பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 19 / 300

அவையறியார் சொல்லல்மேற்

அச்சுப் பக்கம் 5556 · ஸ்கேன் 7273 · அதிகாரம் 72 (அவை அறிதல்) — குறள் 713

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour illustration above the prose showing a bound young man/captive in the presence of armed or royal figures, with an elderly observer at left.

வழிப்பறிக் கொள்ளையடித்துக் கொலைகள் செய்து காடுகளில் திரிந்து கொண்டிருந்த இரட்சன், இராமாயணம் பாடும் வால்மீகியாக ஆனான் என்று அவனது வாழ்க்கைத் திருப்பத்தை வியந்து பாராட்டுவோர் உண்டு; கண்டிருக்கிறோம். இதோ ஒரு வீரன்; இளைய தலைமுறையின் விடிவெள்ளியாக விளங்குகிறான். விடுதலைக் கனலாக ஒளி பொழிகிறான். ஆனால், இப்போது அவன் சிறைப் பறவை! விரைவில் அந்தச் சுதந்திரப் பறவையின் உயிரைக் குடிக்க மரணமேடை தயாராகிக் கொண்டிருக்கிறது.

எதிரிகளின் நாட்டில் போய்ச் சிக்கிக் கொண்டான். பகைவனின் கோட்டைக்குள்ளேயே பாசறை அமைக்கவேண்டும் என்பதற்காகவே, அவன் அந்தக் கோட்டைக்குள் போகத் துடித்தான். தொலைவில் இருந்தே அணியினைத் திரட்டுவோம் என்ற கருத்துக்கள் சொல்லப்பட்டபோது, அவற்றையெல்லாம் புறக்கணித்துத் தன்னை எதிரியின் கோட்டைக்குள்ளேயே அனுப்பிவைக்க வேண்டுமென்று அவனது தோழர்களைக் கேட்டுக் கொண்டான். அவன் விருப்பம்போல் அனுப்பி வைக்கப்பட்டான்.

எட்டாண்டுக் காலம் தனது உற்ற தளபதிகளுடன் ஒத்துழைத்து ஓயாது பணியாற்றிப் பெரும்படை திரட்டிப் பகைக் கோட்டையைக் கைப்பற்றத் தயாரானபோது திடீரெனப் பிடிபட்டான். பகைவர்க்குக் கொண்டாட்டம்; அவன்மீது பொய்ப்பழி சுமத்தி மரணதண்டனை விதித்தனர். அந்தத் தீர்ப்புக் கேட்டு அவன் புன்னகை புரிந்தான்; தித்திப்பான செய்தி என்றான்; செவிகளில் தேன் பாய்கிறது என்றான்.

ஆனால், அவனது இனத்தார் அவன் அநியாயமாகப் பலியாவதை விரும்பவில்லை. விழிகளில் நீர் வழிந்தோடப் பேரவையொன்றினைக் கூட்டினர். அவன் உயிர் பிழைத்து மீள வேண்டுமென உண்மையாக எண்ணியவர்கள் எல்லாம், அவன் ஏன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதையும் - அவன்மீது வேண்டுமென்றே குற்றம் கற்பிக்கப்பட்டுத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது என்பதனையும் எடுத்து விளக்கி - எதிரி நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்தனர். அந்த அவைக்கூட்டத்தில் பொறுப்புமிக்கவர்கள் எனக் கருதப்படுபவர்களில் ஒருவர், அந்த விடுதலை வீரனுக்குப் பரிவு காட்டிப் பேச எழுந்தார்.

“அவன் யார் தெரியுமா?” எனக் கேட்டு அதற்கு அவரே விடையும் அளித்தார்.

“அந்த வீரன், பத்தாண்டுகளுக்கு முன்பு பராரியாகத் திரிந்தவன்; கடற்கொள்ளையடித்தவன்; மிகவும் முரட்டுப்பண்பு கொண்டவன்”

இப்படி அவர் விவரித்துக் கொண்டே போனார்!

“அவர் சொன்னது உண்மையாகவே இருந்தாலும்கூட, இப்போது அவன் அந்தப் பழைய மனிதனல்லவே! பண்பட்ட பாசறைத் தளபதிகளில் ஒருவனன்றோ! இப்போது அவனுக்கு இழுக்குத் தேடுவதோ? அவனது விடுதலையில் காட்டவேண்டிய ஆர்வத்தை விட்டுவிட்டு, அவனது பெருமையைக் குறைப்பதில் அல்லவா அவர் மிகுந்த அக்கறை காட்டுகிறார்!” எனச் சலித்துக் கொண்டனர் அவையிலிருந்தோர்! “எதிரிக்கு இடம் கொடுக்கும் பேச்சு இது!” என வருந்தித் திரும்பினர்.

என் செய்வது? இத்தகையோரை எண்ணித்தான் போலும் வள்ளுவன் அப்போதே திட்டவட்டமாகக் கூறியிருக்கிறான்.

“அவையின் தன்மை அறியாமல் பேசுகின்றவர், சொற்களின் வகை தெரியாதவர் மட்டுமல்ல; சொல்லக்கூடிய நல்ல கருத்துக்களும் இல்லாதவர்.”

அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் வகையறியார் வல்லதூஉம் இல்.

அதிகாரம் - 72 - அவை அறிதல்; பாடல் - 713

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்