பொருளடக்கம் 34 / 300
புலப்பல் எனச் சென்றேன்
அச்சுப் பக்கம் 85–86 · ஸ்கேன் 102–103 · அதிகாரம் 126 (நிறையழிதல்) — குறள் 1259
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Large colour illustration above the prose showing embracing lovers in a moonlit/night setting.
“என்னுயிர்த் தோழி! நான் கூறுவதைக் கேட்டிடுக. நேற்றிரவு என்ன நடந்தது என அறியத் துடிக்கின்றாய் நீ! முதலில் அதற்கு முதல் நாளிரவு நடந்ததை உனக்குச் சொல்லுகிறேன். ஊர் உறங்கும் வேளையிலே வருவதாகச் சொல்லிப் போயிருந்தார் அவர். ‘யானைத் தலைகளைப்போல் உருண்டு கிடக்கும் சிறிய கற்பாறைகளுக்கருகே நிலவொளிபட்டு வெள்ளித் தகடுகளைப் போல அசைந்து கொண்டிருக்கும் நீரருவியின் பக்கம் நீ வந்து காத்திரு பெண்ணே - நான் எப்படியும் வந்துவிடுவேன் கண்ணே’ - எனக்கூறி, என் கழுத்துக்குக் கீழே அவர் பற்குறியும் இட்டுச் சென்றார். கண் பார்வைபடும் இடங்களில் சிவந்திருத்தால் வீட்டிலோர் களம் அமைந்துவிடும். விறகு வெட்டும் கருவியைத் தூக்கித் தலையைப் பிளப்பேன் எனக் குதித்திடுவார் தந்தை! அதை அவரும் உணர்ந்திருந்ததாலே, என்னை மெல்லவியெனத் தொடுவதுபோல் தொல்லையின்றித் தொட்டுச் சுகம் கொட்டியளித்தார். எனினும் அவர் இட்டுச் சென்ற அடையாளங்கள், அவர் முகங்காட்டி என்னை மயக்கும் கண்ணாடிகளாய் இருந்தன. அவர் குறிப்பிட்ட நேரம் எப்போது வருமெனத் தவம் கிடந்து சிறு பாறைகளுக்கருகேயுள்ள சிற்றருவியோரம் சென்று நின்றவள்தான்! அப்படியே நின்று கொண்டேயிருந்தேன். அருவியினை முத்தமிட்டு முத்தமிட்டு நிலவும் களைப்புற்றது போலும்! முகில் போர்வையினை இழுத்து மூடிக்கொண்டு உறங்கிவிட்டது. அங்கிருந்த நொச்சி மரமொன்றில் சாய்ந்திருந்த என் விழிகளும்
சோர்ந்து போயின. என் வீட்டுச் சேவல் பொழுது விடியப்போவதை அறிவித்து விட்டது. தாய் தந்தை விழிப்பதற்குள், ஊர் நடமாட்டத் தொடங்குவதற்கு முன் மனை திரும்ப வேண்டுமென்று விரைந்தோடி இல்லில் புகுந்து கொண்டேன். நேற்றுப் பகல் முழுவதும் நெருப்பின் மீது நடந்தேன்; நெருப்பின்மீது அமர்ந்தேன்; நெருப்பின் மீதே படுத்தேன். என் துயர் கண்டோ என்னவோ கதிரவனும் தன் கடமையை விரைவில் முடித்துக் கொண்டு மேற்றிசையில் ஓய்வு கொண்டான்.
அதே பாறைகள்! அதே சிற்றருவி! முதல் நாளைப்போலவே நொச்சி மரத்தடியில் நின்றுகொண்டு காத்திருந்தேன். அருவியின் இசை, மரங்களின் ஒலி, மரக்கிளைகளில் அமர்ந்திருந்த புள்ளினங்களின் சிறகடிக்கும் ஓசை, என்னைப் பரபரப்பில் ஆழ்த்திக் கொண்டு இருந்தன. சற்றுத் தொலைவிலே அவர் வரும் குறிப்பு தெரிந்தது. ஆம், அவரேதான்! முதல் நாள் இரவு முழுதும் என்னைச் சோதனைக்கு ஆளாக்கிய அவரேதான்!
தோழி! அவருக்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டுமென்று திட்டம் தீட்டினேன். அதனைச் செயல்படுத்த மிக உறுதியாக இருந்தேன். அவரிடம் நான் புரியும் ஊடலில், இனி அவர் ஒருமுறை, தான் அளித்த வாக்குறுதியைத் தவறக்கூடாது என்ற அளவுக்குப் பாடம் கற்பித்திடத் துணிவு கொண்டேன். என் உயிரல்ல, என் இன்பமல்ல. இனி இப்படி உன்னை ஏமாறச் செய்திட மாட்டேன். அய்யோ பாவம், நேற்றிரவெல்லாம் எனக்காகக் காத்திருந்த உன் கால்கள் நோகுமே... எங்கே அந்த வலி போக்கட்டுமா? என்று அவர் கெஞ்சி, நெளிந்து வளைந்திடுகிற வரையில் நான் அவரை ஏறெடுத்துப் பார்ப்பதில்லை; ஊடல் முடித்திடப் போவதில்லை என என்னைத் திட்டப்படுத்திக்கொண்டு ஊடல் போருக்கு ஆயத்தமானேன். அவரும் அருகே வந்துவிட்டார். அவர் முகத்தில் அச்சம் குடிகொண்டிருந்ததை நிலவின் ஒளி எனக்குத் தெளிவாக்கியது. முதல் நாள் என்னை ஏமாற்றிய தவறு, ஊடலுக்குத் தொடக்கவிழா நடத்தப் போகிறதே என்ற அச்சம்தான் அது.
அவர் மிக அருகே வந்துவிட்டார்! நான் அவரை நோக்கினேன். அசைவற்று நின்றேன். அதற்குள் பெரிய துரோகம் நடந்துவிட்டது. அந்தத் துரோகி வேறு யாருமல்ல! என் நெஞ்சம்தான்! நான் ஊடலைத் தொடங்குவதற்குமுன், அந்த அவசரக்கார நெஞ்சு என்னைப் பிடித்துத் தள்ளிவிட்டு அவரைப் போய்க் கூடிவிட்டது! பிறகு ஊடலுக்கு என்ன வேலை? என்னருகே வந்துவிட்ட அவரை ஓடிப்போய்த் தழுவிக்கொண்டேன். ஊடல் தலை நீட்டவேயில்லை. கூடலின் முற்றுகை பலமாகிவிட்டது. என் நெஞ்சே அவசரப்பட்டு என்னைக் காட்டிக் கொடுத்துவிட்ட பிறகு நான் என்ன செய்யமுடியும்? என் தாயும் தந்தையும் ஒப்புதல் அளித்து விட்டார்களாம். அந்தச் செய்தியை சிறிது நேரங்கழித்து அவரே சொன்னார். பிறகு அந்தத் தழுவல் இன்பத்தைப் பற்றி விவரிக்கவா வேண்டும்?”
தலைவி மகிழ்ச்சியில் ஆழ்ந்திருப்பது கண்டு தோழி, களிபேருவகை கொண்டாள்.
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு.
அதிகாரம் - 126 - நிறையழிதல்; பாடல் - 1259
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்