பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 14 / 300

அ. தொழிலொடு தோள்நெகிழ / ஆ. நனவினால் நல்கா / இ. கயலுண்கண் யானிரப்ப

அச்சுப் பக்கம் 4546 · ஸ்கேன் 6263 · அதிகாரம் 124 (உறுப்பு நலனழிதல்) — குறள் 1236; அதிகாரம் 122 (கனவு நிலையுரைத்தல்) — குறள் 1213, 1212

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: Large colour illustration above the prose: a tearful woman in the foreground, with stylised eyes and a remembered embracing couple in the upper portion.

கொடி இடையாள் ஒருத்திக்குக் கொடியொரு நோய் நெகிழ்கிறது. ஆம், வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைகின்றன. காதலன் பெருமையே, பிரிந்திருக்கும் வேளையில்தான் தெரிகிறது. நிழலின் அருமையை நிழலில் உணர்வதைவிட வெயிலில்தானே அதிகமாக உணர முடிகிறது. அந்த அருமையை உணரும் நிலைமை அவளுக்கு ஏற்பட்டுவிடுகிறது. பொட்டு வைத்தது, தொட்டு இழுத்தது, கட்டித் தழுவியது, பட்டு நிகர் மேனியெங்கும் இதழ் முத்திரை பதித்தது,

கொஞ்சியது, குலாவியது, அவள் மிஞ்சியது, அவன் கெஞ்சியது - அனைத்தும் நெஞ்சில் நிழலாட, அவள் சோகத்தைப் போர்த்திக் கொண்டு சுருண்டு கிடக்கிறாள்; காதல் உணர்வெனும் வாடைக்காற்று தாக்காமல்! அந்த வேதனையால் உடல் இளைத்துத் தோள் மெலிந்து வளையல்களும் கழன்று விழுகின்றன.

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து.

அவள் மெலிந்து கிடப்பது கண்டு ஊரார் வருந்துகின்றனர்; உறவினர் வாட்டமுறுகின்றனர்; தோழிகளும் அவளின் துன்பத்தில் பங்கு பெறுகின்றனர். எனவே அவர்கள் அனைவரும் அவளுடைய காதலனைக் “கொடியவன்” என்று கூறுகின்றனர். “பிரிவுத்துயர் தாங்காமல் இந்தப் பெண் இப்படி இளைத்துப் போய் விட்டாளே! இந்தத் துயரத்தை இவளுக்கு அளித்த இவள் காதலன் கொடியவனன்றோ!” எனப் பேசுகின்றனர். “அய்யோ! அவளின்றி என் மேனி மெலிந்திடுவது கண்டு அவரைக் கொடியவர் எனக் கூறுகிறார்களே!” என்று அந்தக் கோலமயில் வருந்துகிறாள். அவள் வருத்தம் அத்துடன் முடிவுரையை எழுதிக் கொள்கிறதா? அதுதான் இல்லை!

“என் கண்களே! கயல்கள் என அவரால் புகழப்படும் என் ஆசைக் கண்களே! நான் யாசிப்பது உங்களுக்குப் புரியவில்லையா? அவரை நீங்கள் தேடித் தேடி அலைந்து என்னை, மழையின்றி வயலில் வாடிக் கிடக்கும் பயிராக ஆக்கியது போதும்! தயை செய்து நான் உங்கள்முன் வைக்கும் முறையீட்டைக் கேளுங்கள்! கனவிலாவது என் காதலர் தோன்றுவாரேயானால், அவரிடம், ‘நான் எப்படி உயிரோடிருக்கிறேன்’ என்ற செய்தியைச் சொல்லுவேன். ‘நனவில் வந்து அன்பு காட்டாத அத்தானே! உம்மைக் கனவில் காண்பதால்தான் என் உயிர் இன்னும் நிலைத்திருக்கிறது’ என்று அவருக்குத் தெரிவிப்பேன்.”

நனவினால் நல்கா தவரைக் கனவினால் காண்டலின் உண்டென் உயிர்.

“அந்தக் கனவு வந்தால்தானே, நான் இந்தச் செய்தியையாவது அவருக்குக் கூறமுடியும். அந்தக் கனவும் வராமல் இருப்பதற்கு யார் காரணம்? கண்களே! நீங்கள்தான் காரணம்! நான் வேண்டுவதுபோல நீங்கள் தூங்கிவிடுவீர்களே யானால், அப்போது கனவு வரும்! கனவில் காதலர் வருவார்! நான் உயிரோடிருக்கும் காரணத்தை அவருக்குச் சொல்வேன். எனவேதான் உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன், அருள்கூர்ந்து தூங்கிடுக என்று!”

இப்படிப் புழுவெனத் துடித்திடும் பூங்கோதையைத்தான் ‘உறுப்பு நலன் அழிதல்’ எனும் அதிகாரத்திலும் ‘கனவு நிலை உரைத்தல்’ எனும் அதிகாரத்திலும் வள்ளுவர் நமக்குக் காட்சிப்படுத்துகின்றார்.

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு உயலுண்மை சாற்றுவேன் மன்.

அதிகாரம் - 124 - உறுப்பு நலனழிதல்; பாடல் - 1236

அதிகாரம் - 122 - கனவு நிலையுரைத்தல்; பாடல்கள் - 1213, 1212

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்