பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 15 / 300

நாடொறும் நாடி

அச்சுப் பக்கம் 4748 · ஸ்கேன் 6465 · அதிகாரம் 56 (கொடுங்கோன்மை) — குறள் 553

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour illustration above the prose showing a reclining royal man with a woman beside him and court/regalia objects around the couch.

திருநாட்டை வெற்றிகொள்ளப் பக்கத்து நாட்டுப் பகைவர்கள் போர் தொடுக்காத நேரமே இல்லை என்று கூறலாம். எந்த நேரமும் எதிரிகளின் தாக்குதல் களைச் சந்திக்கத் திருநாடு போர்க்கோலத்துடனேயே காட்சியளித்துக் கொண்டிருந்தது. பிற நாடுகளின் எல்லைக்கோட்டை அழிப்பதிலோ, அந்நாடுகளுக்குரிய சிற்றாற்களில் ஒன்றைக் கவர்வதிலோகூடத் திருநாட்டுக்கு எண்ணம் உதித்ததில்லை. அப்படியிருந்தும்கூடப் பகைவர்களின் மோதல்களை அடிக்கடி சமாளிக்க வேண்டிய தவிர்க்கவொண்ணாத சூழ்நிலை, திருநாட்டுக்கு ஏற்பட்டுக் கொண்டேயிருந்தது.

திருநாட்டின் பயிர் பச்சைகள் அழியும், வகைப்படுத்தப்பட்ட வாய்க்கால்கள் சேதமுறும், எல்லைப்புறத்து அரண்கள் பழுதாகும், போர்வீரர் பலரை பலிகொடுக்க வேண்டியிருக்கும். இவ்வாறு அடிக்கடி மூண்டெழுந்த போரினால், திருநாடு அல்லலுற்றது என்றாலும் அத்தனைப் படையெடுப்புகளுக்குப் பிறகும்கூட அந்நாடு செழுமையாகவே திகழ்ந்தது. பசித்திடும் மக்கள் யாரையும் அங்கு காணமுடியாது. புன்னகை தவழும் மகளிரும் தோள்வலி கொண்ட காளையரும் மகிழ்ந்தாடும் இன்பச் சோலையாகவே இருந்தது திருநாடு!

இளஞ்சிறார்க்கு அறிவாரக் கல்வி கிடைத்தது. உழவர் பெருமக்கள், உவகையுடன் தம் பணியில் ஈடுபட்டனர். வணிகர்கள், கலை பயின்றோர், சிற்பிகள், ஓவியர்கள்

அனைவருமே குறையேதுமின்றி நிறை வாழ்வு நடத்தினர். போர்கள் பலவற்றைச் சந்தித்த நாடு எனினும், ஒரு போராட்டம் முடிந்தவுடன் அந்தப் போரின் வடுக்கள் தெரியாத அளவுக்கு அழிக்கப்பட்டு, மக்களுக்குப் புது வாழ்வு தருகின்ற அரும்பணியினை அந்த அரசு மேற்கொண்டது. எதிரிகளைத் தடுக்கும் கேடயமாகவும் அதே சமயத்தில் குடிமக்களின் துன்ப துயரங்களை வீழ்த்துகின்ற வாளாகவும் திருநாட்டின் அரசு செயல்பட்டது. மக்களின் முறையீடுகளை அவ்வப்போது ஆராய்ந்து உரிய நேரத்தில் அவர்களுக்கு ஆவன செய்து, குறைகளைப் போக்கிடும் அரசாக இருந்த காரணத்தால்தான், எத்தனை படையெடுப்புகளானாலும் அவற்றைத் தாங்கிக்கொண்டு நாடு கெடாமல் பாதுகாத்துக்கொள்ள முடிந்தது.

இதோ இன்னொரு நாடு! இதன் பெயர் வளநாடு. பெயர்தான் வளநாடு, இங்கு நிலத்திலே வளமும் இல்லை, மக்கள் வாழ்விலே இன்பமும் இல்லை. மக்களுக்கென்று வளநாட்டு அரசால் உருவாக்கப்படும் திட்டங்கள் எதுவும் அவர்களுக்குரிய பயனைத் தரவே இல்லை. இத்தனைக்கும் பகைவர்களின் தொல்லை துளிகூட இல்லை வளநாட்டுக்கு! எனினும் வளமிழந்து கிடக்கிறதே! என்ன காரணம்? அகன்றதோர் ஆறு இரு புறமும் கரைபுரண்டு ஓடத்தான் செய்கிறது வள நாட்டில்! நெல், கரும்பு, வாழை, கமுகு எனச் செல்வம் பெருக்கும் வகையில் வளம் நிறைந்த நாடுதான் வளநாடு. ஆனாலுங்கூட அந்த வயல்களும் தோட்டங்களும் வகைப்படுத்தப் பெறாத காரணத்தால் முழுமையான பயன்களை வழங்கிடவில்லை. மக்கள் தமக்குற்ற குறைகளை நாடி வந்து கேட்பதற்கோ, அல்லது அவர்பால் ஓடிவந்து களைவதற்கோ வளநாட்டு அரசுக்கு அக்கறையே எழுந்ததில்லை.

திங்களுக்கொரு படையெடுப்பைத் தடுத்து நிறுத்திடவேண்டிய தொல்லைக்குத் திருநாடு ஈடு கொடுத்ததோடு, மக்களின் குறைகளையும் நாடிச்சென்று அவற்றைப் போக்கிடும் செயலிலும் இடையறாது ஈடுபட்டது.

ஆனால் வளநாட்டு அரசோ, தன் நாட்டில் நிகழும் தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கேற்ற முறைமையைச் செய்யாத அரசாக இருந்து, நாட்டைக் காடாக்கிக்கொண்டு விளங்கியது. ஓர் அரசால் மக்களுக்குப் பயன் விளையாவிட்டால், அந்த அரசு தன் நாட்டின் பகுதிகளை நாள்தோறும் இழந்து வருவதாகத்தான் கூறவேண்டும் - ஆம்; அதைத்தான் வள்ளுவர் அழகுபடச் சொல்லுகிறார்.

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்.

அதிகாரம் - 56 - கொடுங்கோன்மை; பாடல் - 553

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்