பொருளடக்கம் 29 / 300
கனை கொடிது யாழ்கோடு
அச்சுப் பக்கம் 74–75 · ஸ்கேன் 91–92 · அதிகாரம் 28 (கூடாவொழுக்கம்) — குறள் 279
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Large colour illustration above the prose showing two men in a martial setting, one associated with a bow and a spear visible between them.
“அவனது அழகிய கவர்ச்சிகரமான தோற்றமே அவனை உத்தமன் என்று ஊருக்கு உணர்த்துகிறது. அவன் கண்களில்தான் எவ்வளவு கனிவு! புன்னகை புரிகிறான். ‘புனிதனே! புவிக்கோர் நல்லமுதே!’ என்று புகழ்ந்திட முந்துகிறது நா! அதிகமாகக்கூட அவன் யாரிடமும் பேசுவதில்லை. கேட்ட கேள்விகளுக்குக்கூட இதழ் அசைவது தெரியாமல் பதில் கூறுகிறான். பெண்கள் நிறைந்த கூட்டமொன்றில் அவனுக்கு விழாக் கொண்டாட்டி வரவேற்பு வழங்கினர். அந்தப் பெண்களை அவன் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. மகளிர் அவனைச் சீலம் நிறைந்தவன் என்று சிங்காரப் பண்பாடிப் போற்றி மகிழ்ந்தனர். அவனோடு இன்னொருவன் வந்தானே அவன் மிகவும்
கெட்டவன்; அவன் பார்வையே சரியில்லை; பெண்களிடம் சுற்றிச் சுற்றியோடித்தான் யார் என்பதை காட்டிக் கொண்டான். முறுக்கு மீசை - முரட்டு உடல் - மூடத்தனம் நிறைந்த மூளை - மொத்தத்தில் நல்லவன் அல்லன்! அலையும் விழிகளும், இளித்த வாயும், போதும் - அவன் ஒரு காமுகன் என்பதை எடுத்துக் காட்ட!”
-இப்படி அந்த இரண்டு மனிதர்களைப் பற்றியும் ஊரார் தங்கள் மதிப்புரையை எழுதி தள்ளினார்கள்! இருவருமே அந்தப் பகுதி மக்களுக்குப் பாதுகாப்பளிக்கும் படைவீரர்களைக் கண்காணிப்பதற்காகப் புதிதாக ஊருக்கு வந்த தளபதிகள்.
வரவேற்பு விழா முடிந்து ஒரு கிழமை கழிந்தது. அழகிய தோற்றமும் ஊரார் மதிப்புரையும் பெற்ற தளபதி, ஒரு நாள் இரவு ஒளிந்து ஒளிந்து தெருவில் நடந்தான். ஊரார் அவனை உற்றுக் கவனித்தனர். தெருக்கோடியில் தேன்மொழி என்ற குடும்பப் பெண்ணொருத்தி. அவள் ஆளன் ஊரில் இல்லை. அவளை அணைத்து இன்புற இல்லில் நுழைந்தான்.
மலர் கசங்கிடும் வேளையில், இன்னொரு தளபதி உள்ளே பாய்ந்தான். “இழிமகனே! கடைப்பிறவியே! உயிர் தேவையெனில் ஓடிப்போ!” எனச் சீற, அது கண்டு கொடியவனும் குழைவானான். இருவருமே போரிட்டனர். முதலாமவன் மாண்டான். அடுத்தவனே நல்லவன் எனும் பெயர் பூண்டான்.
“நேர்மையானவன்போல் தோன்றிய தளபதி கீழ்மைச் செயல் புரிந்தான். கீழோன்போல் தோன்றியவனோ மேலான செயலாலே மேலோன் ஆனான்” என வாழ்த்தியது ஊர்.
இதையே வள்ளுவர் இரு அடியில், “நேராகத் தோன்றும் அம்பு கொலைச் செயல் புரியும் - வளைந்து தோன்றும் யாழ் இன்பம் பயக்கும்” என்று கூறிவிட்டு, “அவ்வாறே மாந்தரையும் அவர்தம் உருவத்தால் கணக்கிடுவதை விடுத்து, அவர்களின் செயல்களைக் கொண்டு கணக்கிடுதல் நன்று” என்று விளக்குகிறார். அதற்கு, இதோ இணையற்ற குறள்:
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன வினைபடு பாலாற் கொளல்.
அதிகாரம் - 28 - கூடாவொழுக்கம்; பாடல் - 279
காப்பக விவரிப்பு: Small statue illustration centered below the citation line near the foot of the page.
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்