பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 31 / 300

கண்ணுடையர் என்பவர்

அச்சுப் பக்கம் 7879 · ஸ்கேன் 9596 · அதிகாரம் 40 (கல்வி) — குறள் 393

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour illustration above the prose showing the prospective-bride household scene; a pair of stylised tearful eyes appears in the upper-right of the illustration.

இளங்கவிஞர் ஒருவர், திருமணமாகாதவர். அவருக்கு மணம் முடித்திட ஆவல் கொண்ட அவரது நண்பர், ஓர் அழகிய பெண்ணைப்பற்றி அவரிடம் கூறினார். அந்தச் சிற்றூரிலேயே அந்தப் பெண் இருப்பதாகவும் அவளுக்கு வயதுமுதிர்ந்த ஒரு தாயாரைத் தவிர வேறு யாரும் துணையில்லையென்றும் அந்தத் தாயைக் கேட்டதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கவிஞரிடம் நண்பர் கூறினார். இளங் கவிஞரும் அந்தச் செய்தி கேட்டு மனமகிழ்ந்தார். தனக்கு வாழ்க்கைத் துணையாகப் போகும் அந்த மங்கையெல்லாம் எப்படியெல்லாம் இருப்பாள் என்று கவிதைத் தேர் ஏறிக் கற்பனை வீதியில் வலம்வரத் தொடங்கினார்; நடைபயிலும் அன்னமோ - இள மடமயிலோ - நகை முத்தோ - முல்லையோ? இதழ்கள் தேன் நனைத்த சுனையோ - இன்பத்தின் எல்லையோ? - இப்படிக் கற்பனை விளைவித்த தொல்லையால் ஏங்கிய கவிஞரை அழைத்துக் கொண்டு அவரது நண்பர், பெண்ணை நேரில் பார்த்து வரப் புறப்பட்டார். தன் கவிதைத் திறனால் உருவாக்கொடுத்துப் படைத்திருந்த அந்த வடிவழகியைக் காணும் ஆவலுடன் கவிஞர், நண்பருடன் அந்தப் பெண்ணின் இல்லம் சென்றார். கூடத்தில் விரித்திருந்த தாழம்பாய் மீது கவிஞரும் நண்பரும் அமர்ந்தனர். பெண்ணின் தாயார், அவர்களை மிக்க மரியாதையுடன் வரவேற்றாள். சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு பெண்ணும் மாப்பிள்ளையும் ஒருவரையொருவர் நேரில் காணும் வாய்ப்பினை ஏற்படுத்த அந்தத் தாய் முனைந்தாள்.

“கயல்விழி! கயல்விழி!” என இருமுறை அழைத்தாள். அடுக்களையிலிருந்து பதில் வரவில்லை.

மூன்றாவது முறை அழைத்த பிறகு, “உம்!” என்ற ஒலியெழுந்தது. “கயல்விழி! கண்ணு! அந்த மோரைக் கொண்டுவா அம்மா!” என்று தாயார் அன்பொழுக ஆணையிட்டதும், ‘இட்டடி நோக எடுத்தடி கொப்பளிக்க’ என்பது போலக் கயல்விழி இரண்டு மோர்க் கலயங்களைக் கையில் ஏந்திக் கொண்டு கூடத்திற்கு வந்தாள். அவற்றைத் தாயார் வாங்கி, கவிஞரிடமும் அவரது நண்பரிடமும் கொடுத்திடும்போது கவிஞரின் இதயம் அவரிடத்தில் இல்லை. அது இறக்கை கட்டிக் கொண்டு கற்பனை வானில் பறக்கத் தொடங்கிவிட்டது. அவர் எதிர்பார்த்ததற்கும் மேலாக அவ்வளவு அழகி அவள். பொங்கிப் பூரித்து வழியும் அந்த இளமை எழிலுக்குச் சிகரமாக விளங்கியவை அவளது விழிகளே என்பதைக் கவிஞர் உணர்ந்தார். அவர் உள்ளம் பேசிற்று. “ஆகா - காதளவு நீண்ட கரிய விழிகள்! அந்த விழிகளுக்குத்தான் எவ்வளவு காந்த சக்தி! கண்ணாடிப் பேழைக்குள் கருவண்டு சிக்கிச் சுழல்வது போல் கவர்ச்சிமிக்கக் கண்ணின் மணிகள்! சேல்விழி என்பதா? அல்லது என் நெஞ்சில் ஊடுருவும் வேல்விழி என்பதா? இவள் கடைக்கண் ஆணைக்குக் கட்டுக்குள் நிலவுலகு மட்டுமல்ல; கதிரவன் திரியும் வானும் கட்டுப்பட்டு நடக்குமே! ஏன் என்றால் இதுதான் கண்! இவள் பெண் அல்ல; கண் என்று கூறுவதே பொருத்தம்.” இவ்வாறு தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்த கவிஞர், எதிரே நின்று கொண்டிருந்த கயல்விழியிடம் ஏடு ஒன்றை நீட்டி, “இந்தாம்மா! இது நம் எதிர்கால இல்வாழ்வைப் பற்றி நான் எழுதிய கவிதை! எங்கே, உன் வாய் திறந்து இதனைப் படித்திடு” என்றார்.

கயல்விழி, “ஹஹா-ம்” என்றவாறு தலையசைத்து நின்றாள்.

“அதற்குள் இதெல்லாம் நடக்குமா? பெண்ணுக்கு வெட்கமிருக்காதா?” என்றார் நண்பர்.

“வெட்கம் மாத்திரமில்லீங்க! என் பெண்ணுக்கு எழுதப்படிக்கத் தெரியாதுங்க! அதுதாங்க அவளுக்கு ஒரு குறை” என்று தாயார், முகவாட்டத்துடன் கூறினாள்.

உடனே, இளங்கவிஞரின் மலர்ந்திருந்த இதயம் கூம்பிவிட்டது; முகம், கறுத்துப் போயிற்று; நண்பரின் காதில் மெல்லிய குரலில் சொன்னார்:

“இவள் பெண்ணல்ல; கண் என்று கருதி மகிழ்ந்தேன். இவளுக்குக் கல்வி அறிவு இல்லையாம்! இவள் முகத்திலிருப்பது கண்ணே அல்ல; புண்! என்று முடிவுக்கு வந்து விட்டேன். என் மனமும் முறிந்தது. இந்த மண ஏற்பாடும் முறிந்தது. வருக போகலாம்.”

நண்பரின் பதிலுக்குக் காத்திராமல் கவிஞர் அந்த வீட்டைவிட்டு வெளியேறி விட்டார். இனம் தெரியாத ஒரு அமைதி அந்தக் கூட்டத்தில் நிறைந்திருந்தது. கண் இணைக் காட்டிலும் கல்வியே சிறந்தது என்பதற்கு வள்ளுவர் வழங்கிடும் குறள் இது:

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்.

அதிகாரம் - 40 - கல்வி; பாடல் - 393

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்