பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 20 / 300

அற்றார் அழிபசி

அச்சுப் பக்கம் 5758 · ஸ்கேன் 7475 · அதிகாரம் 23 (ஈகை) — குறள் 226

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour illustration above the prose showing women, children and a man gathered around a fruit basket, with food-serving imagery in the background.

நெருங்கிய உறவினர் ஒருவருடைய மகளுக்குத் திருமணம் நிகழவிருந்தது. ஊரோ நெடுந்தொலைவு. அதற்காக அங்கே போகாமலும் இருக்க முடியாது.

எனவே, மனைவி மக்களுடன் மணவிழாவில் கலந்து கொள்ளக் கிளம்பினான் அவன். இடையிலே குறுக்கிட்டது இரவு. அதனால் பாதிப் பயணத்திலேயே ஓர் ஊரில் படுத்துவிட்டுத்தான் போகவேண்டும் என்ற நிலை.

அங்கே பயணிகள் தங்கிச் செல்லக்கூடிய பழங்காலச் சத்திரம் ஒன்று இருந்தது. அதிலே குடும்பத்துடன் அவன் படுத்துறங்கினான். நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கினான். பயணக் களைப்பு; அதனால் ஆழ்ந்த உறக்கம். விடிந்து வெகுநேரம் கழித்தே அவனுடைய குடும்பம் விழித்தது.

முதலில் கண்ணைத் திறந்த அவன் மனைவி, “என்னங்க இது! மூட்டை, முடிச்சுக்களையெல்லாம் காணோம்!” என்று பதறிப்போய்க் குரல் கொடுத்தாள்.

“அய்யோ! என் காசுப்பையையும் காணோமே?” என்று அவனும் அலறினான்.

கட்டுச்சோற்று மூட்டை, காசுப்பை எல்லாமே களவு போய்விட்டன. அந்தக் குடும்பமே கதறித் துடிக்காமல் என்ன செய்வது? உதவிக்கு வரக்கூடியவர்களும் அங்கே இருப்பதும் தெரியவில்லை.

இனி, எப்படிப் பயணத்தைத் தொடர்வது? பசியை ஆற்றிக்கொள்வது? என்பதே விடை காண முடியாத சிக்கலாகிவிட்டது. வேதனை வெள்ளம் அவர்களை விழுங்கித் திணறச் செய்தது.

குழந்தைகளோ, “பசிக்குதே! பசிக்குதே!” என்று கூச்சலிட்டுக் குரல் எழுப்பிச் சோற்றுக்கு வழி செய்யுமாறு கெஞ்சினர்.

இப்படியொரு புயல் வீசும் என்று குடும்பத் தலைவன் எதிர்பார்க்கவே இல்லை. அச்சமயம் கயல் வீச்சுக் கண்ணழகி ஒருத்தி, கையிலே பழத்தட்டை ஏந்தி விலை கூறி வந்தாள் அந்தப் பக்கம்.

அந்தக் குடும்பத்தினரைப் பார்த்ததும் “அம்மா நீங்களா? எங்கே இவ்வளவு தூரம் வந்தீர்கள்? எதற்காகக் குழந்தைகள் அழுகிறார்கள்?” என்று வியப்பு மேலிட வினவினாள்.

குடும்பத் தலைவி, தங்களுக்கு ஏற்பட்ட கொடிய சோதனை பற்றி எடுத்துக் கூறினாள். அதனைக் கேட்டதும் பாகாக உருகிப்போனாள் பழத்தட்டுக்காரி. தன் தட்டிலிருந்த பழங்களையெல்லாம் குழந்தைகளுக்கு வழங்கினாள். அத்துடன் அவள் விடவில்லை. “நீங்கள் ஒன்றும் தப்பாக நினைக்காமல் என் வீடு வரை வர வேண்டும். பானையிலே இருக்கின்ற கஞ்சியைப் பகிர்ந்து குடித்துவிட்டு நீங்கள் பயணத்தைத் தொடரலாம். என்னிடம் கொஞ்சம் காசு இருக்கிறது; அதையும் நீங்கள் வழிச் செலவுக்கு வாங்கிச் செல்லலாம்.”

அவளுடைய அன்பான சொற்களைக் குடும்பத் தலைவனால் நம்பவே முடியவில்லை. அவனுடைய திகைப்பைத் தெளிவிப்பவளாக அவள் மேலும் இப்படித் தொடர்ந்தாள்:

“இவள் எதற்காக நமக்கு உதவி செய்ய ஓடிவர வேண்டும் என நினைக்கிறீர்களா? ஆனால், என்னை யாரென்று அறியாமலே உங்கள் மனைவி செய்த உதவிக்கு இது தினையளவுகூட ஈடாகாது. உங்களைப் போலத்தான் எனக்கும் ஒரு நிலைமை ஏற்பட்டது. ஒரு முறை தீயவர்களிடமிருந்து தப்பியவளாக உங்கள் ஊரிலே வந்து அடைக்கலம் புகுந்தேன். அப்போது பட்டினியால் நான் படாத பாடுபட்டேன். தெருத் தெருவாக அலைந்தும் ஒரு கவளம் சோற்றுக்கும் வழியில்லாது துவண்டுவிட்ட நிலையில், இந்த அம்மாதான் என் பசியை ஆற்றினார்கள். உயிருள்ளவரை அந்த நன்றியை நான் மறக்கலாமா?”

-விழிகள் நீரில் மிதக்கப் பழத்தட்டுக்காரி இவ்வாறு கூறிவிட்டு, அவர்களைப் பிடிவாதமாகத் தன் இல்லத்துக்கு இட்டுச் சென்றாள்.

சாலையில் செல்லும்போது தன் கோவலனிடம் அவள் கூறினாள்:

“வள்ளுவர் வாக்கு அப்படியே பலிக்கிறது, பார்த்தாயா? பட்டினி என்று சொல்லி வந்தவர்களின் பசியை ஆற்றுவது என்றுமே வீண் போகாது. அதுவே, தான் பெற்ற ஒரு பொருளைப் பிறகாலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக் கூடிய கருவூலம் ஆகும் என்கிறார் அவர். ஈகைப் பண்புக்குள்ள வியக்கத்தக்க சிறப்பைப் பார்த்தாயா?”

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி.

அதிகாரம் - 23 - ஈகை; பாடல் - 226

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்