பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 32 / 300

அ. சிறுமை நமக்கொழிய / ஆ. முயக்கிடைத் தண்வளி

அச்சுப் பக்கம் 8081 · ஸ்கேன் 9798 · அதிகாரம் 124 (உறுப்புநலனழிதல்) — குறள் 1231, 1239

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour illustration above the prose showing a couple embracing in a flower-filled grove.

எழில் குலுங்கும் பொழில் நடுவே எங்கியவன் வருவது வாடிக்கைதான்! அவள் வரும்போது அங்குள்ள மலர்கள் எல்லாம் நாணமுற்று வேறுபக்கம் திரும்பிக் கொள்ளும். காரணம், அவள் மலர்விழிக்கீடாக எந்த மலரும் அங்கில்லை. எனவே அவள் முகத்தில் பதித்துவரும் ஒளிமலர்கள் கண்டு பொழில் மலர்கள் வெட்கித் தலைகுனிவது இயற்கைதானே! ஏனோ தெரியவில்லை, இரண்டு மூன்று நாட்களாக அந்த மலர்க்கண் மங்கை, பூங்காவின் பக்கம் வரவே இல்லை.

இன்று அதோ வருகிறாள். ஆனால் நடையிலே தெம்பு இல்லை. கொடி ஒன்று பரதக்கலை பயின்றது போல்தான் அவள் நடை இருக்கும். இன்றோ அந்த நடைக்கென்ன தடையோ தெரியவில்லை. அவளைக் கண்டதும் நாணமுறும் மலர்கள், இன்றைக்கு அவ்வாறின்றித் தலைநிமிர்ந்து நிற்கின்றன. அந்த மலர்களைக் காண்பதற்கு நாணமடைந்து அவளுடைய விழிகள் வேறுபக்கம் திரும்பிக்கொண்டன. நிலைமையில் தலைகீழ் மாற்றம். பூவினை வெல்லும் அந்தப் பூவையின் விழி கண்டு பூந்தோட்டமே நாணியதற்கு மாறாக, இன்று அவள் விழிகளன்றோ பூக்களைக் கண்டு புறமுதுகிட்டு போர்வீரனைப் போல வெட்கமுற்று நிற்கின்றன.

இதுபற்றி இருமலர்கள் பேசிக்கொள்வதைக் கேட்டால் உண்மை வெளியாகிவிடும். உற்றுக் கேட்போம், மலர் இதழ்களின் அசைவுகள் உதிர்க்கும் சொற்களை!

“நம்மை நாணமுறச் செய்யும் அளவுக்கு அழகு கொழிக்கும் அவள் கண்கள் இன்று ஏன் இப்படி வாடிய மலரைக் காட்டிலும் களைந்த நிலையில் காட்சி தருகின்றன?”

அதற்கு மற்றொரு மலர் விடையளிக்கிறது, விளக்கமாக!

“உனக்குத் தெரியாதா சேதி? அவள் காதலன் இரண்டு நாட்களுக்கு முன்பு வேற்றூர் சென்றுவிட்டான்; இன்னும் வீடு திரும்பவில்லை. அந்தப் பிரிவை நினைத்து அழுது அழுது அவள் கண்கள் வதங்கிவிட்டன. அதனால்தான் இன்று நாம் அவள் விழிகளைத் தோற்கடித்துவிட்டோம்.”

புன்னகை புரிந்தவாறு தன்னைக் கேலி செய்து பூக்கள் உரையாடியதை, அவளும் காது கொடுத்துக் கேட்டுவிட்டாள் போலும்! உடனே அவள் நெஞ்சுக்குள்ளே மெல்லிய குரலில் திருக்குறள் பாடல் ஒலிக்கிறது. சோகத்தை நமக்கு வழங்கிவிட்டுக் காதலர் வெளியூர் சென்று விட்டமையால், அழுத கண்கள் அழகினை இழந்து நறுமலர்களுக்கு நாணும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண்.

இந்தக் குறள் ஒலித்துக் கொண்டிருந்தபோதே, “கண்மணி!” எனும் காதலன் குரல் ஒலிக்கிறது. ஒரு மின்வெட்டு! தழுவிக் கொள்கிறார்கள். வீணையும் நாதமுமாக ஆகிவிடுகிறார்கள். இதைக்கண்டு மலர்களுக்கு வியர்த்துக் கொட்டுகிறது. என் செய்வது! தங்களுக்குக் கிடைத்த வெற்றி சிறிது நேரங்கூட நிற்கவில்லையே! அந்த அதிர்ச்சியில் வியர்வை! உடனே மலர்க்கொடிகளும், செடிகளும் தென்றலை இழுத்து வீசிக் கொள்கின்றன. மலர்களில் மோதிய குளிர்ந்த காற்று தழுவிக்கொண்டு இருந்த காதலர்களுக்கிடையே நுழைந்து செல்கிறது. தழுவுதலுக்கிடையே காற்று நுழைவதும் இடமிருக்கக்கூடாது என்று கருதிக் தழுவிய அவளுக்கு அந்தச் சிறு இடைவெளிகூட ஒரு பிரிவு உணர்வை உண்டாக்குகிறதாம். காதலன் வருகையால் அழகுபெற்ற அவள் கண்கள் இப்போது பசலை நிறம் அடைந்து விடுகின்றனவாம்! காற்று நுழைந்து செல்லவும் இடமின்றிக் கட்டித் தழுவிட வேண்டும். இல்லையேல் அந்தச் சிறிய பிரிவையும் அவள் கண்கள் தாங்கிக் கொள்ளமாட்டா!

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண்.

மிகச் சிறிய பிரிவையும் பொறுத்துக்கொள்ள முடியாமல் உறுப்புநலன் அழிகிறது என்பதற்கு வள்ளுவர் தீட்டியுள்ள இந்த ஓவியங்களுக்கு நிகரான ஓவியம் உலகில் உண்டோ? இந்தக் கேள்விக்குப் பதில் ‘இல்லை! இல்லை!’ என்பதுதான்.

அதிகாரம் - 124 - உறுப்புநலனழிதல்; பாடல்கள் - 1231, 1239

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்