பொருளடக்கம் 21 / 300
அல்லற்பட்டு ஆற்றாது
அச்சுப் பக்கம் 59–60 · ஸ்கேன் 76–77 · அதிகாரம் 56 (கொடுங்கோன்மை) — குறள் 555
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Large colour illustration above the prose showing a crowd of men in agitation/rising action, directly introducing the oppressive-rule vignette.
உலைக்கூடத்திலே கொட்டப்பட்ட புழுக்களின் கூட்டமெனத் துடித்தனர் குடிமக்கள். ஆட்சியின் பேயாட்டத்தை அவர்களால் தாங்கிட முடியவில்லை. “அய்யோ தாங்க முடியவில்லையே” என்று கதறிடவும் அவர்களுக்கு உரிமையில்லை. வாய்களுக்குப் பூட்டு! கைகளுக்கோ விலங்கு! சிறைச்சாலையின் வாயிற்குள் பட, தண்டனைகளின் பசி, நாள்தோறும் நாட்டு மக்களுக்கு மேல் திணிக்கப்பட்டது. வரிக் கொடுமை, ஏழைகளின் முதுகெலும்பை உடைத்து நொறுக்கியது. வறுமையின் ஊழிக்கூத்தோ தாண்டவமானதாக இருந்தது. “பசிக்குதே” என்று குரல் எழுப்பினால், பசிக்காத இடத்திற்கு அந்தப் பஞ்சைகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
நாடு முழுவதும் அமைதியை ஏற்படுத்துகிறோம் என்ற பெயரால் இருட்டு அமைதியை அரசு உருவாக்கியது. கட்டுப்பாட்டினைக் கண் எனப்போற்றுகிறோம் எனக் கூறிக்கொண்டே குடிமக்கள்மீது அடக்குமுறைகளின் வாயிலாகக் கட்டுப்பாட்டுத் திட்டமும் அடிமைத்தனத்தைத் திணித்தது. “இம்” என்றால் சிறைவாசம், “ஏன்?” என்றால் வனவாசம் என்று கூறுவதுண்டல்லவா. அந்த ஆட்சியில் “இம்” என்று சொல்லாமலிருந்தால்கூடச் சிறைவாசம்தான்; “ஏன்” என்று கேட்டாமலிருந்தால்கூட “வனவாசம்”தான்! கருத்து மாறுபாடு கொண்டோர் கழுவில் ஏற்றப்படுவதும் அறிவுரை கூறுவோர் வழக்கு மன்றத்தில் நிறுத்தப்பட்டு வஞ்சம் தீர்க்கப்படுவதும் அந்த அரசின் பொழுதுபோக்கு விளையாட்டுக்களாக விளங்கின.
அந்தக் கொடுமைபுரியில் செங்கோல் செலுத்தப்படவில்லை; செந்தணலே கோலோச்சியது; செக்குமாடென மக்கள் கூட்டம் சீரழிந்து கொண்டிருந்தது; சிந்தனையாளர்கள் சிற்றெறும்புகள் போல் நசுக்கப்பட்டனர். நிந்தனையாளர்களோ அந்த நேர்மையற்ற ஆட்சியில் நித்தமொரு விருந்து பெற்றுக் கொண்டிருந்தனர்.
சிரச்சேதம் செய்யப்பட வேண்டுமென்று சிறையில் தள்ளப்பட்டிருந்த ஒரு சிங்க இளைஞன், ஒருநாள் சிறையிலிருந்து தப்பியோடி நாட்டைவிட்டு வெளியேறினான்; வள்ளுவர் வாழுமிடம் சென்றான்.
