பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 22 / 300

ஒஒ இனிதே

அச்சுப் பக்கம் 6161 · ஸ்கேன் 7878 · அதிகாரம் 118 (கண்விதுப்பழிதல்) — குறள் 1176

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour illustration above the prose showing a pair of tearful eyes, with a reclining woman integrated into the lower-left portion of the image.

வெள்ளி மணல் படுக்கையிலே அந்தப் புள்ளி மயில் படுத்திருந்தாள். அந்தச் சயனத்துச் சாயலைத் தூர இருந்து காண்கிறான் அவன். அந்த அழகுமிழும் காட்சியால் உள்ளத்தில் வெல்லப்பாகு தடவிய அவன் கண்களை வாழ்த்துகிறான்; பாராட்டுகிறான்.

குளிர் மொண்டுவரும் தென்றலிலே கதகதப்பு உணர்ச்சி கலந்து வருவதாக அறிகிறான். சிறிது நேரம் சிலையானான். உணர்வு வந்தபின் அசைந்தான். அப்போது அந்த நிலாப் பதுமையைக் காணவில்லை. அவள் போய் விட்டாள்.

அவன் நெஞ்சு துடித்துக் கனத்துவிட்டது. ‘ஐயோ! ஏன் இந்த அழகியைப் பார்த்தோம்! பார்க்காமலிருந்தால் இப்படிப் பதைக்கவேண்டிய அவசியமே வந்திருக்காதே’ என்று புலம்பினான்.

வேதனையை உண்டாக்கிய தன் கண்களை வசைபொழிந்து கண்டித்தான்; வீடு சென்றான். தூக்கம் வரவில்லை. அவளை நினைத்து நினைத்து அழுதான். அப்போது அவனுக்கு ஓர் ஆறுதல் ஏற்பட்டது.

“சும்மா இருந்த என்னைச் சுந்தரியின் நினைவால் வாட்டச்செய்யும் நோயை உண்டாக்கிய ஏ, கண்களே! நீங்கள் தூக்கம் வராமல் அழுகிறீர்களே... அது எனக்கு மிக மகிழ்ச்சி. ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பதற்கேற்ப தண்டனையை நன்றாக அனுபவியுங்கள்” என்று முணுமுணுத்தான். அந்த முணுமுணுப்பை முத்தமிழ் வள்ளுவர் குறளாய் எப்படி அமைத்திருக்கிறார், படியுங்கள்.

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண் தாஅம் இதற்பட் டது.

அதிகாரம் - 118 - கண்விதுப்பழிதல்; பாடல் - 1176

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்