பொருளடக்கம் 33 / 300
நெடுநீர் மறவி
அச்சுப் பக்கம் 82–84 · ஸ்கேன் 99–101 · அதிகாரம் 61 (மடி இன்மை) — குறள் 605
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Large colour illustration above the prose showing the armed village guardian with an elderly petitioner; a tiger dominates the background.
“ஊர்க்காவலன்” என்பது அவன் பெயர் மட்டுமல்ல; அந்த ஊருக்கும் காவலன் அவன்தான். பத்தாயிரம் மக்களைப் பாதுகாக்கவும் பரிபாலிக்கவுமான பொறுப்பு அவனிடம் விடப்பட்டிருந்தது. ஒரு நாள் அவன் இல்லம் நோக்கி நூற்றுக்கணக்கான மக்கள் ஆடவரும் பெண்டிருமாகப் பதட்டத்துடன் ஓடிவந்தனர். வந்தவர்களை வாயிற்புறத்தில் அமரச் செய்துவிட்டு வீட்டுக் காவலர், ஊர்க்காவலனிடம் தகவலை அறிவித்தான். அப்பொழுதுதான் உறங்கச் செல்லலாம் என்று படுக்கை அறைக்குச் சென்றவன், செய்தி கேள்வியுற்று, “அடடா! தூங்கக்கூட விட மாட்டார்கள்
போலிருக்கிறதே!” என்று முணுமுணுத்தவாறு வாயிற்புறம் வந்தான். பகல் வேளைதான் அது; பிற்பகல்கூட அல்ல - முற்பகல் வேளைதான்! வந்தவர்களை விசாரிக்கத் தொடங்கினான். அந்த ஊரைச் சார்ந்துள்ள ஒரு குடிப்பத்து மக்கள் அவர்கள். குடிப்பத்துக்கு அருகாமையில் உள்ள மலைக்காட்டிலிருந்து புலியொன்று குடிப்பத்துக்குள் நுழைந்ததாகவும் எல்லோரும் சேர்ந்து தீப்பந்தங்களை எடுத்துக் கொண்டு விரட்டி விட்டதாகவும் மீண்டும் அந்தப் புலி, குடிப்பத்துக்குள் நுழையக் கூடுமென்றும் - எனவே அதனைக் காட்டுக்குள்ளேயே சென்று வேட்டையாடிக் கொன்று தங்களையும் தங்கள் குழந்தை குட்டிகளையும் காப்பாற்றுமாறும் அவர்கள் கண்ணீர் கொட்டி, காலில் விழுந்து முறையிட்டனர். ஊர்க்காவலன், அவர்களுக்குத் தைரியம் கூறியதோடு, அன்றைக்கே அவன் தன் ஆட்களுடன் சென்று அந்தப் புலியைக் கொன்று தீர்ப்பதாகவும் உறுதி கூறி அனுப்பி வைத்தான்.
மறுநாள் காலையில் சிற்றுண்டி அருந்தும்போது, ஊர்க்காவலனின் துணைவி அவனைப் பார்த்துக் கேட்டாள்.
“நேற்று வாக்களித்தபடி அந்தப் புலியைக் கொன்று குடிப்பத்து மக்களைக் காப்பாற்றி விட்டீர்களா?”
அவன் விடையளித்தான்.
“இல்லை! நேற்று வேறு ஓர் அலுவல் எனக்கு! அதனால் இன்றைக்குச் செல்கிறேன் வேட்டைக்கு!”
“அய்யோ ... அந்த மக்கள் எவ்வளவு நடுக்கத்தில் இருக்கிறார்கள். இதில் போய் நாட்களைக் கடத்தலாமா? உடனே அவர்களைக் காப்பாற்றுங்கள்” என்று அவள், அவனிடம் கேட்டுக்கொண்டாள். அவனும் ‘நிச்சயமாக’ என்று கூறிவிட்டுச் சிற்றுண்டி முடித்து எழுந்தான். தன் தாய்க்கு உடல் நலமில்லை - போய்ப் பார்த்துவிட்டு மறுநாள் காலையில் வந்துவிடுவதாக, அவன் மனைவி அவனிடம் அனுமதி கேட்டாள். அவன் சரியென்று தலையசைக்கவே அவளும் புறப்பட்டுச் சென்றாள். கூறியவாறு மறுநாள் காலையில் திரும்பி வந்தாள். கணவன் தூங்கிக் கொண்டிருந்தான். பெருமூச்சு செய்து அவனை ஒருவாறு எழுப்பினாள். அவன் எழுந்தவுடன் அவள் கேட்ட முதல் கேள்வி, “அந்தக் கொடிய புலியைக் கொன்று விட்டீர்களா?” என்பதுதான். “அடடே! அந்த வேட்டையை மறந்தேபோய் விட்டேனே” என்று அவன் சொன்ன பதில் கேட்டு அவள் பதறிப்போனாள்.
