பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 26 / 300

நனவென ஒன்றில்லை

அச்சுப் பக்கம் 6869 · ஸ்கேன் 8586 · அதிகாரம் 122 (கனவுநிலையுரைத்தல்) — குறள் 1216

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour illustration above the prose showing a young woman seated on a bed with cushions and draped cloth, while a man's portrait/figure appears behind her.

அவளோர் சித்திரப் பாவை. உரித்தெடுத்த அல்லித் தண்டின் நிறம் பெற்ற உருக்குலையா மங்கை. அவள் ஒளி முகம், ஓராயிரம் நிலவுகளை ஒன்றாக அடுக்கி வைத்துக் கற்பனை செய்து போட்டி போட்டுப் பார்த்தாலும், எதிர் நிற்கக்கூடிய

ஆற்றல் வாய்ந்தது. அத்தகைய அழகின் வடித்தெடுத்த கூட்டு அவள்! காணக் கிடைக்காத தங்கம்! தேடக் கிடைக்காத வைரம்! களிப்பிலாடும் மயில்! காதாரப் பண்பாடும் குயில்! நடக்கும் பொன் வண்டு! நடனமிடும் நட்சத்திரம்!

அவள், அன்னத்தூவி பரப்பிய மஞ்சத்திலே ஆனந்த நித்திரை செய்து கொண்டிருக்கிறாள். தூங்கும் அந்தத் தோகையாளின் துடியிடை நெளிவதேன்? தூய்மை நிறை அவள் செவ்விதழ்களிலே அமுதம் நிறைவதேன்? மின்னித் தேங்கும் அந்த அமுதத்தை, அவளது அரும்பு இதழ்கள் அவளையுமறியாமல் சுவை பார்ப்பதேன்? ஆக - ரத்தினத்தின் நிறம் பழிக்கும் விதத்திலே அவள் கன்னங்கள் மாறுகின்றனவே, அது ஏன்? எத்தகைய மந்தகாசமான புன்னகை! முல்லைச் சிரிப்பா? முழு நிலாத் தோற்றமா? எல்லையிலா மகிழ்ச்சியின் கோடுகள் அவள் வதனமெங்கும் அழகுக் கோலங்கள் போடுகின்றனவே!

இதற்குக் காரணம் யாரைக் கேட்பது? வள்ளுவரைத்தான் கேட்க வேண்டும்.

“தம்பி! அவளே - அதோ எழுந்து விட்டாள் - அவளையே கேள்.”

இப்போது அவள் தனக்குத்தானே பேசிக்கொள்கிறாள். அது நம் காதுகளில் விழுகிறது - கேளுங்கள்:

“கனவிலே வந்து என்னை என் காதலர் கூடினார். இன்ப சுகந்தரும் அன்பு பொருந்தி ஆனந்தம் பெற்றேன். என்னை விட்டு நீங்காமல் கனவிலே கூடியிருந்த என் காதல் தேவனை, நனவு என்று சொல்லப்படுகிற ஒரு கொடியவன் ஓடிவந்து பிரித்து விட்டானே!”

காரிகை கதறுகிறாள்; நனவைத் திட்டுகிறாள்.

காதலனோடிருப்பதாகக் கனவு கண்டாளாம். விழித்துக் கொண்டாளாம். அதற்காக வருந்துகிறாள். அந்தச் சோகத்தை வள்ளுவர் நடையிலே கேட்டு இன்பம் பெறுங்கள் - இதோ!

நனவென ஒன்றில்லை யாயின் கனவினாற் காதலர் நீங்கலர் மன்.

அதிகாரம் - 122 - கனவுநிலையுரைத்தல்; பாடல் - 1216

காப்பக விவரிப்பு: Small printed statue motif below the Kural/citation block.

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்