“பெருந்தகையீர்! எம் நாட்டில் எரிதழலுக்குத் தண்ணீர் என்று பெயர்! காட்டாட்சி முறைக்கு நாட்டாட்சி என்று பெயர்! மாற்றியமைத்திட, மக்களைக் காப்பாற்றிட, மார்க்கமொன்று கூறிடுக!” எனக் கதறினான். அந்த இளைஞனின் குரல், வள்ளுவர் கோட்டத்தில் எதிரொலித்து முழங்கியது. அதற்குள் அவனைப் பின் தொடர்ந்து துரத்திவந்த சிறைக்காவலர்கள், அவனைப் பிடித்து விலங்கிட்டனர். வள்ளுவர், அந்த நிகழ்ச்சியை அமைதியோடு பார்த்துக் கொண்டு நின்றார். விலங்கிடப்பட்ட இளைஞனைத் தேர்க்காலில் கட்டி, அந்தத் தேரை வேகமாகச் செலுத்தித் தம் நாடு நோக்கிச் சென்றனர். வள்ளுவரும் அவர்களைத் தொடர்ந்தார். கொடுமை நடனமாடும் அந்த மண்ணுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட அந்த இளைஞனை அவர் தேடினார். நடுவீதியில் கழுமரத்தில் அவனை ஏற்றுவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆயிரமாயிரம் மக்கள், அந்தக் காட்சி காண அழைத்து வரப்பட்டிருந்தனர். அப்போதுதானே அவர்கள் அரசுக்கு அஞ்சியொடுங்கி ஆமைகளாகக் கிடப்பர்! அப்படி அச்சுறுத்துவதற்காக அந்த மக்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இளைஞர் கழுவில் ஏற்றப்படுவதற்கு முன், காவலர்கள் தடுத்தும் பணியாமல் அந்த மக்களைப் பார்த்துக் கேள்விக்கணைகளைத் தொடுத்திட்டான்.
அந்த வினாக்கள், நாட்டில் நடைபெறும் வேதனைகளைச் சித்திரித்துக் காட்டின. தாலியிழந்த மங்கையரின் தவிப்பு; தாயை இழந்த குழந்தைகளின் ஓலம்; மகனை இழந்த மாதாக்களின் புலம்பல். இந்தத் துன்ப கீதத்தை அவனது காய்ந்துபோன உதடுகள் இசைத்தன! வெள்ளமெனத் திரண்டிருந்த மக்களின் விழிநீர் கண்டான், அந்த வீர இளைஞன்! “ஆகா! இந்தக் கண்ணீரன்றோ, கொடுங்கோலை முறிக்கும் படைக்கலன்! இன்னும் என் காலதாமதம்? இரு விழி கொட்டும் நீர், உமது இதயமிருந்து கிளம்பிய செந்நீர் அல்லவா! இந்தக் கண்ணீரின் வலிமை காட்டப் புறப்படுவீர்!” இப்படிப் போர்ப்பாட்டுப் பாடினான். அந்த மக்கள் கடல் கொந்தளித்தது. அணையுடைத்து எழும் நீத்தம் என மாறியது. கழு மரம் நொறுக்கப்பட்டது. இளைஞனின் கைவிலங்கு உடைக்கப்பட்டது. அரசின் படை வரிசை ஓட்டமெடுத்தது. அந்தக் கண்ணீர்த் துளிகள், கோட்டைக்குள்ளும் புகுந்தன. அதற்கு முன்பே அங்கிருந்த அரச வம்சம் எங்கோ ஓடித் தப்பித்துக் கொண்டது. அதோ! அதோ! ஓடுகிறார்கள் அரச வம்சத்தினர்! அவர்கள் நாடிழந்து, நகரிழந்து, வளமிழந்து, வற்றாத செல்வமிழந்து ஓடுகின்ற காட்சியினை வள்ளுவர் காண்கிறார். கழுமரத்தருகே இளைஞன் குரல் கேட்டு எழுச்சி முரசு கொட்டிய மக்களையும் அவர் கண்டவரல்லவா? அந்த மக்களின் கண்ணீருக்குள்ள வல்லமையை வியக்கிறார். ஆனை, சேனை, ஆயிரம் வசதிகளுடன் அரண்மனை வாழ்வு நடத்தியோர் அரை நொடியில் அனைத்துச் செல்வமும் இழந்த நிலையை அவர் எண்ணிப் பார்க்கிறார். இளைஞனின் குரலே, இன்பத் தமிழ்க் குரலாக, எழுச்சியூட்டும் குரலாக, நம்பிக்கையூட்டும் உரையாக அமைகிறது. அது, இது!
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை
அதிகாரம் - 56 - கொடுங்கோன்மை; பாடல் - 555
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்