“என்ன இது? நேற்று முன்தினமே செய்திருக்கவேண்டிய காரியம் - அதையும் காலம் கடத்தினீர்கள். நேற்று போயிருப்பீர்கள் என நினைத்தேன். தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். இன்று கேட்கிறேன். மறந்துவிட்டதாகச் சொல்கிறீர்கள்! உங்களை நம்பியிருக்கும் மக்களுக்கு இப்படியா தொண்டாற்றுவது! சரி - சரி! இப்பொழுதாவது புறப்படுங்கள். உடனே புறப்படுங்கள்” என்று உரக்கக் கூறினாள் அவள். “இப்போது என்னால் முடியவே முடியாது. அவ்வளவு சோர்வாக இருக்கிறது. மாலையில் போகிறேன்” என்று மீண்டும் சுருண்டு படுத்துக் கொண்டான் அந்த ஊர்க்காவலன்.
மாலையில் மனைவியின் தொல்லை தாங்க முடியாமல், புலி வேட்டைக்கான கருவிகளுடனும் ஆட்களுடனும் கிளம்பினான். காடு நோக்கிச் செல்வதற்கு முன்பு அந்தக் குடிப்பத்திற்குச் சென்று மேலும் சில விவரங்களைத் தெரிந்துகொள்ள விரும்பினான்.
குடிப்பத்திற்குள் நுழைந்தபோது, அங்கிருந்த மக்கள் அவனை வெறுப்போடு பார்த்தார்கள். சிலர் அலட்சியப்படுத்தினார்கள். அவன் ஓர் இடத்தில் நின்று கொண்டு அனைவரையும் அழைத்தான். குடிப்பத்து மக்கள் அவனைச் சூழ்ந்து திரண்டனர். “உங்கள் வேண்டுகோளின்படி புலி வேட்டைக்குப் புறப்பட்டு விட்டேன்” என்றான். கூட்டத்தில் அழுகையுடன் கூடிய சிரிப்பொலி எழுந்தது. அந்தச் சிரிப்பு வெறிச் சிரிப்பாக இருந்தது. ஒரு மூதாட்டி அவனுக்கு எதிரே வந்தாள்.
“நீ ஊர்க்காவல் புரிகிற அழகே அழகு! உன்னிடம் நாங்கள் முறையிட்ட பிறகு இந்தக் குடிப்பத்தில் புலிக்கு இரையான குழந்தைகள் மூன்று! இதோ பார் - அருமைச் செல்வங்களை இழந்து நிற்கும் வேதனை உருவங்களை! உன் ஊர்க்காவல் எங்களுக்குத் துணை புரியாது என்று தெரிந்துகொண்டோம். நீ எதிலும் காலம் கடத்துபவன்; மறதியின் வடிவம்; சோம்பலின் சுரங்கம்; தூக்கத்தில் மன்னன். உன்னால் எங்களைக் காப்பாற்ற முடியாது என்று உணர்ந்தோம். நாங்களே ஒன்று திரண்டு புலியை வீழ்த்திவிட்டோம். தேவையானால் உன் ஆட்களைவைத்து அதன் தோலை உரித்துக் கொண்டுபோ! அதன் நகங்களை வெட்டிக் கொண்டுபோ! எங்கள் குழந்தைகளின் குருதியில் மூழ்கிய அதன் பற்களைப் பிடுங்கிக் கொண்டுபோ!” என்று ஆவேசமாகப் பேசினாள். ஊர்க்காவலன் குனிந்த தலை நிமிரவில்லை. வெட்கம் நெஞ்சினைத் தாக்கவே, யாரிடமும் பேசாமல் அடிமேல் அடிவைத்து நடந்து அந்தக் குடிப்பத்தைவிட்டு அகன்றான். அதனால்தான் வள்ளுவர் சொன்னார்: காலம் தாழ்த்தல் - மறதி - சோம்பல் - அளவு மீறிய உறக்கம் ஆகிய நான்கும்; கெடுகின்ற இயல்பு படைத்தவர்கள் விரும்பி ஏறுகிற மரக்கலமாகும் என்று! இதோ குறள்:
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்.
அதிகாரம் - 61 - மடி இன்மை; பாடல் - 605
காப்பக விவரிப்பு: Small printed chariot/monument motif centered below the Kural citation block near the foot of the page.
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்