பொருளடக்கம் 23 / 300
இழத்தொறூஉம் காதலிக்கும்
அச்சுப் பக்கம் 62–63 · ஸ்கேன் 79–80 · அதிகாரம் 94 (சூது) — குறள் 940
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Large colour illustration above the prose showing an elderly, visibly ill man lying on a black-and-white patterned mat, with medicine bottles/cup at one side, a walking stick and rectangular game pieces nearby.
இளமை குன்றுகிறது; கட்டுடல் கரைகிறது; பிறைநிலவெனப் புகழப்பட்ட நெற்றிக்கு மேலே முழுநிலவின் வெண்ணிறம் தாங்கிய தலைமுடி தோன்றுகிறது. ஆடியிற் பார்த்துப் பார்த்துக் களித்த அழகிய முகத்தில், கோடி கோடி ரேகைகள் முதுமைக் கணக்கை எழுதிக் காட்டுகின்றன. வேங்கைபோல் எடுத்துவைத்த ஒவ்வொரு அடியும் வீங்கி வெடித்துக் கிடக்கின்றன. வீணையை மீட்டி இசையமுதம் பொழிந்த விரல்களோ, இப்போது மீட்டப்பட்ட வீணையின் கம்பிகளைப்போல அதிர்ந்து கொண்டிருக்கின்றன! ஈளை, இருமல், தொண்டை வறட்சி போக்க ஒரு குவளைத் தண்ணீர்! இயற்கைக் கடமைகளை ஆற்றக்கூட எழுந்து செல்லமுடியாத
நிலைமை! அவையனைத்தும் பாயுடனும் படுக்கையுடனும்தான்! வலிவு இருந்த வரையில் ஒளிந்து கொண்டிருந்துவிட்டு, இளைக்கட்டும் ஒரு கை பார்க்கலாம் என்று நோய்நொடிகள் ஒன்றுகூடி முற்றுகையிட்டுக் கொத்தளத்தில் கொடிபோட்டு விடுகின்றன.
இவ்வளவுக்குப் பிறகும் “சாவே! வா!” என்று அழைத்திட அந்த உயிருக்குத் துணிவில்லை!
எப்படியாவது பிழைத்துக் கொள்ள வேண்டும், மருத்துவர்களின் திறமையினால்; மருந்து - மூலிகைகளின் சக்தியினால்; மீண்டும் புது வலிவு பெற்று வாழவேண்டும்; உலகின் இன்பங்களையெல்லாம் இதுவரை அள்ளிப் பருகியது போதாது - இன்னும் பருகித் திளைத்திட வேண்டும் என்றுதான் உலக வாழ்வின்மீது தீராக் காதல் கொண்டு தவிக்குமாம் சில உயிர்கள்.
அப்படி எண்ணி ஏங்கித் துடிக்கும் அந்த உயிர்களுக்கு உவமை தேடி அலைகிறார், வள்ளுவர்.
இறுதியாக அவருக்கு உவமை கிடைக்கிறது! எங்கே தெரியுமா? சூதாடும் இடத்தில்!
சூதாடுபவர்களில் சிலர், கைப்பொருளை வைத்து இழக்கின்றனர்! தோல்விமேல் தோல்வி. ஆனால் அவர்களுக்கு ஒரு நம்பிக்கை; தொடர்ந்து சூதினை ஆடிக்கொண்டேயிருந்தால் இழந்த பொருளை மீட்டுவிடலாம் என்று!
பொருளை இழக்க இழக்க - அந்தச் சூதின் மேலேயே அவர்களுக்கு நாட்டம் செல்கிறது. இவர்கள் ஒரு வகையினர்!
உடல் நோயினால் சோர்ந்து துன்புற்று வலுவினை இழக்க இழக்க - உயிரை மட்டுமே மிச்சமாகக் கொண்டிருப்பவருக்கு அந்த உடல்மீதே மேலும் மேலும் அடங்காத ஆசை ஏற்படுகிறது. இவர்கள் ஒரு வகையினர்!
இந்த இரு வகையினரையும் உவமை காட்டிக் குறள் எழுதிய அந்தப் பெருந்தகையின் அறிவாற்றலை எப்படித்தான் புகழுவது.
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர்
அதிகாரம் - 94 - சூது; பாடல் - 940
உழத்தொறூஉம் = நுகரும் போதெல்லாம் காதற்று = காதலை யுடையது
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்