பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 30 / 300

அ. மறைப்பெறல் ஊரார்க்கு / ஆ. வாராக்கால் துஞ்சா

அச்சுப் பக்கம் 7677 · ஸ்கேன் 9394 · அதிகாரம் 118 (கண் விதுப்பழிதல்) — குறள் 1180, 1179

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour illustration above the prose showing two women, with a pair of hanging drums above/behind them.

“திடும்! திடும்! திடும்!

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்........”

இவ்வாறு பறையை முழக்கிவிட்டுச் செய்தியைச் சொல்லத் தொடங்கினான் பறையறிவிப்போன்! அவன் தொடர்ந்து சொல்லப் போவது நல்ல செய்தியா? கெட்ட செய்தியா? அது பற்றியெல்லாம் அவன் கவலைப்பட்டுக் கொள்ளவில்லை. சற்றே திறந்திருந்த தெருக்கதவின் வழியாக அவனைப் பார்த்தாள்; அந்த ஒலியைக் கேட்டாள். அவன் சொல்லப் போகிற செய்தி என்ன? அதுபற்றி அவா எழுந்திடவில்லை. கதவைச் சாத்திவிட்டுத் தாழ்வாரத்து முற்றத்தில் போய் உட்கார்ந்து

கொண்டாள். பறை அறைதல் என்னும் நிகழ்ச்சியைக் கற்பனை செய்து பார்க்கிறாள். ஊர்மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய பொதுவான செய்தியைத்தான் பறை முழக்குவோன் அறிவிக்கிறான். அப்போது அவளுக்குத் தன் கண்களைப் பற்றிய நினைவு வருகிறது.

“என் கண்களும் இந்தப் பறையைப் போல்தான் இருக்கின்றன. பறை அறைதல் வாயிலாகவாவது ஊரார் பொதுச் செய்திகள் கூறப்படுகின்றன. ஆனால் என் கண்களோ, காதலரை எண்ணி வருந்துகிற - மறைத்து வைக்கப்பட வேண்டிய துன்பச் செய்தியையும் ஊராருக்கு அறிவித்து விடுகின்றன. என் கண்களுக்கும், பறை அறைதலுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.”

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல் அறைபறை கண்ணா ரகத்து.

“அறையப்படும் பறை போன்றன என் கண்கள். துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களையுடைய எம்மைப் போன்றவர்களிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊர்மக்களுக்கு அரிய காரியமல்ல!”

இப்படித் தனக்குத் தானே அந்தத் தாழம்பூ மேனியாள் பேசிக்கொண்டிருந்தபோது, தோட்டத்துக் கதவைத்திறந்து கொண்டு தோழை வந்தாள்! வந்த தோழியைப் பைங்கிளி வரவேற்றாள்!

“என் தோழை, உன் கண்கள் சோர்வடைந்து காணப்படுகின்றன? ஒரு வேளை உன்னுடையவர் நேற்றிரவு வரவில்லையா? அதனால் அவர் வரவு பார்த்து விழித்துக் கிடந்தனையோ, விழியிரண்டும்?”

என வினவினாள் பைங்கிளி! தோழை பதில் சொன்னாள்:

“அட பைத்தியமே, பைங்கிளி! இதுகூடவா உனக்குத் தெரியவில்லை? காதலர் வராவிட்டால், ‘வரவில்லையே, வரவில்லையே’ என்று வழிபார்த்து விழி மூடாமல் கிடக்கிறேன். அவர் வந்துவிட்டாலும் விழி மூடுவதில்லை. வந்தாலும் உறக்கமில்லை. வராவிட்டாலும் உறக்கமில்லை. என் கண்கள் சோர்வடையாமல் என்ன செய்யும்?”

இந்தப் பதில் கேட்டு பைங்கிளி நாணமுற்றாள்; அவள் தோழியைவிட வயதில் இளையவள், அதனாலே!

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண்

அதிகாரம் - 118 - கண் விதுப்பழிதல்; பாடல்கள் - 1180, 1179

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்