பொருளடக்கம் 35 / 300
அமரகத்து ஆற்றறுக்கும்
அச்சுப் பக்கம் 87–88 · ஸ்கேன் 104–105 · அதிகாரம் 82 (தீ நட்பு) — குறள் 814
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Large colour illustration above the prose showing a mounted warrior being thrown from a rearing horse.
வில்லவன் என்ற வீரன், தன் இல்லத்து வாயிற்புறம் நின்றிருந்தான். அப்போது எதிர்ப்படைகளின் போர்முரசு, அவன் நாட்டு எல்லையில் கேட்டது. அதற்கிடையே அவனது மன்னனின் அழைப்பும் கிட்டியது. ‘நாட்டுக்குள் நுழையும் பகையை விரட்டிட வீட்டுக்கொரு வீரர் கிளம்பிடுக’ என வேந்தன் அறிவித்தான். பிறந்த மண்ணைக் காப்பாற்ற என்றைக்கும் தயாராக இருக்க வேண்டும்; எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்பதுதானே வீரர்க்கு இலக்கணம். அந்த இலக்கணத்தின் எடுத்துக்காட்டாக விளங்குகிறவனே வில்லவன்.
அவன், களம் புகுதற்கேற்ற உடைகளை அணிந்து கொண்டான். கவசம் பூண்டான். கூர்வேல், கேடயம், வாள் எனும் போர்க்கருவிகளை எடுத்துக் கொண்டான். தனது
குதிரையின்மீது ஏறிக்கொண்டு, மன்னர் குறிப்பிட்ட இடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.
எதிரிகளை வழியிலேயே மடக்கித் துரத்திடும் திட்டத்துடன் மன்னர், தனது படைவீரர்களைக் கோட்டை முகப்பில் அணிவகுத்து நிற்கச் செய்து, ஆணையிட்டதும் புறப்படுவதற்குத் தயாராக இருக்குமாறு பணித்தார்.
தலைநகரையும் தலைநகரைச் சுற்றிலுமுள்ள ஊர்களையும் சேர்ந்த வீரர்கள் ஒவ்வொருவராகக் குதிரையில் வந்து, அந்தப் படை வரிசையில் இணைந்த வண்ணமிருந்தனர்.
வில்லவனும் குறித்த நேரத்தில் அந்தப் படை அணிவகுப்பில் போய்ச் சேரும் ஆர்வத்துடன் தன் குதிரையைத் தட்டி விட்டுக் கொண்டிருந்தான். ஆனால், அவன் எதிர்பார்த்தது நடக்கவில்லை. சற்றும் எதிர்பாராத வகையில் அவன் ஏறியிருந்த குதிரை, ஒரு துள்ளுத் துள்ளி, அங்குமிங்கும் ஆடி அசைந்து, அவனைக் கீழே தள்ளிவிட்டு ஓடிவிட்டது. கீழே விழுந்த வலியைவிட, குதிரை அவனைத் தள்ளிவிட்டு ஓடிய அதிர்ச்சியை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. குதிரை இல்லாமலே ஓடிப்போய் அந்த அணிவகுப்பில் சேர்ந்து கொள்ளத் துடித்தான். காற்றினும் கடு வேகமாக ஓடினான், தன் நாட்டுப் படை வீரர்களுடன் சேர்ந்து பிற நாட்டுப் பகையை வீழ்த்த!
இந்தக் காட்சியை வள்ளுவர் பார்த்துக்கொண்டே நின்றார். எவ்வளவு நம்பிக்கையுடனும் அன்புடனும் வளர்க்கப்பட்ட குதிரை; அவனுடன் எவ்வளவு பழகிய குதிரை; அந்தக் குதிரை அவனுக்கு முக்கியமான நேரத்தில் பயன்படாது மட்டுமல்ல; அவனைக் கீழேயும் தள்ளி விட்டல்லவா போய்விட்டது.
அடடா! அந்த வீரன், தன் குதிரையின் செயலால் எவ்வளவு மனம் நொறிந்து போயிருப்பான். இவற்றையெல்லாம் எண்ணியது வள்ளுவரின் மனம். அந்தக் காட்சியை எதற்கு ஒப்பிடலாம் என்று சிந்தித்தார். “போர் வந்த நேரத்தில் களத்தில் தள்ளிவிட்டு ஓடிவிடும் குதிரையைப் போன்றவர்களின் நட்பைவிட ஒரு நட்பும் இல்லாமல் தனித்திருப்பதே சிறந்தது” என்ற அறிவுரைக்கான குறள் பிறந்தது. அதுதான் இது;
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை.
அதிகாரம் - 82 - தீ நட்பு; பாடல் - 814
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்