பொருளடக்கம் 17 / 300
பழுதெண்ணும் மந்திரியின்
அச்சுப் பக்கம் 51–52 · ஸ்கேன் 68–69 · அதிகாரம் 64 (அமைச்சு) — குறள் 639
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Large colour illustration above the prose showing three court figures in close discussion.
“அமைச்சரே! நமது எல்லைக் கோட்டையில், கொள்ளைக்காரர்களைப் போல புகுந்து கொடிமரத்தை வெட்டியெறிந்தும், எல்லைக் காவலர்களைக் கவர்ந்து சென்றும், நமது நாட்டுக் கலாசாரத்தின் அடையாளமாக விளங்கிக் கொண்டிருந்த சிற்பக்கூடத்தை நாசம் செய்தும், நம்மைப் பெரும் அவமானத்திற்கு ஆளாக்கிவிட்ட பகை மன்னன் படைகொண்டு வரப்போகிறானாம், நமது நாட்டையும் கைப்பற்றி ஆள்வதற்கு! இதோ வந்திருக்கிறது ஓலை! இதுபற்றி நாம் எடுக்கவேண்டிய முடிவுபற்றி உடனடியாக உமது கருத்தைக் கூறுக!”
அரசனின் ஆலோசனை மண்டபத்தில், இப்படியொரு பணியை அமைச்சருக்கு அளித்தான் மன்னவன். அமைச்சர், மௌனமாகக் காட்சி தந்தார். அவரது சிந்தனை நீண்டு கொண்டிருப்பதைக் கண்ட தளபதி, மன்னனை நோக்கிக் கூறினான்.
காப்பக விவரிப்பு: - Handwritten 12800 in the right margin.
- Round library stamp overlapping the lower margin/page furniture; excluded from body transcription.
“அரசே! சித்திரைத் திருநாள் விழாக் கொண்டாடி நமது வீரர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்த வேளையில் இந்த ஆர்ப்பாட்டங்களைப் பகைநாட்டு மன்னன் நடத்தியிருக்கிறான். நமது கொடிக்கம்பத்தை வீழ்த்துவது என்பது தாங்கமுடியாத அவமானம். அவன் மீண்டும் படையெடுத்து வருகிறான் என்றால், இதில் யோசிப்பதற்கு என்ன இருக்கிறது? நமது படைகளைத் திரட்டி அவனை எதிர்கொண்டு தாக்க வேண்டியதுதான். இந்தப் போரில் நாம் அனைவருமே அழிய நேரிட்டாலும் நமது மண்ணின் மானம் காப்பாற்றப்படுமல்லவா?”
தளபதியின் வீர உரைக்கிடையே அமைச்சர் குறுக்கிட்டார்.
“நன்று, நன்று தளபதியாரே! அரசர் அழிவதற்கா யோசனை கேட்கிறார்? அல்ல! அல்ல! நாடும் நாடும் வாழ்வதற்கு! நமது ஆட்சி தொடர்வதற்கல்லவா யோசனை கேட்கிறார்? வீரங் கொப்பளிக்கும் உமது வார்த்தைகளும் செயல்களும் நமது மானத்தைக் காப்பாற்றும். ஆனால், நமது மணிமுடியைக் காப்பாற்றுமா? எனவே, உமது பேச்சை நிறுத்தும். அரசே! நான் கூறும் வழியே சிறந்த வழி. பகை மன்னனுக்குக் கோபமெல்லாம் தங்கள் மீதுதான். அந்தக் கோபத்தைத் தணிக்க ஒரேவழி தாங்கள் முடிதுறந்து விடுவதுதான். முடிதுறந்தால், இந்த ஆட்சிப்பொறுப்பை யார் ஏற்பது என்ற கேள்வி எழும். நியாயமான கேள்விதான். இடைக்கால ஏற்பாடாக நான் வேண்டுமானால் இந்தச் சுமையை என் தோளில் சிரமம் பாராமல் தாங்குகிறேன். இப்படி ஒரு முடிவினை எடுத்தால், பகை மன்னன் நம்முடன் நட்பாக இருக்கவும் தயாராக இருப்பதாகச் சொல்லியனுப்பியுள்ளான்.”
அமைச்சர் பேச்சை முடிக்கவில்லை; தளபதி, தன் இளம் மீசை துடிக்க எழுந்து நின்று, எக்காளக் குரல் எழுப்பினான்.
“மன்னவா! நான் மறைத்து வைத்துள்ள ரகசியத்தை இப்போது சொல்லியே தீரவேண்டும், இந்த நாடு வாழ! நமது அமைச்சர், பகை மன்னனோடு நீண்ட நாள் உறவு கொண்டிருப்பவர். இவரும், அவனும் கூடி வகுத்த திட்டமே நமது கொடிமரத்தின் மீது தாக்குதல். இதோ, இந்த அமைச்சர் பெருமான் பகைவனுக்கு எழுதிய சதிக் கடிதம். நமது ஒற்றர்கள் மூலமாகக் கைப்பற்றப்பட்டுள்ளது. படித்துப் பாருங்கள்!” மடலைப் பார்த்துவிட்டு மன்னன் திகைத்துப் போனான். வியப்புற்றான். வியர்த்துக் கொட்டியது உடலெங்கும்.
“ஆகா! இப்படித் தவறானதும் ஆபத்தானதுமான வழியை எண்ணிக் கூறுகிற அமைச்சரைவிட, எழுபது கோடிப் பகைவர் என் பக்கத்திலே இருந்தாலும் பரவாயில்லை. அந்தப் பகைவர்களால் நன்மையே ஏற்படும். பழுதெண்ணும் மந்திரியை விட அவர்கள் எவ்வளவோ மேலானவர்கள்” என்று கூச்சலிட்டான் மன்னன். அதற்கு இதோ குறள் :
பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும்.
அதிகாரம் - 64 - அமைச்சு; பாடல் - 639
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்