பொருளடக்கம் 36 / 300
செல்விடத்துக் காப்பான்
அச்சுப் பக்கம் 89–90 · ஸ்கேன் 106–107 · அதிகாரம் 31 (வெகுளாமை) — குறள் 301
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Colour illustration above the prose showing two uniformed men at a training-camp setting, one seated and one standing.
கலிங்கனும் கதிரவனும் உற்ற நண்பர்கள். சில நாட்கள் பிரிந்திருந்து ஒருநாள் சந்தித்தனர். ஊர்க் கதைகள் சிலவற்றைப் பேசினர். கதிரவன், கலிங்கனிடம் மெத்த ஆர்வத்துடன் கேட்டான்.
“நண்பா, இப்போது உன் கோபமெல்லாம் எப்படியிருக்கிறது? இன்னும் சினங்கொண்டு சீறி விழுந்தபடிதான் இருக்கிறாயா? தென்றல் என மாறித் திருந்தி விட்டாயா?”
கதிரவனின் கேள்விக்குக் கலிங்கன் சிரித்துக்கொண்டே பதில் சொன்னான்:
“அன்புத் தோழனே! நீ வியப்படைகிற அளவுக்கு என்னிடத்திலே மாற்றம் ஏற்பட்டு விட்டது! நான் ஒரு நிகழ்ச்சியைச் சொல்லுகிறேன் கேள்! நேற்று நடந்த நிகழ்ச்சிதான்! கேட்டால் நீ என்னைப் பாராட்டுவாய்!”
“அப்படி என்ன அற்புத நிகழ்ச்சி? அதையும்தான் சொல்வேன்; கேட்கிறேன்.”
“நேற்றுப் பாசறைப் பயிற்சி முகாமில் உட்கார்ந்திருந்தேன். என்னுடன் போர் வீரர்கள் பலரும் அமர்ந்திருந்தார்கள். அப்போது தளபதி அந்தப் பக்கம் வந்திருக்கிறார். நான் அவர் வந்ததைக் கவனிக்கவில்லை. அவர் வருவதைக் கண்ட மற்ற வீரர்கள், எழுந்து நின்று மரியாதை செலுத்தியிருக்கிறார்கள். அவர் அருகே வந்த
பிறகுதான் எனக்குத் தெரிந்தது. நான் எழுந்து நின்று வணக்கம் செலுத்துவதற்குள் தளபதி என்னிடமே வந்துவிட்டார். என் கையில் கண்ணாடிப் பாத்திரமொன்று இருந்தது. அப்போதுதான் தண்ணீர் குடித்துவிட்டு அந்தப் பாத்திரத்தைக் கையில் வைத்திருந்தேன். கண் இமைப்பதற்குள் தளபதியின் முரட்டுக் கால், அந்தக் கண்ணாடிப் பாத்திரத்தை உதைத்துக் கீழே உருட்டியது. பாத்திரம் உடைந்து சிதறியது. பதறிப் போய் எழுந்தேன். முகத்தில் காரித் துப்பிவிட்டுப் போய்விட்டார். நான் அமைதியாக நின்றேன். சரி! சினம் காக்கவேண்டும்; அதுவே சிறந்தது என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். நண்பா! என் கையில் இருந்த பாத்திரத்தைக் காலால் உதைத்தமைக்கும், என் முகத்தில் காரி உமிழ்ந்தமைக்கும், எனக்குக் கோபம் மட்டும் வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்! என் தலைக்கே ஆபத்து வந்திருக்கும் அந்தத் தளபதியால்! என் இன்னுயிர்த் தோழனே! இப்போது சொல், நான் சினம் காப்பவனாகிவிட்டேனா இல்லையா?”
கலிங்கன் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த கதிரவன் பதில் சொன்னான்:
“கலிங்கா, நேற்று நடந்ததைச் சொன்னாய் இப்போது! இரண்டு கிழமை கழுக்கு முன் நடந்தது நினைவிருக்கிறதா? நான் உன் இல்லத்துக்கு வந்திருந்தேன். வெயிலில் திரிந்துவந்த காரணத்தால் வந்ததும் வராததுமாக வேர்வை மிகுதியால் தண்ணீர் கேட்டேன். நீ உன் தம்பியைக் கூப்பிட்டுத் தண்ணீர் கொண்டுவரச் சொன்னாய். அவன் ஓடோடிச் சென்று ஒரு கண்ணாடிக் குவளையில் நீர் கொண்டு வந்தான். வந்த அவசரத்தில் குவளையைக் கீழே போட்டுவிட்டான். கண்ணாடிக் குவளை நொறுங்கிச் சிதறிவிட்டது. உடனே நீ என்ன செய்தாய்? அந்த இளம் தளிரின் கன்னங்களில் உன் கைகள் விளையாடின. அவன் ‘அய்யோ! அம்மா!’ என்று அலறிக்கொண்டே உள்ளே ஓடினான். ‘என்னப்பா, இப்படி அவன் கன்னம் வீங்கும்படி அடித்தாய்?’ எனக் கேட்டுக்கொண்டு வந்தார்கள் உன் தாயார்! என்ன பதில் சொன்னாய்? ‘சே, சும்மா கிட; பிள்ளைக்கு வாதாட வந்துவிட்டாயா? மரியாதையாக உள்ளே போ!’ இது, நீ உன் தாயாரிடத்திலே காட்டிய கோபம்! கலிங்கா! நான் ஏன் அதை நினைவுபடுத்துகிறேன் புரிகிறதா! தளபதி காலால் உதைத்துக் காரி உமிழ்ந்தபோது சினத்தை அடக்கிக்கொண்டது போற்றத்தக்கதல்ல! காரணம், அங்கே உன் சினம் செல்லாது! அதனால் அந்தச் சினத்தை அடக்கினால் என்ன - அடக்காவிட்டால் என்ன? நீ சினத்தை அடக்கியிருக்க வேண்டிய இடம், உன் தம்பியிடமும் தாயிடமும்!”
“இதைத்தானப்பா வள்ளுவர் கூறுகிறார்: நம் சினம் பலிக்குமிடத்தில் அதனை அடக்க வேண்டும்; சினம் பலிக்காத இடத்தில் அடக்கினால் என்ன- அடக்காவிட்டால் என்ன! சினம் செல்லுபடியாகாத இடத்தில் அடக்குவது பெரிய காரியமல்ல; செல்லுபடியாகும் இடத்தில் அடக்குவதே சிறப்புக்குரியதாகும்.”
கதிரவன் மேற்கோள் காட்டிய குறளைக் கேட்டுக் கலிங்கன் தலை குனிந்து கொண்டான்.
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால் என்.
அதிகாரம் - 31 - வெகுளாமை; பாடல் - 301
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்