பொருளடக்கம் 18 / 300
அ. காணிற் குவளை / ஆ. அனிச்சமும் அன்னத்தின் / இ. கருமணியிற் பாவாய்நீ
அச்சுப் பக்கம் 53–54 · ஸ்கேன் 70–71 · அதிகாரம் 112 (நலம்புனைந்துரைத்தல்) — குறள் 1114, 1120; அதிகாரம் 113 (காதற் சிறப்புரைத்தல்) — குறள் 1123
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Large colour illustration above the prose showing a woman in red walking before a pair of stylised eyes, with white flowers in the lower background.
காணிற் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் மாணிழை கண்ணொவ்வேம் என்று
குவளை மலர்களுக்கு மட்டும் கண்கள் இருக்குமேயானால், அந்தக் கோமளவல்லியின் கண்களைக் கண்டு, “அய்யோ! நாம், அவள் விழிகளைப்போல அவ்வளவு அழகாக இல்லையே!” என்று தலைகவிழ்ந்து பூமியை நோக்குமாம்; அத்தகைய விழியழகி அவள்.
மென்மை நிறைந்த அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடிக் கொண்டாளாம். அந்தக் காம்பின் கனம் தாங்காமல், அவளது இடை நொந்து வருந்தியதாம்.
வானத்து வெள்ளி மீன்கள், திங்களையும் அந்த வடிவழகியின் வதனத்தையும் கண்டு, ‘எது திங்கள்? எது அவள்?’ - எனக் கலங்கித் திரிந்தனவாம்! அன்னப் பறவையின் இறகு அவளது பாதங்களில் படும்போது, நெருஞ்சிப்பழம் தைப்பது போலிருக்குமாம் - அத்தகைய பட்டு ரோஜாப் பாதங்கள் அவளுக்கு!
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்.
அதிகாரம் - 112 - நலம்புனைந்துரைத்தல்; பாடல்கள் - 1114, 1120
அழகின் இலக்கணமாகத் திகழும் அவளைத் தன் கண்களிலேயே குடிவைக்க விரும்புகிறான் ஒரு குமரன். விழிவீட்டில் இருப்பவரை வெளியேற்றி விட்டல்லவா எழிலரசிக்கு இடம்தர வேண்டும்? ஆகவே ‘கண்ணகத்தில் குடிக்கூலிக்கு வசிக்கும் ஆளிடம் போய், “தயவுசெய்து நீ வீட்டைக் காலி செய்துவிடு” என்று கெஞ்சுகிறான்.
வள்ளுவர் நடையில் அதைக் கேளுங்கள்.
“என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! யான் விரும்புகின்ற இந்த அழகிக்கு என் கண்ணில் இருக்க இடமில்லை - ஆகவே நீ வெளியேறிவிடு!”
பார்வை தரும் பாவையைப் போகச் சொல்லிவிட்டு, முத்துக்கோவை தரும் பாவைக்குக் கண்ணில் இடமளிக்க விரும்புகிறான். அதற்குக் குறள்:
கருமணியிற் பாவாய்நீ போதாய் யாம்வீழும் திருநுதற்கு இல்லை இடம்.
அதிகாரம் - 113 - காதற் சிறப்புரைத்தல்; பாடல் - 1123
காப்பக விவரிப்பு: Small decorative chariot/monument illustration centred in the lower half beneath the second Kural citation.
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்