பொருளடக்கம் 25 / 300
வேலன்று வென்றி
அச்சுப் பக்கம் 66–67 · ஸ்கேன் 83–84 · அதிகாரம் 55 (செங்கோன்மை) — குறள் 546
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Large colour illustration above the prose showing a spear-bearing victorious king/warrior in conversation with a bearded Valluvar figure; chariot and army imagery appear behind them.
பகைநாடு புகுந்து வெற்றிபெற்ற மன்னன், தனது படையினர் புடை சூழத் தலைநகரம் நோக்கி வந்து கொண்டிருந்தான். வரும் வழியில் வள்ளுவப் பெருந்தகையாரைச் சந்தித்தான். அவரைக் கண்டவுடன் தன் தேரைவிட்டு இறங்கிக் கீழேவந்து வணக்கம் தெரிவித்தான். வள்ளுவரும் வாழ்த்தி நின்றார்.
“மன்னவனே! மாற்றாருடன் நடத்திய போர் எப்படி இருந்தது?”
என வள்ளுவர் கேட்டு வாய் மூடுவதற்குள், மன்னன் தனக்குக் கிடைத்த வெற்றிச் செய்தியைக் கூறிவிட்டு, களத்தில் தானும், தனது வீரர்களும் எவ்வாறு போரிட்டு அந்த வெற்றியைப் பெற முடிந்தது என்பதை விளக்கத் தொடங்கினான்.
“பகையரசனின் படைவலிவைக் குறைத்து மதிப்பிட இயலாது. இரு தரப்பிலும் யானைப்படைகள் மோதிக்கொண்ட காட்சி கருமுகிற் கூட்டங்கள் மோதிக்கொள்வதை ஒத்திருந்தது. குன்றங்கள் ஒன்றோடொன்று இடித்துக் கொண்டு சிதறி நொறுங்குவதைப்போல் தேர்ப்படைகளின் தாக்குதல் அமைந்தது. குதிரைகள் பாய்ந்து போரிட்டன, என்று கூறமாட்டேன்! பறந்து பறந்து போரிட்டன! வேலும் வாளும் தாங்கிய வீரர்களோ எதிர் எதிரே கொந்தளித்து அலைபாய்ந்து மோதியெழும் கடல்களின் ஆவேசத்தையும் மிஞ்சுகிற அளவில் களக்காட்சியை உருவாக்கினர். ஒரு கட்டத்தில்; ஆமாம், அதுதான் போரின் இறுதிக்கட்டம். பகையரசனும் நானும் ஒருவரையொருவர் நேரடியாகவே சந்தித்தோம். அவன் வீசிய வேல், என் நெஞ்சைக் குறிபார்த்து வேகமாகப் பாய்ந்துவந்தபோது, நான் கண்ணிமைக்கும் நேரம் தாமதித்திருந்தால்கூட வீரமரணத்தைத் தழுவியிருப்பேன். ஆனால், அதற்குள் அதனைத் தடுத்து மட்டுமல்ல; இதோ இந்த வேலினால் அவன் உயிரையும் போக்கிவிட்டேன். நான் எறிந்த வேல்பட்டுப் பகையரசன் விழுந்த அடுத்த நொடியிலேயே அவனது படை வரிசை சிதறியோடத் தொடங்கியது. நமது வீரர்கள் வெற்றிக்கொடியை உயர்த்தினர். பெருந்தகையீர்! இந்த வேலின் நுனியைப் பாருங்கள். பகையரசனின் செங்குருதி தோய்ந்து காய்ந்திருப்பதைக் காணுங்கள்.”
என்றவாறு வெற்றிக்களிப்பில் ஆழ்ந்திருந்த மன்னன், வேலை வள்ளுவரிடம் நீட்டினான். அவர் அதைக் கையால் தொடாமலே, அவனைப் பார்த்துச் சொன்னார்:
“மன்னவனே! நீ பெற்ற வெற்றியினைப் புகழ்கிறேன். உன் படையின் ஆற்றலைப் போற்றுகிறேன். பகையரசை வீழ்த்திய இந்த வேல் உன் வெற்றியின் சின்னமாகத் திகழ்கிறது என்பதை நான் மறுத்திடவில்லை. மன்னர்கள் போரைத் தவிர்த்திட இயலாது என்பது உண்மைதான். இந்தப் போரில் கிடைக்கும் வெற்றி மகிழ்ச்சியூட்டக்கூடியதுதான்! ஆனால், ஒன்றை மறந்துவிட வேண்டாம் வேந்தனே! ஓர் அரசுக்கு உலகம் போற்றும் வெற்றியைப் பெற்றுத் தருவது பகைவரை வீழ்த்தும் வேல் அல்ல; குடிமக்களை நடத்தும் கோல்தான்! அந்தக் கோலும் வளையாத செங்கோலாக அமைந்திட வேண்டும். அத்தகைய செம்மையான ஆட்சியை மக்களுக்கு அளித்து நிலையான வெற்றியைப் பெறுவாயாக!”
வள்ளுவரின் அறிவார்ந்த கருத்துக்களில் உள்ளத்தைப் பறிகொடுத்த மன்னன், கையிலிருந்த வேலைக் கீழே எறிந்துவிட்டு, அவரை வணங்கித் தேர் ஏறித் தலைநகர் நோக்கிக் கிளம்பினான். வள்ளுவர் புன்னகை புரிந்தவாறு நின்றார். சிந்தனை எழுத்தாணி கொண்டு தனது இதயத்தில் பின்வரும் குறளை எழுதிக் கொண்டார். அந்தக் குறள் இதோ:
வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின்.
அதிகாரம் - 55 - செங்கோன்மை; பாடல் - 546
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்