பொருளடக்கம் 16 / 300
பயனில்சொல் பாராட்டு
அச்சுப் பக்கம் 49–50 · ஸ்கேன் 66–67 · அதிகாரம் 20 (பயனில சொல்லாமை) — குறள் 196
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காப்பக விவரிப்பு: Large colour illustration above the prose showing women working with grain in an agricultural field, with a seated man and another worker nearby.
வயலோரத்துக் களத்தில் வசந்தப் புறவைகள்போல அந்த உழவர் குலத்துப் பெண்கள், காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்ற மொழிக்கேற்ப, முறங்களைக் கைகளில் ஏந்தி நெல்மணிகளைத் தூற்றிக் கொண்டிருந்தனர். நல்ல நெல்மணிகள் குவியல் குவியல்களாக உயர்ந்தன. பதர்களும் வேறு பகுதியில் சேர்ந்தன. களத்துமேட்டு வேலை சுறுசுறுப்புடன் நடைபெறுவதைக் கவனித்தவாறு ஒரு கருங்கல் மேட்டின்மீது அமர்ந்திருந்தார் கழனிக்குரியவர். கார்மேகம் அவரது பெயர். தனது பண்ணையில் உழைத்திடும் பெண்களைத் தன் மகள்களைப் போலக் கருதுபவர். அவர்தம் பணி முடிந்ததும் அவர்களுக்கான ஊதியத்தை நெல்மணிகளாகவே மரக்காலில் அளந்து கொடுக்கத் தொடங்கினார்.
“இன்றைக்குத் தூற்றியதில் பதர் குறைவுதான்” என்றவாறு புன்னகை ததும்ப ஒரு பெண் - பெயர் பூவழகி - தன் கைகளில் அள்ளியிருந்த பதரைக் கார்மேகத்திடம் காட்டினாள். அவரும் மகிழ்ச்சி தெரிவித்துக்கொண்டே அவளைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்!
“அம்மா! பூவழகி! தானியங்களில் பதரை எளிதாகக் கண்டுபிடித்து ஒதுக்கி விடுகிறோம். ஆனால், மக்களுக்கிடையிலும் பதர்கள் இருக்கிறார்களே, அவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது?”
பூவழகி மட்டுமல்ல - அவளுடன் சேர்ந்து வேலை பார்த்த எல்லாப் பெண்களுமே திகைத்து நின்றனர். அப்போது கார்மேகத்தின் மருமகன் கண்ணாயிரம் என்பான் அங்கே வந்தான். அவனைக் கண்டதும் பெண்கள் ஓரமாக ஒதுங்கிக் கொண்டனர்.
“என்ன; சிட்டுக்குருவிகள் - என்ன சொல்கின்றன? எனது மாமனாருக்கு வாய்ப்பு என்றால் வாய்ப்புதான்! எப்போதும் இளம் புறாக்கள் சூழ - அடடா! இந்தக் களத்து மேட்டில் ஒரே கலியாட்டம்தான்!”
கண்ணாயிரம் இப்படிச் சொன்னதும், கார்மேகம் வெகுண்டார்!
“ஏய்! இப்படியெல்லாம் பேசாதே! எல்லோரும் நான் பெற்ற பெண்களைப் போல!”
கண்ணாயிரம் அதைக் கேட்டு உரக்கச் சிரித்தான்.
“என்ன மாமனாரே; உலகம் தெரியாமல் பேசுகிறீர்கள்! இவர்களில் நீங்கள் யாரைத் தொட்டாலும் துவளுவார்கள்! என்ன கிள்ளைகளா! நான் சொல்வது சரிதானே?”
அதுவரையில் பொறுமையாக நின்றிருந்த அந்த மகளிர் கூட்டத்திலிருந்து பூவழகி புயல்போலப் புறப்பட்டுக் கார்மேகத்தின் எதிர்வந்து நின்றாள்.
“அய்யா! மக்களில் பதர்களை எப்படிக் கண்டுபிடிப்பது என்று கேட்டீர்களே! அதற்கு அலையத் தேவையில்லை - இதோ இந்த உருவம்தான் மக்களில் பதர்!”
என்று சீற்றம் பொங்கச் சத்தமிட்டாள்!
“ஆம்; பூவழகி! பயனில்லாத சொற்களையே சொல்லிக் கொண்டிருக்கிற ஒருவனை மனிதன் என்றே சொல்லக் கூடாது! மனிதர்களில் பதர் என்றுதான் சொல்லவேண்டுமென வள்ளுவரே கூறியிருக்கிறார்!”
என்று கார்மேகம் விளக்கமளித்தார்!
“அடடா! சிட்டுக்குருவியின் பேச்சு, கிழவருக்குத் தினைமாவுப் பிட்டுப் போல் இனிக்கிறது”
என்று கூறிக்கொண்டே கண்ணாயிரம் அங்கிருந்து அகன்றான்; தன்னை “மக்கட் பதடி” என்று நிரூபித்துக் கொண்டு!
பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி யெனல்
அதிகாரம் - 20 - பயனில சொல்லாமை; பாடல் - 196
பதடி = பதர்
மகன் = மனிதன்
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்