் அழகு மலிந்த அந்திநேரத் தோட்டத்து நடுவிலேயும் இல்லை; அடுக்கலையிலே அமர்ந்திருக்கிறாள். ஏன்? கேள்வி குடையத்தான் செய்யும்.
அந்தப் பட்டு நிகர்ப்பாவை, தன் காதலனுக்குப் பிட்டுத் தயாரிக்கிறாள். உப்பிட்டு வளர்த்த பெற்றோர், அவளை மலருக்கு ஒப்பிட்டு அவனிடம் தந்தார்கள். அவனோ கொப்பிட்டு வளரும் பகை சாய்க்கக் கொடுவாள் ஏந்திச் சென்றான். அவள் கும்பிட்டுக் கேட்டும் அவன் இருந்தானில்லை. நகர்ந்து ஒழிந்தன நாட்கள். அவளோ நெஞ்சு ஏடுகளைத் திருப்புகிறாள். நெடுஞ் சுவரிலேயுள்ள கோடுகளை எண்ணுகிறாள். பால் கணக்கு, தயிர்க் கணக்குக் காட்டும் கோடல்ல அவை. அவளின் பற்றுக்கோடு, அவளை விட்டுப் அவன் பிரிந்திருக்கும் நாட்களின் கணக்கு! கோடுகளைப் பார்த்துப் பெருமூச்செறிகிறாள். இன்றுதான் வருவானோ?- இன்பம் தருவானோ இல்லையோ?- இன்றிரவும் தொல்லையோ? - என ஏங்குகிறாள், தாமரை மொட்டு நிகர் தனம் படைத்த பேரழகி. தான் சுட்டுத் தரும் பிட்டுண்ணப் பேரழகன் வரக் காணேனே எனத் துடிக்கிறாள். அது மட்டுமா? அதுதான் தன்னைப் பிரிந்து எத்தனை நாட்களாயின என அறிவிக்கும் அந்தச் சித்திரக்கோடுகளைத் தொட்டுத் தொட்டு, எண்ணி எண்ணி, அவள் விரல்களும் தேய்ந்துவிட்டதாகக் கூறுகிறார் குறும்புக்கார வள்ளுவர் - அதற்கு இதோ குறள்.
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல்.
அதிகாரம் - 127 - அவர்வயின் விதும்பல்; பாடல் - 1261
வழி பார்த்துப் பார்த்து கண்களும் மங்கின - நாட்கோடுகளை எண்ணி விரல்களும் தேய்ந்து விட்டன என்பது பொருள்.
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்