பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 24 / 300

அவர்தந்தார் என்னும்

அச்சுப் பக்கம் 6465 · ஸ்கேன் 8182 · அதிகாரம் 119 (பசப்புறுபருவரல்) — குறள் 1182

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour illustration above the prose showing a young woman seated on a bed beside a large mirror, resting her face in her hands.

காதலர் பிரிந்து விட்டால் காதலியின் மேனியில் பசலை நிறம் பாய்கிறதாம். ‘பசப்புறு பருவரல்’ என்னும் அதிகாரத்தில் வள்ளுவனார் அந்தப் பசலை நிறத்திற்கு அடிமையான பாவையின் வேதனைகளை மிக அருமையாகச் சித்திரித்திருக்கிறார்.

மஞ்சத்திலே கொஞ்சுமொழிகள் உதிரும்; ஆடல் - பாடல் - ஊடல் - கூடல் - எல்லாமே ஒன்றையொன்று போட்டியிடும். காலையிலே எழுந்து கண்ணாடி

பார்க்கும் தலைவி, கண்ணாடியிலிருப்பதும் தன் உருவம்தான் என்பதை மறந்துவிட்டுத் திடீரென்று, தன் கன்னத்தை மூடிக் கொள்வாள். பிறகுதான் அவளுக்கு நினைவுக்கு வரும், எதிரேயிருப்பது கண்ணாடி - அதிலே தெரிவது தன் உருவம் என்று. யாரும் தன் கன்னத்தைப் பார்த்து விடவில்லையென்ற திருப்தி ஏற்படும் அவளுக்கு. ஒவ்வொரு நாளும் காலையிலே இப்படி ஒரு நிகழ்ச்சியைச் சமாளித்துத் தீர வேண்டியிருக்கிறது என்று தெரிந்தும்கூட, இரவு நேரத்திலே அவள் அதைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொள்வதில்லை; முன்னெச்சரிக்கையாக இருப்பதுமில்லை. அதனால் கன்னத்தில் பசலைநிறம் பாய்ந்த ஒரு வட்டம் உதயமாகி விடுகிறது. யாராவது பார்த்து விடுவார்களோ என்ற வெட்கம் இருந்தாலும்கூட, மெல்லிய விரல்களால் தடவிப்பார்த்து ஏதோ ஒரு நடந்துபோன நிகழ்ச்சியை எண்ணி அவளாகவே சிரித்துக் கொள்கிறாள். காதலன் போனதும், கண்ணாடியில் தோன்றும் முத்திரை அவள் கண்ணுக்கு விருந்தாட்டிக் கருத்துக்கும் இனிமை சேர்க்கிறது.

இவளைப் போலவே ஓர் எழிலரசியைப் பேச வைக்கிறார் திருக்குறளார். காதலன் பிரிந்து விட்டான், காதலியிடம் விடைபெற்று! நிலவு போனதும் வானத்துக்கு இருள் நிறம் வருகிறதே, அது போலவே இந்த நேரிழையாளுக்கும் பசலை நிறம் மேனியில் பரவி விடுகிறதாம். இந்தப் பசலை தன் உடலில் ஏற்படுவதை அவள் காண்கிறாள். காதலரின் பிரிவால் அல்லவா இந்நிறம் ஏற்பட்டது என வருந்துகிறாள். அதே சமயம் அந்த வேதனையிலும் அவளுக்கோ பெருமிதம் ஏற்படுகிறது.

கன்னத்தில் அடையாளம் பெற்ற காரிகை, வெட்கத்தால் வேதனையுற்றாலும், அது தன் காதலன் தந்த அடையாளம் என எண்ணி மகிழ்கிறாளே; அதுபோலவே இவளும் பிரிவுத் துயரால் ‘என் உடலில் பரவும் இந்த நிறம், என் காதலரால் ஏற்பட்டது’ என எண்ணுவது பெருமைக்கு உரியது என்கிறாள்.

அந்தக் குறள் இது:

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென் மேனிமேல் ஊரும் பசப்பு.

அதிகாரம் - 119 - பசப்புறுபருவரல்; பாடல் - 1182

காப்பக விவரிப்பு: Small printed Thiruvalluvar statue motif below the Kural/citation block.

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்